அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

அபகரிக்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி

கல்லூரி வரலாறு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் அரை நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றை அபகரிக்க தனிநபர் ஒருவர் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தாமல், அரசு உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் கல்லூரி நிர்வாகம், அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் 1972ஆம் ஆண்டில் அரசு உதவி பெறும் கல்லூரியாகத் தொடங்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது டி. பி. ஜெயின் கல்லூரி. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள ஒரே அரசு உதவி பெறும் கல்லூரி இது மட்டுமே. இதனால் மிகக் குறைந்த கட்டணத்தில் ஏராளமானோர் உயர்கல்வி பெறமுடிந்தது. மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் சமூக நீதியும் பாதுகாக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் சமூக நீதியும் கேள்விக்குறியாகியுள்ளது.   மேலும் பல ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத எந்த ஒரு பணிக்கும் கல்லூரி நிர்வாகம் உரியவர்களை நியமிக்காமல், சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றுபவர்களைக் கொண்டே கல்லூரியை நடத்தி வந்திருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுத்தியதுடன் அதிலும் சமூக நீதியைப் பலி கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். பல ஆண்டுகளாகவே காலிப்பணியிடங்களில் உரியவர்களை நியமிக்காமல் இருந்ததே, அவர்கள் திட்டமிட்டே கல்லூரியை அபகரிப்பதற்கான சான்று ஆகும். அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை மூடும் முயற்சி இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்களைத் திரும்ப ஒப்படைப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் கல்லூரியின் செயலர் ஹரீஷ் L மேத்தா கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தின்மீது இயக்குனர் முடிவெடுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். கல்லூரி செயலர் கொடுத்த விண்ணப்பம், முறைப்படி இல்லாததால் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976-ன் படி முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்படியும் அது குறித்து மூன்று மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. கல்லூரி நிர்வாகம் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த அடிப்படையில் மீண்டும் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த கல்லூரிக் கல்வி இயக்குனர், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும், அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை திரும்ப ஒப்படைப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து பெற்ற நிதி மற்றும் அந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான சான்றுகள் ஆகியவை இல்லாததாலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் அரசு வழங்கிய நிதியுதவி தொடர்பான தணிக்கை நடைபெறாததாலும், கல்லூரி மீதான பஞ்சமி நிலம் அபகரிப்பு, மாணவர் சேர்க்கை முறைகேடுகள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல புகார்கள் நிலுவையில் இருப்பதாலும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளைத் திரும்ப ஒப்படைக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனாலும், கல்லூரி நிர்வாகம் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கு  அரசிடம் ஆணை பெற்றுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பபுவதோடு சுயநிதிப் பிரிவில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. முன்னறிவிப்பில்லாத பணிநீக்கங்கள் இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடும் நடவடிக்கைக்கும் துணைபோக மறுத்த பத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால அவகாசம் எதுவும் கொடுக்காமலும் காரணங்கள் எதுவும் தெரிவிக்காமலும்  கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது. அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் தரப்பு நியாயத்தையும் கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு மனுவாக அளித்ததன் அடிப்படையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால் அந்த ஆணையையும் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் செயலர் ஆகியோர் மதிக்காமல், மூன்று ஆண்டுகளாக வேலை மற்றும்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களைப் பணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டங்கள்   மேலும், கல்லூரியில் நடைபெற்றுவரும் நிதி மற்றும் மாணவர் சேர்க்கை முறைகேடுகள், அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சி, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் மீதான அடக்குமுறை இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகள், ஜெயின் கல்லூரி முன்னாள் இந்நாள் மாணவர்கள், தமிழ்நாடு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக SC/ST ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஏராளமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். பட்டியல் இனத்தவர் மீதான தாக்குதல் இந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்மீது நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தேசிய பட்டியல் வகுப்பினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்துவருகிறது. கூடுதல் கட்டணக் கொள்ளை அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முதல், அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக மாணவர்களிடம் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஒரு வங்கிக் கணக்கிலும் கூடுதல் கட்டணத்தை வேறொரு வங்கிக்கணக்கிலும் பெற்றுள்ள தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் யு.ஜி.சி. வழங்கிய நிதியிலும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதும் புகார்களாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளன.   கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின்  அனுமதி பெறாமலே நிர்வாக அறக்கட்டளையின் பெயரை மாற்றியது, தற்காலிக முதல்வரைக் கொண்டே ஐந்து ஆண்டுக்கும் மேலாகக் கல்லூரி நடத்துவது, அதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரைத் துணை முதல்வராக நியமித்தது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை நிறுத்திவிட்டு சுயநிதிப் பிரிவுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் அதன் செயலர் ஹரீஷ் மேத்தா மீதும் குவிகின்றன. யார் இந்த ஹரீஷ் மேத்தா? கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் கல்லூரியை நிர்வகிக்கும் அறக்கட்டளை உறுப்பினராகவும் கல்லூரி செயலராகவும் இருந்த C.L.மேத்தா என்பவரின் மகனான ஹரீஷ் மேத்தா, தந்தையைத் தொடர்ந்து அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கல்லூரியின் செயலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.   பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் காரணமாக இந்திய உணவுக் கழகம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் உறுப்பினர்  அல்லது தலைவர் பதவிகளையும்  அண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் போன்றவற்றில் சிண்டிகேட் உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளையும் பெற்றுள்ளார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்லூரிப் பணியாளர்கள். தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத இவர், தமிழ்நாடு சமச்சீர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணையின் கீழ் கல்லூரியின் செயலர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த இவர்மீது சி.பி.ஐ.இல் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் அலுவலகச் செயலாளர் அளித்த ஊழல் புகார் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இவர், தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களை வைத்துக்கொண்டு, அவர்களோடு நெருங்கிய நட்பு இருப்பதாகச் சொல்லி கல்லூரியில் பணியாற்றும் அனைவரையும் மிரட்டுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. உடனடித் தேவை அரசின் தலையீடு தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் செயலர் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளை முடக்க நினைக்கும் நிர்வாகத்திடம் இருந்து கல்லூரியை மீட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல டி.பி.ஜெயின் கல்லூரியையும் அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும். மேலும், உடனடியாக இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுடைய குழந்தைகளின் மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு சமூக நீதியை நிலைநாட்டும் முடிவாகவும் இருக்கும். சட்டத்திருத்தம் தேவை ஒருவேளை, இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டால், அதையே பின்பற்றி மற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது என்பதால், இனி வரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அந்த இடங்களைத் திரும்ப ஒப்படைக்கவோ அக்கல்லூரிகளை முழுநேர சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றவோ இயலாதவாறு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

செப்.1 : தமிழ்நாடு முழுவதும் பல மாத இடைவெளிக்குப் பின்னர், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக நாம் எடுத்த முயற்சிகளும் கொடுத்த அழுத்தங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் நம்மீது கோவப்படவும் சிலர் வருந்தவும் செய்தார்கள். ஆனால், அனைத்தும் கடந்து நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தோம். பள்ளிகள் திறக்கப்பட்டதில் மிகச் சிறிய அளவில் நாமும்‌ பங்காற்றியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. மகிழ்வான இந்த வேளையில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் ஹோசிமின் திலகர், தோழர் க.யோகராஜன், பேராசிரியர் ச.மாடசாமி, ஊடகவியலாளர் தோழர் அ. குமரேசன், NORDIC FORUM தலைவர் தோழர் விஜய் அசோகன் ஆகியோரின் பங்களிப்பும் ஆதரவும் நன்றியுடன் நினைவுகூறத்தக்கவை. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீண்டும் நேரடிக் கற்றல் அனுபவத்தைப் பெற்று சிறப்புற அன்புமிக்க வாழ்த்துகள்! சுவடு பதிப்பகம்A3 ஆசிரியர் குழு அரசுக்கு நாம் அனுப்பிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான கடிதத்தை இங்கே வாசிக்கலாம்.

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு

பேரரசுகளின் கல்லறையில்..!

பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்இரத்தம் உறைந்த பூமியில்வாழ்வுக்கும் சாவுக்கும்இடையே போராடுகிறார்கள் அண்டங்களுக்கு அப்பால் சென்றுகுடியிருப்புகளை நிறுவஇருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்முயன்று கொண்டிருக்கையில்,உயிர் தப்ப எண்ணியோர்உயிரே பறக்கும் விமானத்தின்சக்கரங்களிலிருந்து வீழ்வது இருண்ட காலத்திற்குள் அவர்கள்விழுவது போலவே இருக்கிறது பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்பழங்காலத்திலிருந்து பழங்குடிகளேபல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்மாறும் போதெல்லாம்கற்காலத்தில் வாழவேகட்டாயப்படுத்தப்படுகிறார்கள்கொலைக்கருவி ஏந்திமதம் காப்பவர்களால் புதுமையோ புரட்சியோ இல்லாமல்பழமையிலேயே கிடக்கும்பழங்குடிகளின் தேசம்புவிசார் அரசியலில்வளங்களைக் கொள்ளையடிக்கும்வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது ஆதிக்கம் எதுவாயினும்அடிபணியோம் என்பதைதுப்பாக்கி முனையிலும்பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்பெண்கள் சொல்கிறார்கள் ஆதிக்கவாதிகள் எல்லாம்அழிந்து போன பேரரசுகளின் கல்லறையில்புரட்சியின் பூப்பூக்கும் காலம்போர்க்களத்திலும் அமைதி சூழும் ஆக்கம்: பவா சமத்துவன் படங்கள்: இணையத்திலிருந்து

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம். கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்தோண்டியெடுக்கப்பட்டன.நிழலுருவங்கள்இருளின் பூதங்களெனஅகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன. ஒரு நாட்டின் கொடித்துணியைநெய்வதற்குமுன்எத்தனை சவத்துணிகளைநெய்ய வேண்டியிருக்கிறது. களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்துஆயாசமானாள்ஆகஸ்டு ராணி. செய்கூலி சேதாரத்துடன்ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்அணியுமுன்கழுத்தினைக் களவாடியகள்வர்கள். ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன. எட்டப்பன்களின்பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா. இப்போதுவெள்ளையனே வெளியேறு என்றால்சிரித்தபடியே அவன் சொல்கிறான்:“இந்தியனே வெளியேறு.” கவிதை: நா.வே.அருள் படங்கள்: இணையத்திலிருந்து

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள்!

பெரும் பதட்டமும் பரபரப்பும் என்னைச் சூழ்ந்து கொண்டது. இவ்வளவு பிரமாண்டமான ரயில் நிலையத்தில் உயரமான படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நீண்ட பிளாட்பாரங்களில் நடந்து கவுண்ட்டர் கவுண்ட்டராகத் தேடி, தேவையான பதிலைப் பெறுவது பெரும் சங்கடத்தையும் மனச்சோர்வையும் தந்தது. கொல்கத்தா ரயில் நிலையம் நான் நினைத் ததற்கு  மேலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இருக்காதா என்ன? 1911 வரை இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தாதான் இருந்தது. அதற்கேற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த ரயில் நிலையத்தைச் சிறு நகரம் என்று கூடச் சொல்லலாம். உணவகங்கள், சிறு கடைகள், பல்பொருள் அங்காடிகள் எனப் பல தரப்பட்ட கடைகள் எல்லாம் நீண்டுகொண்டே செல்கிறது. இரவு மணி 11:45க்கு அசாம் செல்லும் காமரூபம் எக்ஸ்பிரஸ் வண்டியில் நான் ஏறியிருக்க வேண்டும். இப்போதோ மணி 12:20. 11 மணியிலிருந்து வண்டியைப் பற்றிய விபரத்தைத் தேடி அலைந்து கொண்டே இருந்தேன். பயணிகள் விசாரணை அலுவலகம், கவுண்ட்டர்கள், கடைநிலை ஊழியர்கள், நடைமேடைக் கடை வியாபாரிகள் என்று எவரிடத்திலும் சரியான பதில் கிடைக்கவில்லை. “வரும்… வெயிட் பண்ணுங்க..!” என்பது ஒரு சிலரின் பதிலாக இருந்தது. எப்போது வரும், எந்த நடைமேடையில் நிற்கும், எந்த நேரத்தில் ரயில் கிளம்பும் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. நிலைய நிர்வாகம் முறையாக அறிவுப்பு ஏதும் செய்யவில்லை. அறிவிப்புப் பலகையிலும் இதுகுறித்த தகவல் எதுவ்மில்லை. அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் என எவரிடத்திலும் முறையான பதிலும் இல்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து போனேன். ஆனாலும் ஓரிடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. ரயில் ஏதாவது ஒரு நடைமேடைக்கு வந்து கிளம்பிச் சென்று விட்டால் மொத்த பயணத் திட்டமும் தோல்வியாகி விடும். கால்கள் இருப்புக் கொள்ளாமல் நடந்துகொண்டே இருந்தன. “அண்ணா… தமிழ்நாடா?” திடுக்கிட்டுத், தமிழ் வந்த திசை நோக்கித் திரும்பி பார்த்தேன். நுழைவாயிலுக்கு அடுத்த முதன்மையான பயணிகள் கூடத்தில் கடைகளின் ஓரமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அதிலிருந்த ஒரு இளம்பெண்தான் என்னை நோக்கி கேட்டாள். ஆச்சரியமாக இருந்தது. கடுமையான மன உளைச்சலில் இருந்த எனக்கு தமிழைக் கேட்டது மகிழ்ச்சியையும் தந்தது . “ஆமா… தமிழ்நாடுதான் சென்னையிலிருந்து வர்றேன்..!” சரி எங்க போறீங்க..? “சிலிகுரிக்கு” “சிலிகுரிக்கா..? அங்க என்ன..?” “அங்கிருந்து சிக்கிமுக்கு.. கேங் டாக்.!” “ஓ… டூர் போறீங்களா..? தனியாவா?” கண்களை அகல விரித்துக்கொண்டு அழகான தமிழ் உச்சரிப்புடன் மிகவும் இயல்பாக உரையாடினாள் அந்தப் பெண். அவளது அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்த அண்ணனோ தம்பியோ ஒரு இளைஞனும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தனர் . “ஒரு மணி நேரமா டென்ஷனா அலையறீங்களே.. என்ன பிராப்ளம்..?” “காமரூபம் எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் பதிவு பண்ணி இருந்தேன். வண்டி கிளம்புற நேரம் 11:45 ன்னு டிக்கெட்ல போட்டு இருக்கு. இங்க வண்டியும் இல்ல, வண்டி பத்தின தகவலும் இல்லை. அதான் டென்ஷன்..!” மனப் பதட்டம் குறையாமல் சொல்லி முடித்தேன். “ஓ…இதுதான் பிரசினையா…? இருங்க வரேன்..!” என்று கூறிவிட்டு அவளது அப்பாவிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு வந்தாள். “சரி.. வாங்க போகலாம்..!” என்று கையைப் பிடித்துக்கொண்டு அழைத்தாள். இறுகப் பற்றி இருந்த கையை விடுவிக்க முயற்சித்தேன். ஆனால் அவள் விடவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம் – போன்ற நாடுகளில் ஆண் பெண் வேறுபாடுகள் குறைவு. பெண்களும் ஆண்களைப் போலவே செயல்படுவதைப் பலரும் பல இடங்களில் பார்த்திருக்கலாம். என் கையைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்த அவளுக்கு, கடினமான என் தோல் பையை இடையூறாய் இருந்தது. “இது எதுக்கு இப்ப..?” எந்த தயக்கமும் இல்லாமல் நெடுநாள் பழகிய தோழியைப்போல எனது தோல் பையை எடுத்துக் கொண்டு போய் அவர்கள் குடும்பம் உட்கார்ந்திருக்கும் இடத்தின் நடுவில் வைத்தாள். தயங்கினேன். திரும்பித் திரும்பி என் தோள் பையைப் பார்த்தேன். புரிந்து கொண்டாள். “தைரியமா வாங்க.. சேஃப்டியா இருக்கும்..!” மீண்டும் கையைப் பிடித்துக் கொண்டு எதிரில் சற்றுத் தொலைவில் முதல் மாடியில் இருக்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றாள். நள்ளிரவு நேரம் என்பதால் வழிகளிலும் படிக்கட்டுகளிலும் வராண்டாவிலும் பலதரப்பட்ட பயணிகள் படுத்துக் கிடந்தனர். தாறுமாறாக வழியை மறித்துக் கொண்டு படுத்துக் கிடப்பவர்களைச் சத்தமாகத் திட்டி னாள். சில நேரம் ஷூ அணிந்த காலாலேயே அவர்களை ஒதுக்கித் தள்ளி முன்னேறினாள். அவளது ஒவ்வொரு செயலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. திடமான நடை. எதற்கும் தயக்கமில்லை. புதியவன் அன்னியன் என்ற எந்தத் தடையும் இல்லை. “நீங்க..?” அவளை நோக்கிக் கேட்டேன். “மணிப்பூர். ஆனா உங்க ஊர்ல தான் படிக்கிறேன். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் பொலிட்டிகல் சயின்ஸ். இரண்டாவது வருசம் ..!” கவுண்ட்டர்களில், அதிகாரிகளின் அலுவலகங்களில் சில வங்காளிகள்   தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வங்காளத்தில் எனது ரயில் பற்றிக் கேட்டாள். ஒருவர் இன்னொருவரைக் கைகாட்ட அவர் இன்னொரு அலுவலகத்தில் மற்றொருவரைக் கைகாட்ட… இப்படியே இரண்டு மூன்று அலுவலகம் சென்று வந்தோம். எங்கும் சரியான பதில் இல்லை அவளது சொந்த மொழியான மணிப்புரியில் பலவிதமாக வசைபாடித் தீர்த்தாள். பொறுக்க முடியாமல் நானும் கேட்டேன். “ஏன் இங்க எல்லாமே இப்படி இருக்கு? “ஆமா… இது என்ன.. சென்ட்ரலா? எக்மோரா? இல்ல கோயம்புத்தூரா..? இங்க எல்லாமே இப்படித்தான் இருக்கும். எந்த ட்ரெயினும் நேரத்துக்கு வராது. உங்க ஊரு மாதிரி அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்ல… இங்க எட்டு மணி நேரம் பத்து மணி நேரம்கூட ஆகும். இருந்து வெயிட் பண்ணி பொறுமையாதான் போகணும்.!” எனக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாளே ஒழிய அவளது கண்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருந்தன. எங்காவது விடை கிடைக்குமா? இந்தியாவிலேயே தென்னக ரயில்வே தான் சிறப்பான செயல்பாட்டிற்காகப் பாராட்டப் படுகிறது. ஓரளவு நேர ஒழுங்கு, உறுதி செய்த பெட்டிகள், உறுதி செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கட்டுப்பாடு, முறையான தகவல் அறிவிப்பு எனப் பலவற்றையும் சொல்லலாம். வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு இரயில்வேக்களில் நிலைமை தலைகீழ். பொறுப்பற்ற ரயில்வே நிர்வாகம்  மற்றும் சோம்பேறித்தனமான ஊழியர்கள் மட்டுமல்ல, புயல் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, மலைப்பாதைகளில் மண்சரிவு என பிற இயற்கை இடர்களையும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம். இரவு 1:40. சிறிது நேரம் என்னைத் தனியே ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு எனது பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்றவள், பத்து நிமிடம் கழித்துத் திரும்ப வந்தாள். எனது உடல் சோர்வை அவள் கவனித்திருக்க வேண்டும். முகத்தில் கடுகடுப்பு குறைந்து புன்னகை பூத்திருந்தது. “…ப்பா.. முடிச்சாச்சு.. வாங்க போகலாம்” என்றபடியே பயணச்சீட்டை எனது சட்டைப் பையில் திணித்தாள். “பிளாட்பார்ம் நம்பர் 14. டைம் 2.30. காமரூப் எக்ஸ்பிரஸ்.!” என்றபடியே முன்னிலும் விரைவாகப் படியிறங்கி ஓடினாள். படுத்துக் கிடப்பவர்களை தாண்டிக் குதித்து ஓடும்போது, அவள் ஒரு தடகள வீராங்கனை போலவே  எனக்குத் தெரிந்தாள். அவளைப் பின் தொடர்வது எனக்குக் கடினமாக இருந்தது. இரவு 2.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. விரைந்து சென்று தனது குடும்பத்தாரிடம் மணிப்புரியில் ஏதோ கூறிவிட்டு, எனது தோள் பையை எடுத்துக் கொண்டாள். உட்கார்ந்திருந்த அவளது அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் எழுந்து நின்று என்னை நோக்கிச் சற்று குனிந்தவாறு கைகூப்பினர். நெகிழ்ச்சியில கண்களின் ஓரம் நீர் துளிர்ப்பது போல் இருந்தது எனக்கு. பதிலுக்கு நானும் கைகூப்பி வணங்கிப் புறப்படுகையில், அவளது தாய் சிறு பொட்டலத்தை எடுத்து என் கையில் திணித்தாள். அதில் இரண்டு மூன்று சப்பாத்திகள். “வாங்க.. சீக்கிரம் வாங்க..,” என்று என் பையைத் தூக்கி கொண்டு  எனக்கு முன்னே நடந்தாள். கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 23 நடைமேடைகளில் 14வது நடைமேடையைத் தேடி, ஏறி இறங்கி வந்து சேருவதற்கு 15 நிமிடம் பிடித்தது. எனது பெட்டி எண், இருக்கை எண்ணை சரியாகத் தேடிப்பிடித்து  பையை வைத்தாள். நேரம் பின்னிரவு 2.20. “எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க…ரொம்ப நன்றி..!” நெகிழ்ந்து போன மனதிலிருந்து வார்த்தைகள் சரியாக வரவில்லை. தடுமாற்றமாய்த்தான் வந்தது. “எதுக்கு தேங்ஸ்லாம்.. என்னை மாதிரி உள்ளவங்களை, எங்க ஸ்டேட்காரங்களையெல்லாம் நீங்க எவ்வளவு நல்லா பாத்துக்கறீங்க!! சொந்த ஊரா இருந்தாலும் எங்க ஊர்ல  எங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்ல. ஆனா உங்க ஊர்ல எங்களுக்கு சுதந்திரம் மட்டுமில்ல, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல் எங்க வாழ்க்கைக்கான முன்னேற்றத்தையும் நாங்க அங்கதான் தேடிக்கிறோம். அதுக்காக உங்களுக்கு, உங்க தமிழ்நாட்டுக்கு நாங்கதான் தேங்க்ஸ் சொல்லணும்!” காமரூபம் எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. நடைமேடையில் நின்றபடியே கையசைத்துக் கொண்டே இருந்தாள் அந்த மணிப்புரி மாணவி. நடைமேடை விளக்குகளின் வெளிச்சம் பட்டு அவள் கருப்பாகவும் வெள்ளையாகவும் மெல்ல மறையத் தொடங்கினாள். இருளில் மறைந்தது அவள் மட்டும்தானா..? இனம், மதம், மொழி, மாநிலம், எல்லைகள் எல்லாமும்தான்..!

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

“ஈ.வே.ராமசாமியாகிய நான், தமிழர்களின் மீதான சூத்திரப் பட்டம் என்னும் இழிவைத் துடைத்தெறிய யாரும் முன்வராத காரணத்தால், நானே அந்தப் பணியை என் தோளில் சுமந்து செல்கிறேன்” என்று தமிழர்களுக்காகத் தானே முன்வந்து பகுத்தறிவுச் சிந்தனைகளை, சுயமரியாதைச் சிந்தனைகளை விதைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார். அவரின் பெருமைகள் எதையும் அறியாத 5 வயதில் 1965-இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதல்முறையாகப்  பெரியாரைப் பார்த்தேன். அப்போது பெரியாரின் எந்தக் கருத்துகளும் என்னை ஈர்க்கவில்லை. ஆண்களும், பெண்களும் என் போன்ற குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த போது எனக்கு ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.மாநாடு காலையில் தொடங்கியது. பலரும் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் மேடையில் இருந்த பெரியாரிடம் சென்று, அவரை வணங்கி, அவர் கையில் கட்சி வளர்ச்சி நிதிக்கு, விடுதலை வளர்ச்சி நிதிக்கு என்று ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொடுத்துக் கொண்டி ருந்தார்கள். பெரியார் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வளர்ச்சி நிதியை வாங்கிக் கொண்டிருந்தார். என்போன்ற சிறுவர், சிறுமியர் வளர்ச்சி நிதி கொடுத்தபோது, சிறுவர்களை “வாங்க ஐயா”, என்றும் சிறுமியை “வாங்க அம்மா” என்றும் விளித்தார். வளர்ச்சி நிதியைப் பெரியார் கையில் கொடுத்தபோது, சிறுவர்களின் கரங்களைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 5 வயதிலிருந்து நான் என் மூத்த சகோதரி சண்பக வல்லியின் வீட்டில் திருச்சி வரகனேரி பெரியார் நகரில் வாழ்ந்து வந்தேன். என் சகோதரியின் கணவர் என் மாமா ஓ.வேலு அவர்கள் (80களில் திருச்சி நகரத் தி.க. துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார்) என்னை மதுரை மாநாட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். பெரியார் சிறுவர்களுக்குக் கைகளில் முத்தம் கொடுப்பதைப் பார்த்து, என் கையில் 25 பைசா கொடுத்து, பெரியாரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் மேடைக்குச் சென்றேன். பெரியாரை நெருங்கியவுடன், பெரியார் என்னைப் பார்த்து, “வாங்க அய்யா” என்று கைகூப்பி வரவேற்றார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நன்கொடையாக 25 பைசாவைப் பெரியாரின் கைகளில் கொடுத்தேன். என் இரு கரங்களையும் பெரியார் பற்றிக் கொண்டு, கரங்களில் முத்தம் கொடுத்தார். அந்த நேரத்தில் பெரியாரைவிடவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது, அவரின் இருபக்கங்களிலும் இருந்த நாய்கள்தான். பெரியாரிடமிருந்து விலகிச் சென்ற நான், இருபக்கங்களிலும் இருந்த நாய்களின் தலைகளைத் தடவிக் கொடுத்தேன். பெரியாரும் ஒன்றும் சொல்லவில்லை. மேடையை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக மாநாட்டு மணலில் அமர்ந்தேன். என் பார்வைகள், சிந்தனைகள் அனைத்தும் பெரியாருக்குப் பக்கத்திலிருக்கும் நாய்கள் மீதே இருந்தன. பகல் உணவு இடைவேளைக்கு, பெரியார் மேடையிலிருந்து வெளியே சென்றார். நாய்களும் பெரியாருடன் சென்றன. மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மீண்டும் தமுக்கம் மைதானத்திற்கு வேனில் வந்தார். வேன் நின்றவுடன் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அந்த இரண்டு நாய்களும் மேடையே நோக்கி வந்து பெரியார் அமரும் இடத்தின் வலப்புறம் இடப்புறம் அமர்ந்து கொண்டன. பின்புதான் பெரியார் வந்தார். மாலை நேரத்தைத் தாண்டி இரவு 7.00 மணியளவில் பெரியார் பேசத் தொடங்கினார். இரவு 9.00 மணிக்குப் பெரியார் தன் உரையை முடித்தார். அதுவரை அந்த நாய்கள் பெரியாரை விட்டு அகலவில்லை. சிறுநீர் கழிக்கவோ, உணவு அருந்தவோ அந்த நாய்கள் செல்லாதது என்னை பிரமிக்க வைத்தது. பெரியாரின் கருத்துகளால் மனிதர்கள் பெரியார் மீது அன்பு வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட என்னால், நாய்கள் ஏன் பெரியார் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றன என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து பெரியார் பற்றிய செய்திகள் ஒளிப்படங்கள் வழியாக “தந்தை பெரியார், தான் உணவு முன் நாய்களுக்கு உணவு வைக்கச் சொல்லுவார். நாய்களைக் கட்டிப் பிடித்தப்படி படுக்கையில் அமர்ந்திருப்பார். மணியம்மை அவர்களும் பெரியார் நாய்களிடம் கட்டிய அன்புக்கு நிகராகவே அன்பு காட்டினார்” என்ற செய்திகளை அறிந்தேன். நாய் மனிதர்களிடம் அன்பு காட்டக்கூடிய விலங்கு. எளிதில் மனிதர்களிடம் பழகிவிடும் தன்மை கொண்டது. மனிதர்கள் பிரம்மாவின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்ததாக மனுஸ்மிருதி சொல்வதாய்ப் பிறப்பில் வேற்றுமை பாராட்டுபவர்கள் குறிப்பிடுவார்கள். இதைக் கடுமையாகத் தந்தை பெரியார் எதிர்த்தார். அந்தக் காலத்து அரிஜன்கள் இந்தக் காலத்துத் தலித்துகள் பெரியாரிடம் சென்று, “ஐயா…. தலையில் பிராமணனும், தோளில் சத்திரியனும், தொடையில் வைசியனும் காலில் சூத்திரனும் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாங்கள் எங்கே ஐயா பிறந்தோம்” என்ற கேள்விக்குத் தந்தை பெரியார்,“அவர்கள் பிறக்கக்கூடாத இடத்தில் பிறந்துள்ளார்கள். நீங்கள்தான் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவர்கள்” என்று கோபமும் கேலியுமாய்ப் பதில் கூறியுள்ளார். நாயைப் பைரவன் என்று கடவுளின் வாகனமா வைத்திருந்தாலும் புராணங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நாய் என்பது இழிவு பொருளில்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடவுளின் முன்பு நாயினும் கீழானவன் என்னும் பொருள்பட “நாயினும் கடையேன்” என்று பக்தி இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதை வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நாய்களை மனிதர்களுக்கு இணையாக மதித்துள்ளார். நாய்களும் பெரியாரின் பண்பை மதித்திருக்கின்றன என்பதை நாய்கள் காட்டிய அன்பின் வழியாகப் பின்னாளில் என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. 1969-இல் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது என் சகோதரி,  மாமாவோடு லாரியில் திருச்சி வரகனேரியிலிருந்து பிப்.3ஆம் நாள் இரவு சென்னைக்குச் சென்றோம். லாரியில் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் 50 பேர் இருந்தார்கள். அனைவரும் சென்னை செல்லும்வரை அழுதுகொண்டே வந்தார்கள். சென்னை சென்று சேர்ந்தும் அழுது கொண்டே இருந்தார்கள். என் சகோதரியும் இதில் அடக்கம். அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை யாரும் சாப்பிடவில்லை. அண்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டம்தான் எனக்கு அரசியலைப் புரிய வைத்தது. அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார், “என் தலைமகனை இழந்து புத்திர சோகத்தில் இருக்கிறேன்” என்று வெளியிட்ட அறிக்கையின் வழியாக அண்ணாவையும் பெரியாரையும் புரிந்து கொண்டேன். அப்போது எனக்கு 9 வயது. தொடர்ந்து பெரியார் கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்வது என்பது என் வழக்கமாகிவிட்டது. பகுத்தறிவுக் கண்காட்சியில் புராணக் குப்பைகளைச் சாடி வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து என் அறிவை, அறிவியல் உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்போது தொடங்கித்தான் பெரியாரின் நாய்களிடமிருந்து என் பார்வையை விலக்கிக் கொண்டு, பெரியாரின் கருத்துகள் மீது கவனம் கொண்டேன். திமுகவிற்காக 1971இல் என் தந்தை மற்றும் சகோதரர்களோடு 1971இல் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக உரையாற்றினேன். பெரியாரின் பேச்சுகளையும், திராவிடர் கழகச் சிறு வெளியீடுகள் வழியாகப் பெரியாரை முழுமையாக அறிந்துகொண்டேன். 1973 டிசம்பர் 24ஆம் தேதி பெரியார் இயற்கை எய்தினார். அப்போது 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியாரின் மறைவு செய்திக் கேட்டு எல்லாரும் அழுதுகொண்டிருந் தார்கள். ஒரு மரணத்திற்காக நான் முதன்முறையாக அழுதது தந்தை பெரியாருக் காகத்தான். அன்று இரவு திருச்சியிலிருந்து இரயில் மூலம் பெரியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இரயில் மூலம் சென்றோம். என் சகோதரர்களும் வந்திருந்தனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எங்களோடு வந்திருந்த வரகனேரி மருதமுத்து நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தார். பெரியார் மரணமும் எங்களின் உறவினர் மருதமுத்துவின் மரணமும் எங்களைப் பெரும் வருத்தம் கொள்ளவைத்தது. பெரியாரை 5 வயதில் அறிந்த நான் 10 வயதில் முழுமையாகப் புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு வயது 60. பெரியாரியச் சிந்தனைகளிலிருந்து வழுமால் நழுவாமல், பெரியாரியச் சிந்தனைகளை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்னை வளர்த்த என் மாமா ஓ.வேலு அவர்கள் பொன்மலை இரயில்வேயில் பணியாற்றி 80களில் ஓய்வு பெற்று, திராவிடர் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். பின்னர் 1992ஆம் ஆண்டு பெரியார் மறைந்த டிசம்பர் 24ஆம் நாள் காலை 7.00 மணிக்குப் பொன்மலை மருத்துவமனையில் இயற்கை எய்தினார். பெரியார் எங்கள் வாழ்வோடு இணைந்து எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இனி என்னவாகும் கூட்டுறவு வங்கிகள்?

இந்திய நாட்டின் அனைத்து வங்கிகளின் வங்கியாகச் செயல்பட்டு வருவது RBI என அழைக்கப்படும் பாரத ரிசர்வ் வங்கியாகும். இது நாட்டின் மைய வங்கி. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் இதன் நேரடி கட்டுப்பாடு மற்றும் விதிகளின்படியே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முறைப்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும். கடந்த 25/06/2020 அன்று இந்திய அரசு, “நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (RBI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்” என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. மேலும் 28/06/2020 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மத்திய அரசின் இம்முடிவின் தாக்கம் எந்த மாதிரியான விளைவுகளைப் பொது மக்களிடம் ஏற்படுத்தும் என்று வங்கிப் பணியாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: கூட்டுறவு நிறுவனம் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என்பவை கிராமம் மற்றும் உள்ளூர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பு ஆகும்.  குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான விவசாயக் கடன், நகைக் கடன் மற்றும் இடுபொருள் கடன்கள் வழங்குவது போன்ற பெரும் பணிகளை துரிதமாக செய்து வருகின்றன. மாநில அரசுகளின் கீழ்  ஓரளவு சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தன. இனிவரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளின் நிலைமை எவ்வாறு அமையும் என்று விவசாயிகள் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தப் புதிய மாற்றத்தினால், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அதிகாரத் தலையீடு தவிர்க்கப்படும். கணக்கு வழக்குகள் ஒழுங்கு முறைப் படுத்தப் படும். கையூட்டு, மோசடி மற்றும் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். அதேவேளை விவசாயி களுக்கான பயிர்க்கடன், மற்றும் நகைக் கடன் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் உண்டாகும். கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடையலாம். மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆகாமலும் போகலாம். மிக முக்கியமாக  இது மாநில அரசின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கு சமமாகும். மேலும் மாநிலத்தின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். கூட்டுறவுத்துறை சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டுக்கு இந்த உரிமைப் பறிப்பு பேரிழப்பு என்கிறார் அவர். கரையான் புற்றில் கருநாகம் புகுந்ததுபோல், கூட்டறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவருவதன்மூலம் மத்திய அரசு மக்களின் பணத்தையும் மாநில உரிமைகளையும் அபகரிக்கிறது.

பெண் என்ன பொதுச் சொத்தா?

பெண் என்ன பொதுச் சொத்தா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு பெண்ணின் மறுமணம் ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அந்தத் திருமணம் ஒரு பெருங்கூட்டத்தால் அருவருக்கத்தக்க வகையில் விமர்சிக்கப்பட்டது. ஒரு பெண் மறுமணம் புரிவது இவர்களுக்கு ஏன் இவ்வளவு உறுத்துகிறது? ஆண்டாண்டு காலமாக நம் சமூகத்தில் மனைவி இறந்த பின்னோ, பிரிந்த பின்னோ அல்லது உடன் இருக்கும்போதோ கூட ஒரு ஆண், இரண்டாம் திருமணம் புரிவது அல்லது மணம் புரியாமல் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது போன்றவை நமக்கெல்லாம் ஒன்றும்  புதிதல்ல. அவற்றையெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் செய்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செய்தாலும் `இன்று சென்னை வெயில் 37.’ என்பது போன்ற அன்றாடச் செய்தியாகத்தான் தலைமுறை தலைமுறையாக நாம் கடந்து கொண்டி ருக்கிறோம். ஒத்து வராத காரணத்தால் பிரிய நினைக்கும் தம்பதியரை ஊர் கூடி அறுத்துவிட்டு, மறுமணம் புரியும் உரிமை இருவருக்குமே கொடுக்கப் படுவதும் ஆண்டாண்டு காலமாக சில கிராமங் களில் இருந்து வந்திருக்கிறது ஒரு பெண்ணின் கணவர்  இறந்துவிட்டால், திருமணமாகாத அவரின் சதோதரர் யாரும் இருந்தால் அவர் ஒப்புதலுடன் அந்தப் பெண்ணுக்கு மணம் முடித்துவைத்து அப்பெண்ணையும் குழந்தை களையும் காப்பாற்றும் பொறுப்பை அவரிடம் விடும் கிராம பஞ்சாயத்துகளும் இங்கே உண்டுதான். ஆனால் முன்னேறிக்கொண்டிருப்பதாகச் சொல்லித்திரிந்து கொண்டிருக்கும் நம் நவீன சமூகம், அதிலும் மெத்தப் படித்து தெளிந்து விட்டதாக இறுமாப்பு  கொண்டிருக்கும் இன்றைய சமூகம், இன்றும் ஒரு பெண்ணின் மறுமணத்தைக் கடக்கவியலாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒரு முன்னேறிய சமூகத்தில் எவர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் செய்தியாக இருக்கவே கூடாது. அப்படியே செய்தியானாலும் `அப்படியா?’ என்று கடக்கும் கட்டத்தில் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறோமா நாம்? இங்கு ஒரு பெண் திருமணம் புரியாவிட்டாலும் பிரச்சினை. புரிந்தாலும் பிரச்சினை. அவள் உயிரும் உணர்வும் உள்ளவள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு என்ன செய்தாலும் பெண்ணே ஒரு பிரச்சினையாகிவிடுகிறாள். ஒரு பெண் திருமணம் வேண்டாம் என்று சொன்னால், ஆண் துணை இல்லாமல் எப்படி வாழ்வாள் என்றொரு கேள்வி. ஆனால் திருமணம் புரிந்த பிறகு, ஆண் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்துவிட்டாலோ, அப்பெண் தனக்குத் துணை வேண்டுமென்று சொன்னால், `அதென்ன ஒரு பொம்பளைக்கு அப்படி ஆம்பள கேக்குது?’ என்று அதே வாய் கேட்கும். யார் வாழ்வை யார் நிர்ணயிப்பது? யாருக்கு என்ன தேவை என்பதில் யார் தலையிடுவது? ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மறுமணம் புரிய அவர்கள் இருவரின் ஒப்புதல் மட்டுமே அவசியம். வளர்ந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள் பொறுப்பில் இருந்தால் மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இதுகூடத் தார்மீகக் கடமை என்றுதான் கொள்ளவேண்டுமே தவிர, திணிக்க இயலாது. ஒரு பெண்ணின் மறுமணம் குறித்து மற்றவர் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அது யாராகவே இருந்தாலும்? அவளைப் போல வாழ இயலாத கையறுநிலையில் இருக்கும் பெண்களும், எங்கே தங்கள் வீட்டுப் பெண்களை இப்படிப்பட்ட உதாரணங்கள் மாற்றிவிடுமோ என்ற பயத்தில் வாழும் ஆண்களும், கலாச்சாரம் என்ற முகமூடியை அணிந்து திரியும் போலிகளும் எறியும் கற்கள் இவை, கொட்டும் குப்பைகள் இவை, நாறிடும் சாக்கடைகள் இவை! அதிலும் குறிப்பாக, மறுமணம் புரியும் பெண் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதராக இருந்து விட்டால் போதும். யார் வேண்டுமானால் என்ன அவதூறு வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து வசை பாடுவார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை அவர் பொதுச் சொத்து. அவர்களின் படுக்கையறையில், குளியலறையில் என்று எங்கும் எட்டிப் பார்க்கும் உரிமையை இவர்களே கையில் எடுத்துக்கொள்வார்கள். கேட்டால், பிரபலங்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அவர்கள் எப்படி தவறு புரியலாம் என்று கேள்வி வேறு கேட்பார்கள். முதலில் தனி மனித வாழ்க்கையில் மற்றவருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் யார் என்ன செய்தாலும் அதை விமர்சிக்க நாம் யார்? ஒரு பெண் – அவள் பிரபலமோ அல்லது பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணோ -வாழவேண்டுமா இல்லை சாக வேண்டுமா என்பதைப் பொதுச் சமூகம்தான் முடிவு செய்கிறது. ஒரு காலத்தில் கணவன் இறந்துவிட்டான், நீயும் அவனுடன் செத்துப்போ என்றார்கள். ஒருவன் உன்னை வன்புணர்வு செய்தானா, அல்லது ஒருவனை நம்பி ஏமாந்துவிட்டாயா, நீ வாழத் தகுதியற்றவள் இறந்து போ என்றார்கள்! இப்படி எத்தனையோ பெண்களை வீழ வைத்திருக்கிறது நம் சரித்திரம். இன்றளவும் கற்பு என்ற ஒன்றை நிலைநிறுத்துவதற்காக அபலைப் பெண்களின் மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்படியாக மறுமணம் செய்த பெண்ணைப்பற்றி அவதூறு, ஏளனம்  பேசுபவர்கள், இனி வரும் தலைமுறையில் இவர்கள் குடும்பத்திலிருந்தே ஒரு பெண் இதைச் செல்படுத்திக்காட்டும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். உடலைத்தாண்டி, அதுவும் முக்கியமாக அடுத்தவர் உடலைத்தாண்டி சிந்திக்கக் கற்காத வரை, இந்த வன்மங்கள் கொண்ட கொடூர நாக்குகள் பேசிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் மாற்றங்கள் நிகழ்வதை இங்கு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டுமானால் ஆரோக்கியமான தனி மனிதர்களின் கூட்டத்தால் மட்டுமே முடியும்.  தூற்றுபவர்கள் எரிந்தே சாம்பலாகட்டும். வாழ நினைப்பவர்கள் விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் அவரவர் வாழ்வை அவரவர் வாழ்வோம்!

சாதிப் படுகொலையும் நீதிப் படுகொலையும்!

பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படுகொலை அது. அந்தக் கொலைக்கு எதிராக சமூகத்தின் ஒரு பகுதி கொந்தளித்த அதே வேளையில், சமூகத்தின் மற்றொரு பக்கம் அக்கொலையைக் கொண்டாடியது. நியாயம் கற்பித்தது. கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது சற்றும் தளராமல் போராடி, கொலைக்குக் காரணமானவர்களை விடுவித்துவிட்டது. இன்றும் இந்த சமூகத்தின் அழுகிப்போன பகுதி, தன் வெற்றியைக் கொண்டாடுகிறது. கொலையுண்டவனின் ஆன்மாவும், குடும்பமும் கொலை நடந்த நடுத்தெருவில் நீதியைத் தேடுகிறது. கொலைக்கான நியாயம் கற்பிப்பவர்கள் கவுசல்யாவின் கற்பை ஏலம் போடுகிறார்கள். அவரது மறுமணத்தைக் கேலிப் பொருளாக்கு கிறார்கள். கவுசல்யாவைக் கண்ணால்கூடக் கண்டிராதவர்களெல்லாம் அவரது உடல் வேட்கையை அளவெடுக்கிறார்கள். அழுகிய பிணத்தினும் கேவலமாக நாற்றம் வீசுகிறது அவர்களின் சொற்களிலிருந்து. இன்னும் சில நீதிமான்களோ, கவுசல்யாவைப் பெற்று, இருபது ஆண்டுகள் வளர்த்தவர்களின் உணர்வுகளைக் கண்டு வேதனையில் உழல்கிறார்கள். கவுசல்யா வின் பெற்றோர் மட்டுமே பெற்று வளர்த்தார்கள். சங்கரின் பெற்றோர்கள், அவரைப் பொம்மைக் கடையிலிருந்து இலவசமாக வாங்கி வந்திருக்கக் கூடும். சங்கருக்காகவும், அவரின் பெற்றோருக் காகவும் வருத்தப்பட நாங்கள் என்ன தாழ்த்தப் பட்டவர்களா? இல்லையே! நாங்கள் ஆண்டைகள், சிங்கங்கள், ஓநாய்கள், வெறி நாய்கள், மொத்தத்தில் சாதிப்பசிக்காகப் மனிதர்களைக் கொன்று பிணங்களைப் புசிக்கும் நவீன மிருகங்கள். இன்னொரு குழுவினரும் இருக்கிறார்கள். “பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாகக் குழந்தைகள் நடக்கலாமா?” என்று கேட்கும் நடுநிலைத் தராசுகள் அவர்கள். “பாராட்டி சீராட்டி வளர்த்த குழந்தையை ஆள் வைத்து வெட்டலாமா?” என்ற கேள்வியை யார் அவர்களிடம் எழுப்புவது? இந்தப் பழங்கதைகள் என்றும் தொடர்கதைகள் தான். அதனால் நாம் அதைப்பற்றி இங்கே பேசப்போவதில்லை. வேதனை என்னவெனில், சமூகநீதியைக் காப்பாற்ற அறைகூவல் விடுக்கும் பல கட்சிகள் தற்போது வாயே திறக்கவில்லை என்பதுதான். என்ன செய்வது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவர்கள் வாயில் ஓட்டு எனும் திண்டுக்கல் பூட்டு மாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான். அங்கே அரியாசனத்தில் பசுவின் கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்கள் இல்லை. மாறாக ‘மனு’ நீதிச் சோழன்கள் இருக்கிறார்கள். கவுசல்யாவின் பெற்றோரும் கொலைகாரர்களும் ஒரு மாதமாகத் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் இருந்தும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்கிறார்கள். இனிமேல் நாட்டு மக்கள் அனைவரது தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆவணப்படுத்திவிடலாம். இல்லையேல் பெரும்பான்மைச் சதிச்செயல்கள் குற்றம் என நிரூபிக்கப்படாமலே போய்விடக்கூடும். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பியிருந்தால், ‘’உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்களுடன் ஒரு மாதம் அப்படி என்னதான் பேசினீர்கள்? எதற்காகப் பேசினீர்கள்?’’ என்றாவது ஒரு வார்த்தை அந்தச் சதிகாரர்களிடம் கனம் கோர்ட்டார் அவர்கள் கேட்டிருக்க லாம். அல்லது, எந்த ஒரு கொலை வழக்கையும் விசாரிக்கும்போது கொலைக்கான காரணம் (Motive) என்ற ஒன்று முக்கியக் காரணியாக எடுத்துக்கொள்ளப்படும். அதையாவது கருத்தில்கொண்டு, “நடுரோட்டில் மக்கள் மத்தியில் வைத்துக் கொடூரமாகக் கொள்ளும் அளவிற்கு, சங்கருக்கும் உங்களுக்கும் என்ன முன் பகையா? சொத்துத் தகறாரா? அதிகாரப் போட்டியா? தொழில் போட்டியா? அல்லது குறைந்தபட்சம் வாய்க்கால் தகராறாவது உண்டா?” எனக் கேட்டிருக்கலாம். அதையெல்லாம் விசாரிப்பது ‘ஹைகோர்ட்’ கடமையில் வராது என நினைக்கிறேன். சரி, கொலைகாரர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையைக் குறைக்க ‘ஹைகோர்ட்’ சொல்லும் காரணம் என்ன? ‘அவர்கள் இளம் வயதுக்காரர்கள். இதற்கு முன்பு அவர்கள்மீது கொடூரக் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை’ என்பதுதான். இதனால், இந்த ‘ஹைகோர்ட்’ அறிவிப்பது என்னவென்றால், கொடூரக் குற்றச் செயல்களை இளம் வயது நபர்களை வைத்து அரங்கேற்றுங்கள். அவர்களும் முதல் தலைமுறைக் குற்றவாளிகளாக இருக்கட்டும். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் நிர்பயா வழக்கை உதாரணமாக எடுத்துக் கொண்டு பதினாறு, பதினேழு வயது இளைஞர் களை வைத்துக் காரியத்தை முடித்தால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் புனிதர்களாக வெளியே வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பேட்டரி வாங்கித் தந்த காரணத் துக்காக, கால் நூற்றாண் டுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் சிறை சென்ற போது அவருக்கு இளவயதுதான். கொலைச் சதித்திட்டம் தீட்டத்தான் கவுசல்யாவின் பெற்றோர் போனில் பேசினார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றால், பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படாத ஒன்றுதானே?! பெயர் ஒன்றாக இருந்ததாலேயே குண்டு சாந்தனுக்காகச் சிறையில் வாடும் சாந்தன், உள்ளிட்ட எழுவருமே அன்றைக்கு இளம் வயதினர்தான். அவர்கள் மீதும் இதற்கு முன்பாக எந்த ஒரு கொடூரக் குற்றமும் பதிவாகி இருக்கவில்லை. இத்தனைக்கும் “நான் பொய் வாக்குமூலம் எழுதித்தான் அவரைக் குற்றவாளி ஆக்கினேன்” என்று விசாரணை அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தபின்னும், ஒரு தொலைக்காட்சி விவாத முடிவில், வழக்கில் தொடர்புடைய சாந்தன் இருக்குமிடம் தெரிந்தபோது, ஒரு அப்பாவி சாந்தன் தண்டனை அனுபவிப்பதை அறிந்தும், தங்கள் விசாரணை இலட்சணம் பல்லிளித்துவிடக்கூடாது என்பதற்காக, வழக்கில் தொடர்புடைய சாந்தனைச் சுட்டுக் கொன்றதை விசாரணை அதிகாரிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டபோதும், எந்த ‘ஹைகோர்ட்டும்’ அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வில்லை. ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றகள், நீதிபதிகளுக்கும் தனித்தனியே சட்ட நூல்கள் இருக்கிறது போலும். தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள், விண்ணிலிருந்து வந்த தேவ மைந்தர்கள். கடவுளின் அவதாரங்கள். காலம் காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டதெல்லாம், அவதாரங் களின் மீது கேள்விகளையோ, விமர்சனங் களையோ எழுப்பக்கூடாது என்பதுதானே.. யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் ஆணவக் கொலைகள் அங்கீகரிக்கப்படலாம். கொடூரக் குற்றங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படலாம். கொலை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படலாம். அதை வேடிக்கை பார்த்து ‘உச்’ கொட்ட மட்டுமே நமக்கு அனுமதி வழங்கப்படலாம். மற்றபடி… சாதிக்கு ஒரு நீதி! நீதிக்குதான் இல்லை நாதி!

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

எங்கள் நாட்டில் சூரியனே மறைவதில்லை” என்ற ஆங்கிலேய ஒற்றை ஆட்சித் தலைமையின் ஆணவச் சொற்றொடர் உலகப் புகழ்பெற்றது. இன்றும்கூட ஒட்டுமொத்த உலகத்தையும் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்டிப் படைத்துக்கொண்டுள்ளது கண்ணுக்குத் தெரியாத நுண்ணி ஒன்று. ஆம், கொரோனா என்னும் பிணி இன்று உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மனித குலத்துக்கே சவாலாக விளங்கிவருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே உலகம் முழுக்கப் பரந்து கிடந்த இனம்தான் தமிழினம். அத்தகைய பழம்பெருமைக்குச் சொந்தக்காரர்களான நம் தமிழர்கள் இன்றளவும் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்துவருகிறார்கள். தமிழ்நாட்டில் தினந்தோறும் ஆயிரக்கணக் கானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவது உறுதி செய்யப்பட்டுவரும் இந்தச் சூழலில் அயலகத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சூழலையும், கொரோனாவை அந்த நாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் முறைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.  சீனா: கொரோனாவின் வருகை சீனாவிலிருந்து துவங்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் பல பத்தாண்டுகள் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வைரசின் பல்வேறு பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, தற்போதைய வீரியத்தோடு தாக்கும் வைரசுக்கு கோவிட்-19 என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரசின் தோற்றுவாயான சீனாவிலிருந்து தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார், அங்குள்ள பன்னாட்டுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை வகுப்புக் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் உஷா கிரிதரன். சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த இவர் சீனாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய வூகான் நகரத்திலிருந்து சிலமணிநேரப் பயணத் தொலைவில் உள்ள ஜெஜியாங் மாநிலம், ஹேங்ஜோ நகரில் வசிக்கிறார். “2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் இந்த வைரஸ் பரவத் துவங்கி உலகமெங்கும் இந்த வைரஸ் பரவியிருந்தாலும், சீனா மீது உலக நாடுகள் பலவும் பலவாறு குற்றம் சாட்டினாலும், வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனா அதிக முனைப்புடன் செயலாற்றி, தற்போது ஏறத்தாழ 80% இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது.. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா, கொரானாவின் பிறப்பிடமாக இருந்தும் ஒரு இலட்சம் என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. தொழில்நுட்ப வசதிகளில் பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு வடிவங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. சட்டங்கள் கடுமையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதில் சீனர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்கள். அலைபேசி கையில் இல்லாமல் யாரும் வெளியே செல்ல முடியாது. நம் ஊரில், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என்று மண்டலங்களைப் பிரித்ததுபோல் இங்கும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் QR Code அலைபேசி வழியே கொடுத்துள்ளார்கள். மண்டல விதிகளுக்கும் ஏற்ப அந்த கியூ ஆர் கோடு காட்டினால்தான் மக்கள் கடைகள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட எந்த இடத்துக்கும் செல்ல முடியும். 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடல் வெப்பநிலையைக் கண்காணித்து, கொரோனா அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கிறார்கள். சமூக இடைவெளி மக்களால் பொறுப்புடன் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு சீனா மாறிவிட்டதால், மக்களுக்கான உதவிகளை இ-வவுச்சர் (E Voucher) மூலம் வழங்கினார்கள். அதனைத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தாத வவுச்சர்கள் தானாகவே காலாவதியாகிவிடும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 100 யுவான்களை (ரூபாய் மதிப்பில் சுமார் 1000) அரசுக்கு நிதியாக வழங்கியுள்ளார்கள். யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மொபைல் போனில் உள்ள அப்ளிகேசன் மூலம் அவர்கள் பயணம் செய்த விவரங்களைச் சேகரித்து அவர்கள் சென்ற இடங்கள், தொடர்புகொண்ட ஆட்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளார்கள். இதனால் தொற்றுப் பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வெளிநாட்டினருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து சீனா திரும்பியவர்களில், தங்கள் பயண வழித்தடத்தை மறைத்து, பொய்யான தகவல் தந்தவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். இங்கே வாழ்வதில் பாதுகாப்பு தொடர்பான எந்தச் சிக்கலும் இல்லை. குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டபோதே, அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதால் அச்சமின்றி இங்கே வாழ்கிறோம் என்கிறார் உஷா.  இங்கிலாந்து: இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில்தான் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த அந்த நேரத்தில், இங்கிலாந்தில் தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ 2000 ஆக இருந்தது, தற்போது மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40000ஐக் கடந்துவிட்டது. இங்கிலாந்தில் கொரோனா லாக் டவுன் மற்றும் பாதிப்புகள் குறித்து, மன்னார்குடி பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும்  க.தமிழன் நம்மோடு செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். “லாக் டவுன் அறிவிப்பு மிகுந்த தாமதம், இத்தாலியில் கொரோனா   பரவல் தீவிரமாக இருந்ததை அறிந்தும் அரசு மெத்தனமாக இருந்தது,  வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் மூலமாகக் கொரோனா இறக்குமதியாகிவிட்டது என்று பலவாறு இந்நாட்டின் எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் சாட்டுகின்றன. லாக் டவுன் அறிவிப்பு வெளியிட்டதும், பொருட்களை வாங்குவதில் மக்களிடையே பதற்றம் நிலவியது. அத்தியாவசியப் பொருட்கள் மொத்தமாக அள்ளிச் செல்லப்பட்டன. முதல் சில வாரங்கள் ஆன்லைன் டெலிவரி கிடைப்பது சிரமமாக இருந்தது. உணவகங்களில் Take Away இல்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்ப்பட்டது. முதல் சில வாரங்கள் மக்கள் பொதுமுடக்கத்தை ஓரளவு முழுமையாகவே பின்பற்றினார்கள். மிகச் சிலரே விதிகளை மீறினார்கள். ஆனால், தளர்வுக்குப் பின்பு மக்கள் வெளியில் நடமாடத் துவங்கிவிட்டார்கள். ஆனாலும் சுயகட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கிறார்கள். பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது நோயின் தீவிரம் மக்களுக்குப் புரிந்தது. இங்குள்ள பிரதமரும் அமைச்சர்களும் மக்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள். வேலையிழந்தோருக்கு 80% ஊதியத்தை அரசு வழங்குகிறது. சுயதொழில் செய்யும் நபர்களுக்கு £10000 வரையும், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு £25000 வரை அரசு இலவச உதவித்தொகை வழங்கியது. பதிவு செய்த நிறுவனங்களுக்கு £50000 பவுண்டுகள் வரை 2.5% வட்டியில் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வங்கியில் நடப்புக்கணக்கு இருந்தாலே போதுமானது. கடனுக்கான செக்யூரிட்டியை அரசே வழங்குகிறது. முதல் 12 மாதங்கள் கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை. மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை, படுக்கைகள் பற்றாக்குறை, மாஸ்க் மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான பற்றாக்குறை துவக்கத்தில் நிலவியது. சாதாரண அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப் படுகிறது. துவக்க்கத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததால் மக்களிடம் அச்சம் இருந்தது. நாளடைவில் மக்கள் அச்சம் நீங்கி இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டனர்” என்கிறார் தமிழன்.   சிங்கப்பூர்: சீனாவிற்கு நெருக்கமான, நம் சென்னயை விடச் சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனா தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை, சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியியல் மேலாளராகப் பணிபுரியும் ராஜபாளையம், தொம்பக்குளதைச் சேர்ந்த ஜெயமோகன் விவரிக்கிறார். சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து சிங்கப்பூர் அரசு அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அனைத்து விமானப் பயணிகளைக் கண்காணிக்கத் துவங்கியது. அனைத்து மருத்துவநிலையங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. சார்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அதற்கென்று உருவாக்கப்பட்ட National Centre for Infectious Diseases (NCID) மிகத் திறம்பட செயலாற்றியது. அனைத்து நிறுவனங்கள், பள்ளிகள், கடைகளில் சேனிடைசர் பயன்பாடும் உடல் வெப்பப் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டது. அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் சேனிடைசர் இலவசமாக அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் அதிபர், அமைச்சர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசு கேட்டுக்கொண்டது. தனிமனித இடைவெளி கட்டாயம், அனைத்துக் கடைகள், வளாகங்கள்  மூடல், உணவகங்களில் டேக்அவே மட்டும், காய்கறிச் சந்தைகளில் அடையாள அட்டையுடன் வரிசைப்படி தான் காய்கறிகள் வாங்க முடியும் எனக் கடுமையான கட்டுபாடுகள் மூலம் நோய்த் தாக்கம் குறைக்கப்பட்டது. இடைகால பட்ஜெட் தாக்கல் செய்து பொதுமக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் $650,உணவகங்களுக்கு வாடகை ரத்து, சிறு குறு பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் என 20 மில்லியன் டாலர் மதிப்பில் பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. அதிமான பரிசோதனைகள் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை 20 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு இணையாக இலவச சிகிச்சை, சத்தான உணவுகள், நோய்எதிர்ப்பு மருந்துகள்,  வீட்டில் உள்ளவர்களுடன் பேச இலவச இணைய சேவை 50 GB, $750 உதவித் தொகை என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. மனநலம் சார்ந்த ஆலோசனைகள் பல்வேறு குழுக்கள் மூலம் வழங்கப்பட்டது. ஊழியர்கள் சொகுசு கப்பல்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு தேவையான பராமரிப்பினை அரசு வழங்கியது. மூன்று கட்டங்களாக $500 மில்லியன் வரையில் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பல்வேறு வரிச்சலுகைகளையும் நிதி ஆதாரங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மக்களின் துயர் நீங்குவது போலவே கிருமித் தொற்றும் படிப்படியாகக் குறைந்து சிங்கப்பூர் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அடுத்த இதழில் இன்னும்சில நாடுகளிலிருந்து… +++++++++++++