உணவுத் தீண்டாமை
இந்தச் சமூகத்தில், நாம் உண்ணுகிற உணவு என்பது, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளதைப்போல, ஒவ்வொரு மனிதருக்கும் உணவுப் பழக்கவழக்கம் வேறுபட்டே உள்ளது. உணவு விருப்பம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை. உலக நாடுகளில், அந்தந்த நாடுகளின் வாழ்வியல் சார்ந்து மக்கள் உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறனர். அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை பொதுவான அசைவ வகை உணவுகளாக அறியப்படுகின்றன. மேற்சொன்னவை மட்டுமல்லாது, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் ஆகியவையும் பல இடங்களில் மனிதர்களின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன. காய்கறிகளை / தாவரப் பொருட்களை மட்டுமே கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவ வகை உணவுகளாக அடையாளம் பெற்றுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள்தான். இந்தியா போன்ற சில நாடுகளில் வாழ்கிற மக்களிடம், அவர்களின் குடி, சமயம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில், உணவுப் பழக்கவழக்கங்களில் அசைவமும் சைவமும் கலந்திருக்கிறன. உயிர் வாழவும் பசி போக்கவும் நாம் உண்கிற உணவில், சைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும், இல்லை இல்லை, அசைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும் அவரவர் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். உண்மையைச் சொன்னால், அவர்கள் அவர்களை அறியாமலே, மறைமுகமானதொரு அரசியல் வலையில் சிக்கவைக்கப்டுள்ளனர். இதனால் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையை விலக்கி, வேற்றுமையை உருவாக்கி, உளவியல் ரீதியில் அவர்களை ஒருவகை நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது இந்த உணவு அரசியல். இதனால், பழக்கப்பட்ட உணவை வைத்து ஒருவரை ஒருவர் ஏளனமாகவும் இழிவாகவும் பார்க்கிற பார்வை இங்கே பரவலாக இருந்து வருகிறது. ஆம், சைவ உணவை உண்பவர்கள் எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள், அது பிறப்பின் பெருமை என்பதோடு, அசைவ உணவை உண்பவர்களை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத் தகுந்தவர்களாகவும் கீழானவர்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் பார்க்கிற எண்ணமும் ஒரு சாராரிடம் நிறைந்திருக்கிறது. அவர்களால் பொது இடங்களில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறபோது, அசைவ உணவு கொண்டுவந்தவர்களோடு இயல்பாகச் சேர்ந்து உணவருந்த முடிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளால் அசைவ உணவை உண்பவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. அதைப்போலவே சைவ உணவு உண்பவர்களுக்கும் பல சங்கடங்கள் நிகழ்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். பெரும்பான்மையாக அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்றுகூடும் இடங்களில், சைவ உணவு உண்பவர்களை, சாம்பார் சோறு என்றும் தயிர் சோறு என்றும் ஏளனத்துக்கு ஆளாகிறார்கள். காரணம், பெரும்பான்மை கோலோச்சுகிற இடங்களில் சிறுபான்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு என்பது அவரவர் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, ‘நீ அதை உண்ணாதே என்பதும் இதைத்தான் உண்ண வேண்டும் என்பதும் ஆதிக்க மையத்தின் அடாவடிச் செயலாகும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ஏழை எளியோர்களின் அன்றாட உணவுகளான பழஞ்சோறு, கஞ்சி, கூழ் போன்றவற்றைப்பற்றிப் பொது இடங்களிலோ மற்றவர்களிடத்திலோ பேசும்போது ‘ஆஹா, ஓஹோ’ என்பவர்கள், அதை ஏழைகளிடத்தில் காண்கிறபோது ஏளனமாகப் பார்கிற பார்வை பெரும்பாலோரிடம் இருக்கிறது. அது சைவமோ அசைவமோ, எதுவாக இருந்தாலும் ஏழைக்களிடம் இருப்பதால் அது, இவர்களைப் பொறுத்தவரை தீண்டத்தகாத உணவு, அவ்வளவுதான். என்னதான் ஒருவருக்கொருவர் உணவு விஷயத்தில் ஒவ்வாமையைக் காட்டினாலும், உணவுத் தீண்டாமை என்பது, ஏழைகளின் உணவுகளைபோல அசைவ உணவுகளின் மீது மட்டுமே அதிதீவிரமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அசைவத்தின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அண்மையில், முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘அசைவ உணவு சாப்பிடுவோரின் ஆன்மாவால், நெற்றிப் பொட்டில் உள்ள சவ்வைக் கிழித்துக்கொண்டு சென்று இறைவனைச் சேர முடியாது’ என்று அவருடைய குரு கூறியதாகப் பதிவு செய்திருந்தார். உண்மையில் அவர், சைவத்துக்கு ஆதரவு என்கிற பெயரில் அசைவ உணவு குறித்த தன் அறியாமையை வெளிப்படுத்தியிருந்தார், அவ்வளவே. முருக பக்தரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றவர்களுக்குக்கூட, உணவு விஷயத்தில் போதிய அறிவு இல்லை என்பதை அவரது உரைகளின் வழியே நான் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவர், சைவமே சிறந்ததென்று சொல்வதற்காக, ஒரு முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டி நட்டு வைத்தால், அது பல முருங்கை மரங்களாக வளர்ந்து நமக்குப் பயன் தரும். ஆனால் ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நட்டுவைத்தால் ஆடு வளருமா எனக் கேட்கிறார். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் பகுத்தறிவற்றுப் பேசுகிறபோது சிறிய மனிதராக ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் இதுபோன்ற மூடத்தனமிக்க பேச்சுகள்தான். முருங்கை குறித்த அவர் பேச்சு சரிதான் என்று வைத்துக்கொண்டாலும், எல்லா மரங்களும் வெட்டி நட்டால் வளராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தென்னை மரத்தையோ பனை மரத்தையோ அல்லது நெல், சோளம் போன்ற பயிர் வகைகளையோ வெட்டி நட்டால் அவை வளராது; பக்குவப்படுத்தப்பட்ட விதைகளைப் போட்டால்தான் வளரும். அப்படித்தான், ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நடுவதால் ஆடு வளராது. ஆனால் ஆடுகளை வளர்த்து பல குட்டிகளைப் போட்டபின்பு அது கசாப்பு கடை வழியே உணவாக மாறுகிறது. ஒரு ஆடு பல குட்டிகளை ஈனும். அவை இன்னும் பலப்பல குட்டிகளை ஈனும். விவசாயம் எப்படி நடைபெறுகிறதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல கால்நடைகள் வளர்ப்பு. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தம்பி பேசுகிறபோது, சைவம் சிறந்ததென்று சொல்வதற்காக, வாரியம் சுவாமிகள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார். எது சைவம்? எது அசைவம்? என்று அவரிடம் கேட்டபோது, சாலையில் ஒரு ஆடு அடிபட்டு உயிருக்குப் போராடுகிறபோது, யார் கண்களில் நீர் சுரக்கிறதோ அது சைவம் எனவும் யார் வாயில் நீர் சுரக்கிறதோ அது அசைவம் என்றும் சொன்னதாகச் சொல்கிறார். இது எத்தகைய வக்கிர மனப்பான்மை?! அதாவது, சைவம் உண்பவர்கள் ஜீவகாருண்யம் மிக்கவர்கள், அன்பை போதிப்பவர்கள், யாருக்கும் தூன்பம் தராதவர்கள், நல்லவர்கள் என்பது போலவும் அதேசமயம் அசைவம் உண்பவர்கள் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்தாததோடு அதைக் கொன்று தின்பதையே முதல் குறிக்கோளாக வைத்திருப்பவர்கள், கொடூரமானவர்கள், மொத்தத்தில் நல்லவர்களில்லை என்பதாகவும் தரம் தாழ்த்தி பேசுபவரான வாரியார் சுவாமிகள், மிக நல்லவராக, பக்திமானாக நம் எல்லாராலும் மதிக்கப்படுகிறார். இவர்களைப் போன்ற சைவப் பெருமை பேசுகிறவர்களை, நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் போகிற போக்கில், “மூட்டைப் பூச்சிகளையும் கொசுகளையும் கொத்துக் கொத்தாக அடித்துக் கொல்பவர்களும், பல ஆயிரம் கூட்டுப்புழுக்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டாடைகளை உடுத்துபவர்களும் மாட்டின் காம்புகள் நோகப் பாலைக் கறப்பவர்களும் மற்றவர்களுக்கு புத்தனைப்போலப் போதிப்பானுங்க; அயோக்கியப் பயலுங்க” என்று சாடுவார். உணவுகளில் எல்லாமும் எல்லாருக்கும் பிடிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது. அதைத்தான் அவர்கள் விரும்பி உண்கிறார்கள். சைவ உணவுப் பிரியர்கள் ஒதுக்கி வைக்கும் காய்கறிகள் ஏராளம். போலவே அசைவப் பிரியர்கள் ஒதுக்கும் கறி வகைகளும் ஏராளம். ஆகவே சைவமோ அசைவமோ, அவரவர் விருப்பத்திற்கு உண்பதைத் தாழ்வானதாகவோ அருவருக்கத்தக்கதாகவோ யாரும் கருதவேண்டாம். ஒருவருக்கு ஜீரணம் ஆகிற எந்த உணவும் உண்ணக்கூடியதே. உயிர்கள் பிறப்பின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிறது அறிவியல். இனத்தைப் பெருக்க வேண்டுமென்றால், நீடித்து உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவினை உண்டு நீடித்து வாழ்வோம்.