பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

1799, மே மாதம் 4-ம் தேதி. ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைக் காக்க, திப்பு சுல்தான் விரைந்து செல்கிறார். தான் உயிரினும் மேலாக நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையாவும், மிர்சாதிக்கும், கமருதீனும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறியதைக்கண்டு, ஒரு வினாடி பதைத்துத்தான் போனார். அவர்தான் வீரனாயிற்றே; உடைவாளைச் சுழற்றிக் களத்தில் இறங்கினார் திப்பு. எதிர்முகாமில் வெல்லெஸ்லி தலைமையில் ஏகாதிபத்தியப்படை. பெரும் போர் நடந்தது. போரின் நடுவே ஏதோ ஒரு துரோகியின் வாள் திப்புவைத் தாக்கியது. போர் முடிவுக்கு வந்து, வெள்ளையர்கள் திப்புவைத் தேடுகின்றனர். இறுதியில், ஒரு மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி, போர்க்களத்தில் வீரர்கள் உடல்களுக்கிடையில் கிடக்கிறது, மாவீரன் திப்பு சுல்தான் உடல். போர்முடிந்ததும், திப்பு சுல்தான் மகன்களும் மகள்களும் உறவினர்களும் வேலூர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், போர்க்களத்தில் உயிர் நீத்த ஒரே மன்னரான திப்புசுல்தான் வாரிசுகள்,வேலூர் சிறையில் வாளாவிருக்கவில்லை. வேலூர் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள், மீசை வைக்கக்கூடாது; தலைப்பாகை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவுகளை எதிர்த்து, சிப்பாய்கள் கனன்று கொண்டிருந்தனர். சிப்பாய்களின் எதிர்ப்பை திப்பு சுல்தானின் மூத்த மகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும், அரசியல் ரீதியாக உருமாற்றி வந்தனர். இறுதியில், 1806 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி, புரட்சிக்கான தேதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் தேதியில் புரட்சி நடைபெறவில்லை. பின்னர் 1806-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, வேலூர் கோட்டைக்குள் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள், சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசீம், சுபேதார் ஷேக் ஹுசைன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து, ஆங்கிலேய அதிகாரிகளையும், ஆங்கிலேய ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். கட்டாய தலைப்பாகை அமுல் படுத்திய கர்னல் மிக்கிராஸ் உட்பட, 14 வெள்ளை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். “வாருங்கள் நவாப், திப்பு சுல்தான் ஆட்சியைத் தொடருங்கள்” என்று, திப்பு சுல்தானின் மூத்த மகனை அழைத்தனர் சிப்பாய்கள். வேலூர் கோட்டைக்குள் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால், அதிகாலை ஆர்க்காட்டிலிருந்து கர்னல் ராபர்ட் கில்லஸ்பி (Colonel Robert Gillespei) தலைமையில் பிரிட்டிஷ் படைகள் வந்து, புரட்சிக்காரர்களை வேட்டையாடியது.தன்னெழுச்சியாக எழுந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான பெரும் புரட்சி, வெந்து தணிந்தது. ஆனாலும், அந்தத் தீ நாளங்கள் அணைந்ததுபோல் தோன்றினாலும், அதில் புகைந்து கனன்று கொண்டிருந்த தீக்கனல்,1857-ம் ஆண்டு அடுத்த புரட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு. ஆனால், 1806 -ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடத்தைப் பெறவில்லை என்பதுதான் கொடுமை. ஷாகுல் ஹமீது

அப்துல் கலாமின் மௌனம்

அப்துல் கலாமின் மௌனம்

சென்ற மாதம் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அறையைச் சுத்தம் செய்ய வந்தவர் வயதில் மூத்த ஒரு பெரியவர். ‘பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘அப்துல் கலாம்’ என்றார். ‘கலாமின் பெயர் உங்களுக்கும்’ என்றேன். சிரித்துக்கொண்டார். ‘எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள்?’ என்றேன். குறைவான ஊதியம் ஒன்று சொன்னார். ‘கட்டுபடியாகிறதா?’ என்றேன். ‘விலைவாசி ஏறிவிட்டது’ என்றவர், ‘சாதாரண மக்கள் பாடு மிகச் சிரமம்’ என்றார். நானும், இன்று காசுக்காக மக்கள் படும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘கேஸ் விலை கூடிவிட்டது’ என்றேன். அவரும் ‘ஆமாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எல்லாம் இந்த மத்தியில் இருக்கிற மோடி அரசுதான்’ என்றேன். பேசியவர் அமைதியானார். ‘மோடியின் பொருளாதார, நிர்வாகச் சீர்கேடு’ என்று சொன்னேன். அமைதியாகவே இருந்தார். ‘என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீர்கள்?’ என்றேன். ‘அதுதான் நீங்கள் சொல்லிட்டீங்களே சார்’ என்றார். ‘எல்லாம் இந்த மோடி அரசுதான் என்று, நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதுபோல நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்குறீர்கள்?’ என்றேன். ‘அதற்குக் காரணம் உங்களுக்கும் தெரியும் சார்’ என்று சொல்லிவிட்டு வேலையில் முனைப்பாக இருந்தார். என்னால் மோடி அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக மற்றவருடனான உரையாடலில் சொல்ல முடியும்போது, கலாம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கிற ஒரு மனிதரால் ஏன் அப்படிச் சொல்ல இயவில்லை? ஏன் அந்த அச்ச உணர்வு அவருக்கு ஏற்படுகிறது? வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அச்ச உணர்வைத்தான் ஆகப் பெரிய ஆபத்தாக உணர்கிறேன். அரசின் அதிகாரத்தோடு இணைந்து, ஒரு பகுதி மக்களை அச்சத்தில் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். சமுகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதிய முரண்பாட்டிலும்கூட, உரிமைகளைப் பறிப்பதைவிட உயிர்வாழ்வதற்கான அச்சத்தை உருவாக்குவதையே ஆகப் பெரிய ஆபத்தாகக் காண்கிறேன். ஏனெனில், இருத்தலுக்கே போராடும் மக்களிடம் உரிமைப் போராட்டம் என்பதற்கு வழியின்றிப் போய்விடும். எனவே, உரிமைப் பறிப்புக்காக அவர்கள் தனியே எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதியப் படிநிலையில், பார்ப்பனர்களைவிட சூத்திரர்கள் என்கிற சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழ் இருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் முடிந்தாலும் மேலவளவு படுகொலைகளை இன்று வாசித்தாலும் அச்சமாக இருக்கிறது; வெண்மணியும் கூட. க. பாண்டியராசன்

என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டு

என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டு

அது சுதந்திரத்திற்கு முந்தைய காலம். இங்கிலாந்தின் ஒரு வட்ட மேஜை மாநாடு. மேன்மை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் வருகிறார். அவருக்கு இந்தியப் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் படலம். His highness, இவர் இந்தியாவின் அம்பேத்கர், இவர் தமிழ்நாட்டில் இருந்து ஏ. டி. பன்னீர்செல்வம்.. என்று தொடர்ந்து வரும்போது, இவர் என்று அடுத்தவரைப் பார்க்க, அவர் இரு கைகளைப் பின்னால் கட்டியிருக்கிறார். அவருடைய கோட்டில் “தாழ்த்தப்பட்டவர்” என்று எழுதியுள்ளது. மன்னரை அவமதிக்கும் செயல் என்று உணர்ந்தே அவர் இதைச் செய்கிறார். அருகில் வந்த மன்னரிடம், நான் தீண்டப்படாதவன், என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும்‘ என்று தைரியமாகச் சொல்கிறார். என்னவென்று விசாரித்த மன்னரிடம், எங்கள் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான் என்று கூறி விளக்கம் அளிக்கிறார். யாராவது கீழே விழுந்தாலும் அதுதான் நிலைமை என்பதை விசாரித்து அறிந்த மன்னர், அவரிடத்தில் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்கிறார். இவ்வளவு தைரியமாக மன்னரிடம் பேசிய அந்த மாமனிதர்தான் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களில் மிகவும் சீனியர். அம்பேத்கர் பிறந்தபோது இவருக்கு 30 வயது. ஆனால் அதே அம்பேத்கருடன் இங்கிலாந்தில் நடந்த வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்று வந்தவர். 1859 ஜுலை 7 அன்று செங்கல்பட்டில் இரட்டைமலை – ஆதிஅம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோவை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சீனிவாசன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இந்திய துணைக்கண்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து பட்டப்படிப்பை முடித்த முதல் பெருமைக்குரியவர், இரட்டைமலை சீனிவாசன். சிறு வயதிலேயே சமூக அமைப்பின் சமமின்மையில் வருந்தியவர், அந்த நிலையை மாற்றுவதையே தன் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டார். திராவிடர் கழகம் என்று தொடங்கி, திராவிட மகாஜன சபா என்று பெயர் மாற்றம் பெற்ற அமைப்பின் மாநாடு உதகையில் நடந்தபோது, தன் உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இவர் இயற்றிய 10 தீர்மானங்கள் தமிழகத்தின் சமூக நீதிக்கான பாதையில் முதல் காலடியானது. அப்போதைய காலகட்டத்தில் விடுதலைக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கையற்றவராகவே இருந்தார் சீனிவாசன். சக இந்தியரிடமே வேறொரு இந்தியன் சுதந்திரம் கேட்பது கேவலம் என்பார். இன்றும் அந்த அவலம் நீடிப்பதை நாம் அறிவோம்தானே! பறையன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார். பெயர்க்காரணம் கேட்டபோது, ‘தன்னைத்தானே பெருமை பாராட்ட பறையர்கள் முன்வரும்போதுதான் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும்’ என்று பதிலளித்தார். அது சிறந்த பிரசாரப் பத்திரிக்கையாகத் திகழ்ந்தது. பறையன் இதழின் முதல் பிரதியை மதிப்புரைக்காக சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியபோது, அதன் ஆசிரியராக இருந்த சி.ஆர்.நரசிம்மன், அதனைக் கையால் தொடாமல் குச்சி வைத்து புரட்டிப் பார்த்தார் என்ற செய்தி, அக்காலத்தில் நிலவிய தீண்டாமையின்  நிலைமையை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. கல்வியின் மூலம்தான் சமூக முன்னேற்றம் நிகழும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ICS என்னும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு இங்கிலாந்தில் நடந்து வந்தது. அதை இந்தியாவிலும் சேர்ந்து நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியபோது, அதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு அவர் சொன்ன காரணம் கவனிக்கத்தக்கது. “இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் அதிகம் எழுதுவார்கள். மேலும் அவர்களுடைய சட்டங்கள், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை ஏற்பதில்லை. எனவே இங்கிலாந்தில் மட்டும் நடத்தினால் போதுமானது” என்று எழுதினார். இந்தியாவின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று கிளம்பியவர், அவர் சென்ற கப்பல் தென்ஆப்பிரிக்காவில் நின்றதால் அங்கேயே இறங்கிக் கொண்டார். இவரின் ஆங்கிலப் புலமை காரணமாக நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. அங்கேதான் இவர் காந்தியைச் சந்தித்தார். இவருடைய நட்புதான் காந்திக்கு திருக்குறளையும், தமிழில் கையெழுத்து இடுதலையும் கற்றுத் தந்தது. பின்னொரு காலத்தில் இந்த நட்புதான் பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவும் செய்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய சீனிவாசன், நீதிக்கட்சியின் மேலவை உறுப்பினராகி அமைச்சராகிறார். இவர் காலத்தில் சிறப்பான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டு ஆணைகள் ஆகியுள்ளன. பொதுக் கிணறுகள், பொதுச்சாலைகள், ஆலயங்கள் பயன்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேற்றுமை பாராட்டக்கூடாது, சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆணையாக்கப் பட்டது. ஆதி திராவிடர் என்ற பொதுப்பெயர் பல்வேறு பெயர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இரண்டாவது வட்ட மேஜை மாநாடு இங்கிலாந்தில் நடந்தபோது அம்பேத்கருடன் சேர்ந்து மாநாட்டில் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பேசி, ஆங்கிலேயர்களிடம் ஒப்புதல் பெற்றார். இந்தியா திரும்பியவுடன் காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், சமாதானத்திற்காகப் பெரும் பங்காற்றினார். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்களில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையே எடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு உத்தியாகத்தான் பயன்படுத்தப்பட்டது என்று தமிழகத்தின் சமூக சீர்திருத்தம் – ஒரு இருநூற்றாண்டு வரலாறு என்ற தன் நூலில் அருணன் கூறுகிறார். தன் இறுதி மூச்சு வரை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன், தன் 86 ம் வயதில் செப். 1945-ல் இயற்கை எய்தினார். இந்தியா சுதந்திரம் அடைவதை அவர் பார்த்துச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை. கோவை பிரசன்னா

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி

செலக்டிவ் பாலிடிக்ஸ்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம். நிகழ்வு 1அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே? நிகழ்வு 2தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். நிகழ்வு 3குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நிகழ்வு 4கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின. கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது. கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன. ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு. இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம். தஞ்சை ராஜேஷ்

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த பிரச்சினை தற்போது அடுத்த வடிவம் பெற்றுள்ளது. தற்போது கர்நாடக அரசு, தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அந்தந்த நிர்வாகம் சொல்லும் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், இந்தக் கட்டுப்பாடு அரசியல் சாசனம் வழங்கும் மதச் சுதந்திர உரிமைக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளது. மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனால், அந்தக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வணியில் வடிவமைக்கப்பட்ட இந்து மதச் சாமியார் சிலையை விடவா ஹிஜாப் அணிவது மத அடையாளத்தை முன்னிறுத்துகிறது? தலையில் முக்காடு அணியும் வழக்கம் தென் மாநிலங்களில் அதிகம் இல்லையென்றாலும் வட மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலப் பெண்களில் அனைத்துப் பெண்களிடமும் உண்டு. கிறித்தவ மதத்திலும் கூட, தொழுகை நேரங்களில் பெண்கள் முக்காடு அணிந்தே தொழகை நிகழ்த்துவார்கள். இந்தியாவில் பல்வேறு மத, சமுதாயப் பெண்களிடையே, வேற்றுக் குடும்ப ஆண்களைக் கண்டால் உடனடியாகப் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு இட்டுக் கொள்வது இன்னமும் வழக்கமாகவே உள்ளது. ஏதோ ஒரு வகையில் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக்கொள்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆனாலும், ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை மத அடையாளமாகவே எடுத்துக் கொண்டாலும், விபூதி குங்குமம் வைப்பது, நாமம் போடுவது போன்றவையும் மத அடையாளங்களே. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள் பிறரைத் தாழ்த்தும் வகையில் பூணூல் அணிவது சாதியத்தின் அடையாளம் இல்லையா? ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்த அடையாளங்களுக்கும் தடை விதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாபுக்குப் போட்டியாக காவி ஷால் அணிந்து வருவது மதவாத அரசியலின் மற்றொரு வெளிப்பாடே அன்றி வேறில்லை. கல்லூரி மாணவிகள் வரை தற்போதைய சிற்பான்மையினர் மீதான மதவெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது இந்த சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதை மரமாகிக்கொண்டு இருப்பதன் நிகழ் சாட்சி. ஹிஜாப் என்பது ஆணாதிக்கத்தின் சாட்சி என்றாலும் இன்றைய பெண்களில்‌ சிலர் அதை அலங்காரத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டு பல்வேறு வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த வழிபபாட்டுப் பாடல்கள், நடைமுறைகளை இன்னமும் வைத்துக்கொண்டு,கல்லூரி வயதில் உடைக் கட்டுப்பாடு விதிப்பது என்பது இன்னமும் இந்தச் சமூகம் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகளில் உழல்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

பட்ஜெட்டும் பி. எஸ். வீரப்பாவும்

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வழக்கம்போலவே வளர்ச்சி, டிஜிட்டல் போன்ற சொற்களுக்குப் பஞ்சமில்லை. இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலச்சூழலில் வாழ்வாதாரம் இழந்து கிடக்கும் ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றுப்பாட்டுக்கு மட்டுமே பஞ்சம் நிலவுகிறது பட்ஜெட்டில். பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்ற வெற்று அறிவிப்பு ஒன்றைத்தவிர, பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும்கூட ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு மருந்துக்கும் அறிவிப்பு இல்லை. பல ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடரும் வருமானவரி விலக்குக்கான உச்ச வரம்பு இன்னமும் 2.5 லட்சமாகவே இருக்கும் என்ற அறிவிப்புடன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12% இருந்து 7% ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டும் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு, ஆனால் சில லட்சங்கள் ஈட்டுவோர் வரி கட்டவேண்டும். வழக்கம்போல சாலை விரிவாக்கம், எட்டு வழிச் சாலைகள் என்ற அறிவிப்புகள், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பின்னர் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட சாலையில் அதே மக்கள் பயணிக்க சுங்கச் சாவடி அமைத்துப் பணமும் வசூலிப்பார்கள், எந்தவிதக் கால வரையறையும்கூட இல்லாமல் என்பதை உறுதி செய்கின்றன. ஏதிலிகள் ஆக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பொதுமக்கள்தான். நதிகளை இணைக்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர். வெளிப்பார்வைக்குப் பயனுள்ள திட்டமாக இது தோன்றினாலும், இதன் பின்னால் உள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இதற்காக ஏற்படுத்தப்படவுள்ள வழித்தடங்களுக்காகத் தங்கள் வாழிடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்கப்போகும் மக்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிப்பு, நதி நீர் கடலில் கலக்காமல் தடுப்பதால் கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை அளவு, இதனால் பாதிப்புக்கு ஆளாகும் கடல்வாழ் உயிரிகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காகக் கடலை நம்பியுள்ள மக்கள் என இதன் பின்விளைவுகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது அந்த அறிக்கை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. கிரிப்டோ கரன்சிக்கும் டிஜிட்டல் கரன்சிக்குமான வேறுபாட்டை இன்னமும் நிதியமைச்சர் உணர்ந்தாரா என்றே நமக்குப் புரியவில்லை. கிரிப்டோ கரன்சி முதலீட்டு வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு அநீதியின் உச்சம் மட்டுமல்ல அறியாமையின் உச்சமும்கூட. ரயில்வே துறைக்கென தனியே பட்ஜெட் போடப்பட்டதை மாற்றி பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். தற்போது ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்பை ரயில்நிலைய பிளாட்பாரங்களில்தான் தேட வேண்டியுள்ளது. சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த பல ரயில்களை, கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்கள் என்று பெயர் சூட்டி ஏமாற்றினார்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமான ரயில்களை நிறுத்திவிட்டார்கள். அவற்றை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்ணுக்கு எட்டியவரை காணமுடியவில்லை. எல். ஐ. சி. பங்குகளை விற்கும் முடிவு முன்பே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும், விற்பனை விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பைப் பெருமையாக வெளியிட்டுள்ளார் அமைச்சர். ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினால் அதை நடத்தும் தகுதி நடத்துபவருக்கு இல்லை என்று பொருள். அதேவேளை, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் கிடைக்கிறது என்று பொருள். சமூக மேம்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் அடிப்படையானதுமான கல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் கல்வித் தொலைக்காட்சி எண்ணிக்கையை 200 ஆக உயர்த்துவோம் என்ற அறிவிப்பு கல்வியை மேலும் சிதைக்க இவர்கள் கொண்டுள்ள திட்டத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை. எந்தச் சூழலிலும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் வகுப்புகள் நேரடிக் கற்றலுக்கு ஈடாகாது. கல்வி மேம்பாடு குறித்த வேறு எந்த அறிவிப்பும் இல்லை என்பது இவர்களுக்குக் கல்வி மீதான அக்கறையின்மையைக் காட்டுகிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வேதனை தரும் நகைச்சுவை. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறு குறு தொழில்கள் மீட்டெடுப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தத் தளத்திலும் இந்த பட்ஜெட் எந்தப் பயனையும் எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்போவாதில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களை எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஆட்சியாளர்கள் யாருக்காக இயங்குகிறார்கள் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. நடப்பது ஜனநாயக ஆட்சி என்ற சிந்தனை சிறிதுமின்றி, எளிய மக்கள் மீது எவ்விதக் கருணையுமின்றி, சர்வாதிகார மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களால் மட்டுமே இத்தகைய பட்ஜெட்களைத் தயாரிக்க முடியும். பி. எஸ். வீரப்பா ஒரு திரைப்படத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ‘இந்த நாடும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் மக்களும் நாசமாய்ப் போகட்டும்’.

சூட்சுமங்கள்

சூட்சுமங்கள்

எப்போதும்போல எதுவுமில்லாதவர்ஏமாந்தே எலும்பாகிறார்எல்லாமுடையவர்வசதியோடு வள்ளலாகிறார்தெய்வமும் கைவசமிருப்பதைக்கொடுத்துதான் நிற்கிறதுதன் இருப்பிடத்தில்கட்டணமென்றால் சிறப்பு தரிசனத்தில் வரம்கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்றசுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்தெரிவதில்லை பாவம்தெய்வங்களுக்கும் தெருக்கோடிகளுக்கும் கலை

தலைவி

தலைவி

திரைவிமர்சனம் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலோ சுய வரலாற்று அடிப்படையிலோ அல்லாது, அஜயன் பாலா எழுதிய நூலைத் தழுவி, அதே பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘தலைவி’. பதிவாகியுள்ள அரசியல் வரலாற்று நிகழ்வுகளுடன், யூகங்கள் மற்றும் செவிவழி அடிப்படையிலான சில செய்திகளையும் தொகுத்து, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியைச் சுவையாக இயக்குனர் விஜய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எனவே, இதிலுள்ள உண்மைத்தன்மை நூறு விழுக்காடும் உத்தரவாதத்திற்கு உரியது அல்ல. விருப்பமில்லாமல் வந்த திரைத்துறையிலும் விருப்பமில்லாமல் வர நேர்ந்த அரசியலிலும் அப்போது நிலவிய ஆணாதிக்கத்தைத் துணிவுடன் எதிர்த்து, சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாக, வெற்றியும் பெற்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைதான் ‘தலைவி’யில் விவரிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையும் அரசியலும் பின்னிப்பிணைந்த தமிழக வரலாற்றின் தலைவி அத்தியாயத்தில், ஜெயலலிதாவாகட்டும், ஆர் எம் வீரப்பனாகட்டும், வி.என்.ஜானகியாகட்டும், அத்தனை பேரும் சுற்றிவரும் மையப்புள்ளி எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் விருப்பம் என்னவாக இருந்தாலும், இவர்கள் அனைவரது விருப்பமும், அவர் ஒருவராகத்தான் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்திய விதம் அவரவர்களுக்கு ஏற்ப, மாறுபட்டும் இருந்திருக்கிறது, அவ்வளவுதான். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியதே கலைஞர்தான் என்றாலும், அதன் பிறகு அவரது அரசியலும் அவரைச் சுற்றியேதான் தொடர்ந்தது என்பதும் உண்மையே. இப்படத்தின் கதை ஜெயலலிதாவை நோக்கியது என்கிற வகையில், எம்ஜிஆரின் அரசியல் செயல்பாடுகள், அவரது காலத்தில் கலைஞரின் அரசியல் எல்லாம் ஒரு வரையறைக்குள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஜெயாவாகக் கங்கனா ரனாவத் நிறைவாகவே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே ஆர். எம்.வீரப்பன் உடனான மோதல், சீண்டல், அலட்சியம், கிண்டல், எகத்தாளம், எம்.ஜி.ஆர். மீதான அதீத அன்பு, அவ்வப்போதான பிணக்கு, சமயோசித அறிவு, திறன், கோபம், கண்டிப்பு, உணர்ச்சி வயப்படுதல் என ஜெயாவின் பன்முகத் தன்மையை, படத்தில் கிடைத்த வாய்ப்பில் வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு. அரவிந்த் சுவாமிதான் எம்.ஜி.ஆர். கனப்பொருத்தம். அவரிடமே வெளிப்பட்டிராத முக பாவங்களைக்கூட, இதில் இவர் வெளிப்படுத்தி இருப்பது அருமை. நாசர் (கலைஞர் கருணாநிதி), சமுத்திரக்கனி (ஆர் எம் வீரப்பன்) இருவரும் ஏற்ற பாத்திரத்தைப் பழுதில்லாமலும் அட்டகாசமாகவும் செய்துள்ளனர். உடல்மொழியுடன் குரலும் நாசருடையதே என்றால், அவருக்குக் கூடுதல் பாராட்டு. பாக்யஸ்ரீ (சந்தியா), ரெஜினா கஸன்ட்ரா (சரோஜாதேவி), மதுபாலா (வி என் ஜானகி), தம்பி ராமையா (மாதவன்), ஷாம்னா காசிம் (வி.கே. சசிகலா), ராதாரவி (எம்.ஆர்.ராதா) தத்தம் பாத்திரத்தில், உரிய பங்களிப்பைக் குறைவின்றி வழங்கியுள்ளனர். ‘அறிந்தேன் ஆண்மையினை… உண்மையைத்தான் சொன்னேன்’ ‘செட்’டில் எம்.ஜி.ஆரிடம் சரோஜாதேவி, ‘செட்டுக்குள்ள நடிக்கறதுக்கு மட்டும்தான் நீங்க சம்பளம் தர்றீங்க. வெளியே வந்து நீங்க எடுக்கிற பாடத்த கேட்டுக்கறதுக்கு இல்ல..’ ஆர்.எம்.வீ.யிடம் சரோஜா தேவி, ‘தப்பில்லம்மா, அம்மா பண்ணதான், தப்பு’ அம்முவிடம் மாதவன், ‘இப்ப மரியாதை மனசுல வந்துருச்சு’ மாதவனிடம் அம்மு, ‘காப்பாத்தினது கடவுள் இல்லை. இதோ, இந்த மருத்துவரும் மருத்துவமும்தான். அறிவுதான் கடவுள்’ கலைஞர், ‘நல்லா இருக்கு; நான் உங்கள ரெஸ்ட் எடுக்க சொன்னா, நீங்க என் நிம்மதிய கெடுக்கப் பாக்கறீங்களா?’ எம்ஜிஆரிடம் ஜெயா, ‘இது என் படம். என் பணம். யார் வாழணும், யார் சாகணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். டென்ஷனா இருந்துச்சுன்னா மெதுவடை சுட்டு மெதுவா சாப்பிடு’ ஜெயாவிடம் ஆர்.எம்.வீ. ‘உண்மையைச் சொல்லுங்க; ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட் ஆக்டர்?’ கேட்கும் மாதவனிடம் ‘அது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யார் பெஸ்ட் ஆக்டர்ன்னா, அது நான்தான்’ என்று சொல்லும் ஜெயா, ‘விரும்பறவங்களோட மனச கோபப்படுத்தலாம், காயப்படுத்தக் கூடாது’ அம்முவிடம் சந்தியா, ‘என்னைத் தவிர என் வாழ்க்கைக்கு எல்லாரும் முடிவெடுக்கிறாங்க, எனக்கு ஒரு வேலையும் இல்ல’, ‘இது விட்ட மாதிரி தெரியல, வேணான்னு வெட்ன மாதிரி தெரியுது’ ‘நாம விரும்பறவங்க நம்ம பக்கத்துல நிற்கும்போது எப்படி சந்தோஷம் இல்லாம இருக்க முடியும்? அது நிஜமல்ல, வெறும் பிம்பம்தான்னு நினைக்கும்போது எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?’ ஜெயா, ‘நாம மக்கள விரும்பினா மக்கள் நம்மள விரும்புவாங்க. அதான் அரசியல்’, எம்ஜிஆர், ‘ஜானகி அம்மாதான் எம்.ஜி.ஆரோட மனைவி, அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, மனைவி தலைவியாக முடியாது’ ஜெயா. இப்படி வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்; பலே, மதன் கார்க்கி. காமிரா கோணங்கள், லைட்டிங், ஏரியல் ஷாட்ஸ், பாடல்களைப் படமாக்கிய விதம் என விஷால் விட்டலின் ஒளிப்பதிவு அருமை. இணையாக, ஜி வி பிரகாஷ் குமாரின் அந்தந்தக் காலகட்டத்திற்கான திரை இசை உட்பட, உணர்வுபூர்வமான பொருத்தமான பின்னணி இசையும் அருமை. படத்தொகுப்பு அந்தோணி. தொலைக்காட்சித் தொடராகவோ, திரைப்படமாக இருந்தால் பாகங்களாகவோ எடுக்க வேண்டிய அளவிற்கு விரிவாக்கம் தேவைப்படுகின்ற இக்கதையை, இரண்டரை மணி நேரத்தில் சுருக்குவது என்பது மிகவும் சிரமம்தான். விளைவு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்கிற விதத்தில், நிகழ்வுகளின் ஓட்டத்தில் தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் இயலாத திடீர்த் தாவல்கள் நிறைய. எம்.ஆர்.ராதா ஓர் இரவில் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்கிறார். சுடும் சத்தம் கேட்கிறது. அடுத்து எம்.ஆர். ராதா காயத்தோடு வெளியேறுகிறார்; எம்ஜிஆர் ரத்தவெள்ளத்தில் தரையில், என்று துண்டு துண்டாகக் காட்சிகள். டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசி, எடுத்த முடிவை உடனடியாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்காத ஜெயலலிதா, ‘இதை எப்போ, எங்க சொல்லனும்னு எனக்குத் தெரியும், நான் சொல்லிக்கிறேன்’ என்கிறார். ஆனால், அதை இறுதி வரை சொல்லாமல் போனதாகத்தான் படத்தில் தெரிகிறது. அதே போன்று, சிகிச்சை பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, இறக்கும்வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்காதது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துறையிலும் அரசியல் துறையிலும் தவிர்க்க இயலாத பிரமுகர்களாகத் திகழ்ந்த, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எம். வீ சார்ந்த நிகழ்வுகளும் செய்திகளும், ஏறக்குறைய அனைத்தும் அறிந்தவைதான் என்கிற வகையில், இந்தக் கதையில் புதுமை இல்லைதான். என்றாலும், பிந்தைய ஆட்சி அதிகாரம், வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழக்கூடிய எந்தவிதமான மதிப்பீடையும் தவிர்த்த மனநிலையுடன், ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் நுழைந்த ஜெயலலிதா அங்கும், அதற்குப் பின்னர் பல இடர்ப்பாடுகளைத் தாண்டி, ‘தலைவி’யாக அவதாரமெடுத்த அதே ஆணாதிக்கம் மிகுந்த அரசியலிலும் சுயமரியாதையுடன் கூடிய பெண்ணாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதான நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர ‘மலரும் நினைவு’ களாக, இப்பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில், மீண்டும் திரையில் காண்பது, சுவைதரும் அனுபவமே. மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

நூறு நாள் ஆட்சி நூற்றுக்கு நூறா?

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுகவும் முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைப் பரவல் உச்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள், பலமான கூட்டணி, பத்தாண்டுகால அதிமுக ஆட்சி மீதான சலிப்பு, பாஜக அதிமுக கூட்டணி மீதான வெறுப்பு  என திமுக வெற்றிக்குப் பல காரணங்கள் உண்டு. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நூறு நாள் ஆட்சி குறித்தான நமது சில மதிப்பீடுகள் இவை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வருக்கு முக்கிய சவாலாக இருந்தது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது முடக்கம் இருக்காது என்று அறிவித்திருந்த முதல்வர், வேறு வழியின்றி பொதுமுடக்கத்தைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மருத்துவமனைகளில்  படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்கள் நிலவின. திமுக முழுமூச்சாக எதிர்த்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்காகத் திறக்க அரசு அனுமதி அளித்தது. லாக் அறிவித்த நேரத்தில் பேருந்துகளை இயக்கி அரசே நோய்ப்பரவலுக்கு வழி செய்தது. சிறு குறு நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்க பெரும் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கின. இதனால் பெரும் பணக்காரர்களின் தொழில் தடையின்றி நடைபெற்ற அதே வேளை, எளிய மக்களின் தொழில்கள் முடங்கிப் போயின. கடந்த ஆண்டின் பொதுமுடக்கம் ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்டது என்பதால் வங்கிக் கடன் தவணை செலுத்துதல் போன்றவற்றில் கிடைத்த சலுகைகள் இந்த ஆண்டு கிடைக்காததால் நலிவடைந்தவர்கள் எளிய மக்களே. அதேநேரம், வாக்குறுதி அளித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் பணமும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையே தடுப்பூசி வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது பாராட்டுக்குரியது. கொரொனாவைக் காரணம் காட்டி இன்று வரை பள்ளிகள் திறக்கப்படாதது கல்வித் துறையில் நிகழ்ந்துவரும் பெரும் பின்னடைவாகும். செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றே ஆறுதல் அளித்தாலும் இனி வரும் காலங்களில் இத்தகைய சூழலைச் சமாளித்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து அரசு இன்னமும் சிந்திக்கத் தொடங்காதது பெரும் ஏமாற்றமே. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏராளமான அறிவிப்புகளை மட்டுமே அள்ளித் தெளித்துள்ளதோடு, முந்தைய ஆட்சியின் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கடப்பதாக உள்ளது. பட்ஜெட்டுக்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களில் பண வீக்கம், வளர்ச்சி வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கோணங்கள் இன்றி அரசு கடனில் மூழ்கிக் கிடப்பதான தோற்றத்தை மட்டுமே உருவாக்கியது. முந்தைய ஆட்சியைக் குறை சொன்ன நிதியமைச்சர், கடன் வாங்குவதில் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். போலவே எல்லோருக்கும் இலவசம் கூடாது என்ற நிதியமைச்சரின் பதவிக்காலத்தில்தான் எல்லோருக்கும் 4000 ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை கடுமையான நட்டத்தில் இருப்பதாகவும் எல்லோருக்கும் பொதுவாக இலவசம் இருக்கக்கூடாது என்றும் நிதியமைச்சர் சொல்லிக்கொண்டே அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டார் என்று அவருக்கே வெளிச்சம். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே முடியாது என்று அடம்பிடித்த நிதியமைச்சர், பட்ஜெட்டில் வேறு வழியின்றி 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளார். ஆனால்‌ டீசலுக்கு விலைக்குறைப்பு செய்யவில்லை.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் பள்ளிக்கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சுவரொட்டி இல்லா சென்னை’ அறிவிப்பு, அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள சூழலில் சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். முக்கியமாக சிறிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் போன்றோர் தங்கள் விளம்பரங்களுக்கு சுவரொட்டிகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விவசாயத்திற்கு முதன்முறையாக தனி பட்ஜெட் அறிவித்தாலும் ஏராளமான அறிவிப்புகள் மட்டுமே அதிலும் இடம்பெற்றுள்ளன. கரும்பு மற்றும் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பமான கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட உயர்வுத் தொகையோடு இந்த உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பனை மரம் வெட்டத் தடை, பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஓதுவாராகப் பெண்களை நியமித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே. அதே நேரம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலும் மாரியம்மன் கோயில், சிறிய சிவன் கோயில்களில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது முதல்படி என்பதால் குளறுபடிகளைக் களைந்து அனைத்துக் கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் குறிப்பாக 50% அர்ச்சகர்கள் பெண்களாகவும் இருக்கும் நிலையை உருவாக்க அரசு முனைப்புடன் செயல்படவேண்டும். ஏ.கே.ராஜன் கருத்துக் கேட்புக் குழு அமைத்தது தவிர்த்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் திமுக அரசும் முந்தைய அதிமுக அரசின் அணுகுமுறையிலேயே செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதற்கும் ஆட்சியாளர்களாக செயல்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை முன்பு ஆட்சியில் இருந்த கட்சி என்ற முறையில் திமுக அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஊழல் வழக்குகள், சொத்துக்குவிப்பு வழக்குகள் என்று முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்குகள் பாயத்துவங்கியுள்ளன. இதற்கு முன்பாகவும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டுள்ளோம். ஆனால், வழக்குச் செலவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறு பயன்கள் விளைந்ததில்லை. ஊழல் பணம் மீட்கப்பட்டு கஜானாவில் சேர்க்கப்பட்ட வரலாறு இங்கே இல்லை என்பதால் இனியாவது காட்சிகள் மாறும் என நம்புவோம். மொத்தத்தில் நிறைகளும் குறைகளும் வழக்கமான நடைமுறைகளும் கலந்து நடைபோட்டு வருகிறது நூறு நாள் ஆட்சி.

புரட்சியாளர் பெரியார் (2)

புரட்சியாளர் பெரியார் (2)

பெரியார் பக்கம் 20 இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம். https://hexamedia.in/pp3301/ தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர் ஆகிய ஊர்கள் ஆதிதிராவிடர்களுக்கு இழைத்த கொடுமைகள் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதிதிராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில்வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்லமுடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதிதிராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக்குடி மாணவர்கள், அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, ‘வணக்கம் அய்யா’ என்று கும்பிடும் நிலை பெரும்பாலான ஊர்களில் உருவாகிவிட்டது.  நீதியரசர் அ. வரதராஜன், உச்சநீதிமன்றத்தின் முதல் பட்டியல் இன நீதிபதி நீதிமன்றங்களில் உயர்நீதிமன்றம் உட்பட ஆதிதிராவிட நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட ‘மை லார்ட்’ (My Lord) அல்லது ‘யுவர் ஆனர்’ (Your Honour) என்று அழைப்பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.  சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு தொடக்கத்தில் கிண்டலும் ஏளனச் சிரிப்பும் பரிசாகக் கிடைத்தன. ஆனால் கால ஓட்டத்தில் அம்முடிவு நடைமுறையாகி விட்டது. வெறும் சந்தானமாக, ஈசுவரனாக, சிவச்சைலமாக, பக்தவத்சலமாக, நடராசனாக, சாமிநாதனாக, மகாராசமாக, சோமசுந்தரமாகப் பெயரை மடக்கிக் கொள்வதே இக்கால நாகரீகம். துண்டு போட்டுக்கொண்டு நாயனம் வாசிக்கக்கூடாதென்று சிவக்கொழுந்துவுக்கு கானாக்காத்தான் ஆணையிட, அதை எதிர்த்துத் தன்மான இயக்கத்தின் பீரங்கி அஞ்சாநெஞ்சம் அழகிரிசாமி போராடிய நிலையிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி விட்டோம்! 1971 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சென்னையில் நடந்த தமிழ் இசை விழாவில், தொடக்க நாளன்று, மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த அய்வரில் செட்டிநாட்டு அரசர், ஆளுனர் K.K.ஷா தவிர, மற்ற மூவரும் கலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நாயனக் கலைஞர் வீராசாமி, நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு ஆவார்கள். அம்மூவரும் பளபளக்கும் சொக்காய் போட்டிருந்தார்கள்; அழகிய நீண்ட மேல் துண்டு அணிந்திருந்தார்கள். இவற்றையெல்லாம்விட மேலான பெருமை ஒன்றை உணர்ந்தேன். இம்மூவரில் எவரும் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அரசருக்கு, ஆளுனருக்குச் சமமாக உட்காரலாமா என்று சங்கடப்படவில்லை. அத்தகைய சிறப்புக்கே பிறந்தவர்கள்போல், தன்னம்பிக்கையோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இதுதானே பெரியாரின் வெற்றி?!  நட்டுவக் கலைஞர் வழுவூர் ராமையா, இசைக் கலைஞர் மதுரை சோமு எதிர்க்கருத்து கொண்டோரும் புறந்தள்ள முடியாதது சுயமரியாதை இயக்கம். இயக்கத்தைச் சாடிக்கொண்டிருந்த ஒருவரின் வாயால் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை உளமாரப் பாராட்டப்பட்டதை நான் நேரில் கேட்டு மகிழும் பேறுபெற்றேன். பெரியார் ஆதரித்த நீதிக்கட்சியைச் சாடுவதையே காங்கிரசுத் தொண்டாகக் கொண்டிருந்த மூத்த தியாகி ஒருவரின் படப்பிடிப்பு இப்போது நினைவிற்கு வருகிறது. திரு.மீ.பக்தவத்சலம் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த காலம். நான், தமிழ்நாட்டின் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தேன். அலுவல் பற்றி, கல்வி அமைச்சரைக் காண, அவர் இல்லத்திற்குச் சென்றேன். வரவேற்பு அறையில் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிலும் மூத்தவர். தமிழ்நாட்டு காங்கிரசு வட்டாரத்தில் பெரிய புள்ளி. நான் உள்ளே வருவதைக் கண்டதும் அவர் எழுந்து, முன்னே வந்து, என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  ‘நன்றாக இருக்கிறீர்களா?’ என்று நான் அவரைக் கேட்டேன். பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், ‘மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார் எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு அது பற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரைகட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாரட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப் பற்றிப் பரவசமானேன்.  அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றி பெற்றதற்கு அடையாளம். திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும்தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும்.  1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் காஞ்சி மாநில மாநாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லாப் பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசுப் பதவிகளில் உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமை பற்றிய பெரியாரின் கொள்கை வென்றது, பெரியார் வென்றார். இலவசக் கல்வி பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் அவர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று கனவிலும் நனவிலும் பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையையும் ‘எல்லார்க்கும் கல்வி’ என்னும் கொள்கைக்கேற்பப் பண்படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத்திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் களையெடுப்பைச் செய்தார். எல்லாச் சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர்க் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக்கும் தொழில் கல்விக்கும் பரவிற்று.  பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக்கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல்படிப்பிற்குத் தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர்களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் பற்றி போவார்கள். இப்போது பல சாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களைக் கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும்போது சொல்லி முடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின்தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத்தைக் கொண்டுவரச் செய்து வெற்றி கண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள் போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர்களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்தச் சமவாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும்பயனாகும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கித் தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களைப் பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். தற்போது காவல்துறையில் பெண்களும் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றுகின்றனர்.  கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் வருகிறோம். இம்முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டுவிட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடுபட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண்ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ் மொழி பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்குப் புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார். அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுத் தட்பவெப்ப நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டின் வேறெந்த மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூயதமிழ் பேசுவதால் – மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் ‘என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்குவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். ‘தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும்.’ ஆகவே, பிறர் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவும், எளிதாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துகளை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். ‘மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக்

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம். கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்தோண்டியெடுக்கப்பட்டன.நிழலுருவங்கள்இருளின் பூதங்களெனஅகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன. ஒரு நாட்டின் கொடித்துணியைநெய்வதற்குமுன்எத்தனை சவத்துணிகளைநெய்ய வேண்டியிருக்கிறது. களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்துஆயாசமானாள்ஆகஸ்டு ராணி. செய்கூலி சேதாரத்துடன்ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்அணியுமுன்கழுத்தினைக் களவாடியகள்வர்கள். ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன. எட்டப்பன்களின்பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா. இப்போதுவெள்ளையனே வெளியேறு என்றால்சிரித்தபடியே அவன் சொல்கிறான்:“இந்தியனே வெளியேறு.” கவிதை: நா.வே.அருள் படங்கள்: இணையத்திலிருந்து

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து

உலகை உலுக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் போர்கள்

உலகை உலுக்கப்போகும் தகவல் தொழில்நுட்பப் போர்கள்

சத்தமின்றி ஒரு செயலி  வரலாறு மற்றும் நவீன தத்துவவியல் சிந்தனையாளர் யுவல் நோவா ஹராரியின் புத்தகங்களில் ‘ஹோமோ டியஸ்’ முக்கியமானது. எதிர்கால மனித குலத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து அதில் பேசுகிறார். வருங்காலத்தில் நடக்கும் போர்கள் போர்க்களங்களில் நடக்கப் போவதில்லை; கம்ப்யூட்டர் சர்வர்களில்தான் நடக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார். தொழில் நுட்பத்தில் தேர்ந்த நாடு போர்த்திறனிலும் தேர்ந்து விளங்கப் போகிறது என்று வாதிடுகிறார். போலவே கெவின் பெனடிக்ட் எனும் போர்முறை உத்தியாளர், வழமையாக போர் நிகழும் களங்களில் நாளைய போர்களுக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்க்கிறார்: நிலம், கடல், வானம், விண்வெளி, தகவல் தொழில் நுட்பம்  நாளைய போர்கள் மேற்சொன்ன ஐந்து பரிமாணங்களில் நிகழப் போகிறது. போலவே, போர்களில் வெற்றி என்பதன் அர்த்தமும் மாறி விட்டிருக்கிறது. பண்டைய காலங்களில் வேறொரு நாட்டுடன் போர் தொடுத்து வெற்றி பெற்ற மன்னர்கள் அந்த நாட்டின் தங்கம், வெள்ளி, தானியங்கள் போன்றவற்றைக் கொள்ளை அடித்து எடுத்துக் கொண்டு போவார்கள். இன்றைக்கு தங்கம் அல்லது தானியங்கள் வேண்டி எந்த நாடும் போரைத் துவங்கப் போவதில்லை. ஆனால் தகவலுக்காக போர்கள் துவங்கப்படும் அபாயம்தான் இன்று இருக்கிறது. தகவல் அதிகமாகக் கைவசம் இருக்கும் நாடுதான் உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த நாடாக இருக்கப் போகிறது. தங்கத்தை, தானியங்களை பொத்திப் பாதுகாத்து, அவற்றைச் சுற்றி அரண் அமைத்து காத்துக் கொண்டிருந்தது போல தகவல் பொதிந்து கிடக்கும் சர்வர்களை அரசாங்கங்கள் பொத்திப் பொத்தி பாதுகாக்கப் போகிறார்கள். இதுதான் எதிர்காலம்.  அந்த எதிர்காலத்தின் சிறியதொரு டிரெய்லர் சமீபத்தில் நமக்குக் காட்டப்பட்டது. இஸ்ரேல் நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன், அந்நாட்டின் தொழில் நுட்ப நிறுவனம் NSO உருவாக்கிய மென்பொருள் செயலி ‘பெகசஸ்’ நமக்கு அந்த எதிர்காலத்தைச் சற்றே திறந்து காட்டி இருக்கிறது. அந்த எதிர்காலம் ரசிக்கத்தக்கதாக இல்லை. இந்த பெகசஸ் செயலியை ஒரு நபரின் மொபைல் ஃபோனில் அவர் அனுமதி இன்றியே நிறுவி விடலாம். சம்பந்தப்பட்ட நபர் எந்த லின்க்கையும் கிளிக் செய்யத் தேவையில்லை. ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் எதுவாக இருப்பினும் ஒரே ஒரு வாட்சப் மிஸ்டு கால் போதும். பெகசஸ் அவர் ஃபோனுக்குள் புகுந்து கொண்டு விடும். புகுந்த உடனேயே அந்த மிஸ்டு காலின் தடயத்தைக் கூட அதுவே அழித்தும் விடும். இதற்கு Zero-Click Attack என்று பெயர். ஃபோனை உருவாக்கிய கம்பெனிகளுக்கே தெரியாத ஓட்டைகள் பெகசஸ்சுக்கு தெரியும். அதன் வழியே வசதியாக உள்ளே புகுந்து கொண்டு விடும். ஃபோன் உள்ளே நுழைந்ததும் அந்த ஃபோன் வழங்கும் அதி உயர்ந்த உரிமைகளைத் தனதாக்கிக் கொண்டு விடும். இதற்கு Root Privileges என்று பெயர். உள்ளே வசதியாக உட்கார்ந்த நொடியில் இருந்து அந்த ஃபோனில் உள்ள கால்கள், எஸ்.எம்.எஸ்கள், ஈமெயில், ஜிபிஎஸ், இணையப் பயன்பாடு என்று எல்லாவற்றையும் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கும். அந்த ஃபோன் வைத்திருப்பவருக்கு அப்படி நடப்பதே தெரியாமல் இதனைச் செய்ய இயலும். ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவலில் இப்படிப்பட்ட ஒரு செயலியின் பயன்பாடு பற்றிய குறிப்புகள் நிறைய வரும்.  பெகசஸ் இதோடு கூட நிறுத்தாது. தேவைப்படும் பொழுது தானாகவே காமிராவை இயக்கி உங்களைப் படமெடுத்துக் கொள்ளும். மைக்ரோஃபோனை இயக்கி நீங்கள் வீட்டிலோ ஆபீசிலோ பேசுவதை ரெக்கார்ட் செய்து அனுப்பி விடும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள். உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களா, நடக்கிறீர்களா, எந்தத் திசையில் செல்கிறீர்கள் என்றுகூட சொல்லி விடும். தகவல் பாதுகாப்புக்குப் பெயர் பெற்றதாகப் பீற்றிக்கொள்ளும் ஆப்பிள் ஐஃபோன் கூட பெகசஸ்சின் வலையில் இருந்து தப்பிக்க முடியாது.  பெகசஸ்சின் இப்படிப்பட்ட அதி தீவிர செயற்பாடு காரணமாக, அந்தச் செயலியை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே தாங்கள் விற்பதாகவும் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் இந்தச் செயலியை விற்றதில்லை எனவும் இஸ்ரேலிய அரசு தெரிவித்திருக்கிறது. அது கூட தீவிரவாத இயக்கங்களை கண்காணிக்க அல்லது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மட்டுமே பயன்பாட்டு லைசென்ஸ் தருவதாகவும், வேறு அரசியல்-சார் காரணங்களுக்கு உளவு பார்க்க இந்தச் செயலியைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது, இஸ்ரேலின் கூற்று உண்மை எனில், தீவிரவாதச் செயல்களைக் கண்காணிக்க வேண்டி வாங்கிய செயலியை, தங்களது அரசியல் லாபங்களுக்கு பாஜக பயன்படுத்தி இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேசவிரோதமும் கூட. ஆனால் எந்த அலட்டலும் இன்றி இந்திய அரசு இதனைச் செய்து விட்டு, எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.  நிற்க, இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்திய அரசைச் சாடுவதல்ல. அதனை நிறைய பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தத் தொழில் நுட்பத்தின் வசீகரம் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதுதான்.  பெகசஸ் ஒரு பனிப்பாறையின் முனைதான். இப்படிப்பட்ட முயற்சிகளை பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், மற்றும் ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் தொழில் நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டே வருகிறார்கள். 2007ல் எஸ்தோனிய நாட்டு அரசு ஒரு போர் நினைவுச் சின்னத்தை இடம் மாற்றும் முயற்சிகளில் இறங்கியது. இது சோவியத் காலத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால் ரஷ்யாவுக்குக் கோபம் வந்தது. அந்நாட்டு மக்கள் இணைந்து எஸ்தோனியா மீது மாபெரும் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இது படைகளின் தாக்குதல் அல்ல. ரஷ்ய ஹேக்கர்கள் திட்டமிட்டு நடத்திய இணையத் தாக்குதல். இதில் எஸ்தோனியாவின் ஒட்டு மொத்த இணையமும் ஸ்தம்பித்து நின்றது. நாடாளுமன்றம் முதல் அமைச்சரவை வரை யாரும் எதுவும் செய்ய இயலாமல் போனது. ‘நாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை,’ என்று ரஷ்யா கற்பூரம் அணைத்தது; ஆனால் இதில் ரஷ்யாவுக்குத் தொடர்பில்லை என்பதைக் கேட்டு புடின் கூட கொஞ்சம் சத்தமாகச் சிரித்திருப்பார்.  2010ல் ஈரானின் அணுசக்தி நிலையங்களின் கணினிகளில் வைரஸ் போன்ற ஒரு செயலி ஊடுருவியது. அது அணுசக்திக் கருவிகளைத் தாறுமாறாகச் செயல்பட வைத்து பிரச்சினைகளை உருவாக்கியது. பின்னர் அணு மின் நிலையக் கணினிகளில் இருந்து தகவல்களைத்  திருடி ‘தேவைப்படுபவர்களுக்கு’ அனுப்பியது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பது உறுதியானாலும் அந்த வைரஸ் செயலியை உருவாக்கியது அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது. ஆப்பிள் டிவியில் வெளியாகி இருக்கும் ‘தெஹ்ரான்’ எனும் இணையத் தொடர் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட திரில்லர் கதைதான்.  அப்பேர்ப்பட்ட அப்பாடக்கர் அமெரிக்கா மீதே ரஷ்யாவின் தாக்குதல் நடந்தது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்கள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில் சர்வரை ஹேக் செய்து தகவல்களைக் கசிய விட்டு அவருக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தார்கள். அது தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக அமைந்தது. இந்தத் தாக்குதல் சதித் திட்டத்தில் டிரம்பின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறைய புகார்கள் எழுந்து, அது தொடர்பான விசாரணைகள் நடந்தாலும் அறுதியாக எந்த விஷயமும் வெளிவரவில்லை.  போலவே, உக்ரைன் மின் நிலையங்கள், இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பு சர்வர்கள் என்று அதற்குப் பின் பல்வேறு இணையத் தாக்குதல்கள் இதுவரை நிகழ்ந்து விட்டிருக்கின்றன. இவற்றுக்கு பயந்தும், வேறு காரணங்களுக்காகவும் சீனா போன்ற நாடுகள் அனைத்து இணைய சர்வர்களையும் தங்கள் தேச எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றன. அப்படி செய்திருப்பதன் மூலம் இணைய நடவடிக்கைகளை முழுமையாக கண்காணித்து தங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைத் தடுக்க முடிகிறது. ஒவ்வாத என்றால் தீவிரவாத அல்லது குற்ற நடவடிக்கைகள் அல்ல. எண்பதுகளில் தியனென்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் வேண்டி போராட்டங்களைத் துவக்கிய கல்லூரி மாணவர்கள் மீது சீன அரசு ராணுவ டாங்கிகளை ஏற்றி அவர்களையும் அந்தப் போராட்டத்தையும் நசுக்கியது. அந்த சம்பவம் யாருக்கும் தெரியக் கூடாது, அது பற்றி பற்றி யாரும் பேசக்கூடாது என்று கவனமாகப் பாதுகாக்கிறது. போலவே தலாய் லாமாவுக்கு சீனா மற்றும் திபெத்தில் எந்த ஆதரவும் இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறது. சீன எல்லைக்குள் இருந்து கொண்டு நீங்கள் ‘தியனென்மென் சதுக்கப் போராட்டம்’ அல்லது ‘தலாய் லாமா’ என்று இணையத்தில் தேடினால் தேடிய ஓரிரு மணிகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உங்களைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச் எனும் வரலாற்று ஆய்வாளர் உண்மையாகவே சீனா சென்று ஒரு கிராமத்தில் அறை எடுத்து இதனை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் தனது கம்ப்யூட்டரில் தேடிய இரண்டு மணி நேரத்தில் நிஜமாகவே நான்கு பேர் கதவைத் தட்டி விசாரித்தார்கள். இந்த சம்பவத்தை ‘திபெத்… திபெத்…’ எனும் தனது புத்தகத்தில் விவரிக்கிறார்.  இப்படிப்பட்ட உளவு அல்லது கண்காணிப்பு வசதிகள் சீனா போன்ற சர்வாதிகார நாட்டுக்கும் இன்றைய இந்தியா போன்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரசுகளுக்கும் தேவன் தந்த வரம்தான்.  தகவல் தொழில் நுட்பத்தின் வசீகரங்களும் ஆபத்துகளும் தனித்தனியானவை அல்ல. சொல்லப் போனால் பார்க்கும் பார்வையில்தான் தொழில் நுட்பத்தின் சாத்தியக் கூறு இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ்சில் ‘கறுங்கண்ணாடி’, Black Mirror, என்ற சிறுந்தொடர் ஒன்று கிடைக்கிறது. இதில் இன்றைய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் காணக்கிடைக்கின்றன. அறிவியல் புனைவு என்ற வகையில் இந்தக் கதைகள் வந்தாலும் உண்மைக்கு வெகு அருகில் இவை இருப்பது சற்றே நம்மை தொந்தரவு செய்கிறது. விபத்தில் கணவனை இழந்த இளம் மனைவியிடம் அவனைத் திரும்பவும் ‘உருவாக்க’ ஒரு தொழில் நுட்ப நிறுவனத்தை அணுகுகிறாள். அந்த இளைஞனின் சமூக ஊடகப் பதிவுகள், அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள், அவன் ஃபோன் உரையாடல்கள் அனைத்தையும் தொகுத்து அவற்றை வைத்து அவனது ‘குணாதிசயங்களை’ அந்த நிறுவனம் மீளுருவாக்குகிறது. அவனது பல்வேறு புகைப்படங்களை வைத்து அவனைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குக்குகிறது. அவனது குணாதிசயங்கள் கொண்ட ‘செயலியை’ அந்த ரோபோவுக்குள் செலுத்தி விட்ட உடன் அவள் கணவன் ‘தயார்’!  அப்படி உருவாகும் கணவன் ஒரிஜினல் கணவனைப் போலவே பேசுகிறான், பழகுகிறான். சிரிக்கிறான். ஆனால் ஏதோ ஒரு குறை. இயற்கைக் கணவனிடம் இருந்த சில துர்குணங்கள் அந்த செயற்கைக் கணவனிடம் செலுத்தப்படாததால் எப்போதுமே நல்லவனாகவே நடந்து கொள்கிறான். அது அவளை ஆயாசப்படுத்துகிறது.  இப்படித்தான் நமது இணைய நடத்தைகள் நமது குணாதிசயத்தை கம்ப்யூட்டர் சர்வர்களுக்குக் கடத்துகின்றன. பெகசஸ்

புரட்சியாளர் பெரியார்

புரட்சியாளர் பெரியார்

பெரியார் பக்கம் -19 பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையின் பொது இயக்குநர் பொறுப்பில் இருந்த பெருமைக்குரியவர் நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து, அந்தப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவர். இராஜாஜி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் குலக்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சுமார் 3000 ஓராசிரியர் பள்ளிகள் மூடப்பட்டன.  இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தந்தை பெரியார் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக, இராஜாஜி முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு காமராசர் முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தார். அப்போது நெ.து.சுந்தரவடிவேல் அவர்களைப் பயன்படுத்தி காமராசர் வழியாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்கச் செய்தார் பெரியார்.  தொடர்ந்து பெரியார் கல்வியில் பெரும் புரட்சிகளைச் செய்தார். நெ.து.சுந்தரவடிவேல் தன்னைப் பெரியாரின் தொண்டராகவே நினைத்து வாழ்ந்து கல்வித் துறையில் சாதனைகள் பல செய்தவர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நெ.து.சுந்தரவடிவேலு புரட்சியாளர் பெரியார் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதன் சிற்றாவணக் கோப்பு (PDF) அண்மையில் எனக்குக் கிடைத்து. அதை முழுமையாகவும் படித்தேன்.  அந்த நூலின் இறுதிப் பகுதியில், தந்தை பெரியார் அவர்களால் இந்த சமுதாயம் எப்படி மாற்றங்களைப் பெற்றது என்பதைத் தக்க சான்றுகளுடன் விவரித்திருந்தார். அந்த விவரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கல்வியாளர் பார்வையில் பெரியாரின் சமூகப் பணிகள் மிக அருமையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நூலிலிருந்த சில பிழைகளை நீக்கியிருக்கிறேன், தற்காலத்திற்கான சொற்களையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். இனி பெரியார் பற்றி நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பார்வையை அப்படியே தந்துள்ளேன்.  ‘உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வரவேண்டும்’ என்னும் தனது குறிக்கோளை அடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அவர் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டும் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றாரில்லை.  மனதில் பட்டதை எழுத்தில் வடித்து, அச்சாக்கி, வெளியிட்டதோடு அமைதி கொள்ளவில்லை. தற்குறிகள் நிறைந்த நாட்டில் எழுத்தில் வருவதைப் படிக்கும் ஆட்கள் சிலரே. மாறாக, சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்து போராடுவதைப்போல், காலமெல்லாம் செயல்பட்டார் பெரியார். தமிழ்நாட்டில் அவர் கால்படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு சூறாவளிப் பயணம் செய்துகொண்டு இருந்தார். புரட்சிக் கருத்துகளை, மணிக்கணக்கில் விதைத்தார். கேள்விக் கணைகளை வரவேற்பதில், அவற்றைக் கொள்கை விளக்கத்திற்கான நல் வாய்ப்புகளாகப் பயன்படுத்தி, பதில் சொல்வதில், பெரியார் இணையற்று விளங்கினார். இச்செயல்கள் பேரலைகளை எழுப்பின. ஏமாந்த காலத்தே ஏற்றங்கொண்டோர், வேங்கையெனப் பாய்ந்தனர்; நரிகளென ஊளையிட்டனர்; ஆதிக்கப்புரிகள் ஆட்டங் காண்பதைக் கண்டு அஞ்சி அப்பாவி மக்களை, ஏவிவிட்டனர். அவர்கள் தன்னலக் கோட்டையைக் காக்க, எத்தனையோ சாகசங்களைக் கையாண்டார்கள். திண்ணைக்குத் திண்ணை தூற்றல்கள். மேடைகளில் அவதூறுகள். ஆசிரியர் கடிதங்களின் வழியாகத் தூண்டுதல்கள். ஆட்சியாளரை நெருக்கி வழக்கு போடுதல். இத்தனைக்கிடையிலும் தெளிந்த அறிவுடையோர், முற்போக்குக் கருத்துடையோர், தந்தை பெரியாரையும் அவருடைய இயக்கத்தின் அடிப்படைச் சிறப்புகளையும் அப்போதைக்கப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கவனிப்போம்.  ஆக்ஸ்போர்டு அறிஞர் பாராட்டு ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. பெசில் மாத்யூஸ் என்பவர், ‘புறத் தோற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வே. ராமசாமி வில்லியம் மாரிஸ் போன்றவரே’ என்பதை அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த 2,3 மணி நேரத்திற்குள் கண்டுகொண்டேன். பொருளற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்து எறியவேண்டும் என்னும் அந்தத் துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் பழமைப் பாசி படர்ந்துவிட்ட கருத்துகளையும் உடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்னும் அந்த உறுதிப்பாடு, இவை அத்தனையிலும் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரிஸ் அவர்களைப் போலவே செயல்படுகிறார்.  மாரிசைப் போலவே ஈ.வே.ராவும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார். ‘சொந்த அச்சகத்தின் வாயிலாகவே, சொந்தக் கருத்துகளைப் பொதுமக்களுக்கு உரைப்பது வில்லியம் மாரிசுக்கும் ராமசாமிக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதையும் கண்டேன். தோழர் ஈ.வே.ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக்கிறதே, அதன் பெயராகிய புரட்சி (Revolt) என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய்ச் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்’ என்று பெரியாரின் உண்மையான உருவத்தைக் காட்டினார். பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக விளங்கிய, பனகல் அரசர் சர்.பி.ராமராய நிங்கவாரு, 1928இல் ஈ.வே.ராமசாமியைப் பற்றி ‘மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் ஈ.வே.ராமசாமி தற்காலத்தில் பெரிய சமூகச் சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முன்னேற இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும் மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாராயிருக்கிறார். ‘சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் பல ஆண்டுகள் பாடுபட்டுப் பயன் பெறாமல்போன வேலையைச் சில ஆண்டுகளில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்’ என்று உரைத்தார்.  சென்னை மாகாண ஆளுநர் பிற்காலத்தில், சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த சர்.கே.வி.ரெட்டி நாயுடு 1928இல் பெரியாரை எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்ப்போம். ‘தனக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழுவேலையாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று சிறப்பான குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்கள் அமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக் கொண்டுவருவது என்பது. ‘தோழர் ராமசாமி உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் அச்சமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய அச்சமின்மை இருந்தாலொழிய இத்தகைய செயல்களில் யாரும் வேலை செய்யமுடியாது. ‘அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தாயாராயிருக்கிறவர். ‘பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தியதுபோல, தோழர் ராமசாமி தமது பேனாவை அச்சமின்றி எங்கும் செலுத்துகிறார்’ என்று புகழ்ந்துரைத்துள்ளார். எஸ்.குமாரசாமி ரெட்டியார் தன்மான இயக்கத்தின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டோடு நிற்கவில்லை. அது பிற மாநிலங்களிலும் தொலைத்தொடர்புகள் அற்ற காலத்திலேயே பரவிற்று. ‘இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் நாட்டில் எவ்வளவு பரவியிருக்கிறதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாநிலங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவைகளில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்’ என்று 20.7.1929இல் திருநெல்வேலியில் நடந்த, மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், அம் மாநாட்டைத் திறந்துவைத்த எஸ்.குமாரசாமி ரெட்டியார் விளக்கினார். எஸ். இராமநாதன் பெரியாரோடு சேர்ந்து காங்கிரசு தொண்டாற்றி, கதரைப் பரப்புவதில் துணை நின்று, பின்னர், வகுப்புரிமைக்குப் போராடும் பொருட்டு, காங்கிரசை விட்டுப் பெரியாரோடு வெளியேறியவர், எஸ். இராமநாதன், எம்.ஏ.,பி.எல். ஆவார். அவர் தன்மான இயக்கத்தில் பல்லாண்டு, பெரியாருக்குத் துணையாக விளங்கியவர். அவர் பெரியாரைப்பற்றிக் கூறும்போது, ‘வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். அந்தந்த நாடுகளில் இவரது கொள்கை நிலைக்கக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் உரிமைப் போராட்டம் புரிகின்றாரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்’ எனக் குறிப்பிடுகிறார். கலப்புத் திருமணம்  பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, பெரியார் ஈ.வே.ராமசாமி அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடுபட்டதன் விளைவாகக் கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இயக்கத்தின் ஒத்துழைப்பிலும் இயக்கத்திற்கு அப்பாலும் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. எல்லாச் சாதிகளிலும் எல்லாப் பெரிய குடும்பங்களிலும் பிற சாதிக் கலப்பு மணம் நடைமுறை வாழ்க்கையாகிவிட்டதைக் காண்கிறோம். சாதிக்குள்ளேயே திருமணம் என்பதை அநேகமாக, சமுதாய ஏணியின் கீழ்படிக்கட்டுகளிலும், பொருளியலில் அடிமட்டத்திலும் இருப்போர் மட்டுமே பின்பற்றி வருகிறார்கள். புரோகிதமற்ற திருமணங்கள், அய்ம்பதாண்டு காலத்தில், இலட்சக்கணக்கில் நடந்துள்ளன. ‘இராகு கால’ திருமணங்களும் எண்ணற்றன.  1967ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தை முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றி வைத்தது, தன்மான இயக்கத்திற்குப் பெரும் வெற்றியாகும். புரோகிதர்களை, சடங்குகளை, நீக்கிவிட்டுத் திருமணம் செய்துகொண்டோர், வைதீக முறையிலேயே திருமணம் செய்து கொண்டவர்களைவிட அதிக சிறப்போடு வாழ்வதைக் காணும் இளைஞர் உலகம், அடுத்தபடிக்கு முன்னேறுவதாக; பதிவுத் திருமணங்களைச் சிக்கனமாகச் செய்து கொள்ளும் பழக்கத்திற்கு வருவதாக செய்திகள் கூறுகின்றன. கோயில் நுழைவு தீண்டாமை குற்றம் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள் ளது. இது பெரியாரின் கொள்கைக்கு வெற்றியாகும். வழக்காடத் துணிவிருந்தால் எவ்வகையில் எவ்வுருவில் தீண்டாமையைக் காட்டினாலும் அவர் தண்டிக்கப்படுவார். அண்மையில் தமிழ்நாட்டில் ஓர் ஊரில், ஆதி திராவிடர் ஒருவருக்குக் கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றியதற்காக, ஓட்டல்காரர் தண்டிக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பதற்காகப் போராடிய பெரியார், வைக்கத்தில் வெற்றி கண்டார். கல்பாத்தியில், சுசீந்திரத்தில் அதன்பின் விளைவைக் கண்டார். தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் எல்லாச் சாதியாரும் போகலாம் என்னும் சட்டம் நடைமுறையில் இருப்பதை, பெரியார் தம் வாழ்நாளிலேயே கண்டார். சமுதாயத்தின் கீழ்ப் படிக்கட்டுகளில் உள்ள பல சாதியார் சமைப்பதை மற்ற சாதியார் ஒன்றாய் இருந்து உண்பதை நடைமுறையாக்கிவிட்டார். சாதி ஏற்றத்தாழ்வைக் காட்டும் அடையாளமாக, ஓட்டல்களில், ‘பிராமணாள்’ என்னும் அறிவிப்பு அநேகமாகப் பறந்து போய்விட்டது. பொதுக் குளங்கள், கிணறுகள், வீதிகள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தும் நிலை உருவாகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிற்சில சிற்றூர்களில், விட்டகுறை தொட்டகுறையாக, சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது. அவ்விடங்களிலும் எல்லா வகையிலும் வேற்றுமை அடியோடு தொலைவதற்காகப் பாடுபடவேண்டியது நம் கடமையாகும்.  இன்றைய நடைமுறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ்நாட்டு கோயில்களில் கருவறைக்குள் செல்லலாம். இம்முறை பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்துதலாகும். எனவே கோயில் கருவறைக்குள் எல்லோரும் நுழைவதற்காகக் கிளர்ச்சி செய்யப் பெரியார் திட்டமிட்டிருந்தார். அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் மறைந்துவிட்டார். பின்தலைமுறைக்கு அத்தொண்டை விட்டுவிட்டுப் போயிருக்கிறார். யாவர்க்கும் ‘அர்ச்சகர்’ தொழில் உரிமை சாதி வேற்றுமையின்

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

“ஈ.வே.ராமசாமியாகிய நான், தமிழர்களின் மீதான சூத்திரப் பட்டம் என்னும் இழிவைத் துடைத்தெறிய யாரும் முன்வராத காரணத்தால், நானே அந்தப் பணியை என் தோளில் சுமந்து செல்கிறேன்” என்று தமிழர்களுக்காகத் தானே முன்வந்து பகுத்தறிவுச் சிந்தனைகளை, சுயமரியாதைச் சிந்தனைகளை விதைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார். அவரின் பெருமைகள் எதையும் அறியாத 5 வயதில் 1965-இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதல்முறையாகப்  பெரியாரைப் பார்த்தேன். அப்போது பெரியாரின் எந்தக் கருத்துகளும் என்னை ஈர்க்கவில்லை. ஆண்களும், பெண்களும் என் போன்ற குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த போது எனக்கு ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.மாநாடு காலையில் தொடங்கியது. பலரும் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் மேடையில் இருந்த பெரியாரிடம் சென்று, அவரை வணங்கி, அவர் கையில் கட்சி வளர்ச்சி நிதிக்கு, விடுதலை வளர்ச்சி நிதிக்கு என்று ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கொடுத்துக் கொண்டி ருந்தார்கள். பெரியார் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வளர்ச்சி நிதியை வாங்கிக் கொண்டிருந்தார். என்போன்ற சிறுவர், சிறுமியர் வளர்ச்சி நிதி கொடுத்தபோது, சிறுவர்களை “வாங்க ஐயா”, என்றும் சிறுமியை “வாங்க அம்மா” என்றும் விளித்தார். வளர்ச்சி நிதியைப் பெரியார் கையில் கொடுத்தபோது, சிறுவர்களின் கரங்களைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். 5 வயதிலிருந்து நான் என் மூத்த சகோதரி சண்பக வல்லியின் வீட்டில் திருச்சி வரகனேரி பெரியார் நகரில் வாழ்ந்து வந்தேன். என் சகோதரியின் கணவர் என் மாமா ஓ.வேலு அவர்கள் (80களில் திருச்சி நகரத் தி.க. துணைத் தலைவர் பொறுப்பிலிருந்தார்) என்னை மதுரை மாநாட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். பெரியார் சிறுவர்களுக்குக் கைகளில் முத்தம் கொடுப்பதைப் பார்த்து, என் கையில் 25 பைசா கொடுத்து, பெரியாரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் மேடைக்குச் சென்றேன். பெரியாரை நெருங்கியவுடன், பெரியார் என்னைப் பார்த்து, “வாங்க அய்யா” என்று கைகூப்பி வரவேற்றார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, நன்கொடையாக 25 பைசாவைப் பெரியாரின் கைகளில் கொடுத்தேன். என் இரு கரங்களையும் பெரியார் பற்றிக் கொண்டு, கரங்களில் முத்தம் கொடுத்தார். அந்த நேரத்தில் பெரியாரைவிடவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது, அவரின் இருபக்கங்களிலும் இருந்த நாய்கள்தான். பெரியாரிடமிருந்து விலகிச் சென்ற நான், இருபக்கங்களிலும் இருந்த நாய்களின் தலைகளைத் தடவிக் கொடுத்தேன். பெரியாரும் ஒன்றும் சொல்லவில்லை. மேடையை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக மாநாட்டு மணலில் அமர்ந்தேன். என் பார்வைகள், சிந்தனைகள் அனைத்தும் பெரியாருக்குப் பக்கத்திலிருக்கும் நாய்கள் மீதே இருந்தன. பகல் உணவு இடைவேளைக்கு, பெரியார் மேடையிலிருந்து வெளியே சென்றார். நாய்களும் பெரியாருடன் சென்றன. மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மீண்டும் தமுக்கம் மைதானத்திற்கு வேனில் வந்தார். வேன் நின்றவுடன் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அந்த இரண்டு நாய்களும் மேடையே நோக்கி வந்து பெரியார் அமரும் இடத்தின் வலப்புறம் இடப்புறம் அமர்ந்து கொண்டன. பின்புதான் பெரியார் வந்தார். மாலை நேரத்தைத் தாண்டி இரவு 7.00 மணியளவில் பெரியார் பேசத் தொடங்கினார். இரவு 9.00 மணிக்குப் பெரியார் தன் உரையை முடித்தார். அதுவரை அந்த நாய்கள் பெரியாரை விட்டு அகலவில்லை. சிறுநீர் கழிக்கவோ, உணவு அருந்தவோ அந்த நாய்கள் செல்லாதது என்னை பிரமிக்க வைத்தது. பெரியாரின் கருத்துகளால் மனிதர்கள் பெரியார் மீது அன்பு வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட என்னால், நாய்கள் ஏன் பெரியார் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றன என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து பெரியார் பற்றிய செய்திகள் ஒளிப்படங்கள் வழியாக “தந்தை பெரியார், தான் உணவு முன் நாய்களுக்கு உணவு வைக்கச் சொல்லுவார். நாய்களைக் கட்டிப் பிடித்தப்படி படுக்கையில் அமர்ந்திருப்பார். மணியம்மை அவர்களும் பெரியார் நாய்களிடம் கட்டிய அன்புக்கு நிகராகவே அன்பு காட்டினார்” என்ற செய்திகளை அறிந்தேன். நாய் மனிதர்களிடம் அன்பு காட்டக்கூடிய விலங்கு. எளிதில் மனிதர்களிடம் பழகிவிடும் தன்மை கொண்டது. மனிதர்கள் பிரம்மாவின் தலையிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்ததாக மனுஸ்மிருதி சொல்வதாய்ப் பிறப்பில் வேற்றுமை பாராட்டுபவர்கள் குறிப்பிடுவார்கள். இதைக் கடுமையாகத் தந்தை பெரியார் எதிர்த்தார். அந்தக் காலத்து அரிஜன்கள் இந்தக் காலத்துத் தலித்துகள் பெரியாரிடம் சென்று, “ஐயா…. தலையில் பிராமணனும், தோளில் சத்திரியனும், தொடையில் வைசியனும் காலில் சூத்திரனும் பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாங்கள் எங்கே ஐயா பிறந்தோம்” என்ற கேள்விக்குத் தந்தை பெரியார்,“அவர்கள் பிறக்கக்கூடாத இடத்தில் பிறந்துள்ளார்கள். நீங்கள்தான் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தவர்கள்” என்று கோபமும் கேலியுமாய்ப் பதில் கூறியுள்ளார். நாயைப் பைரவன் என்று கடவுளின் வாகனமா வைத்திருந்தாலும் புராணங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நாய் என்பது இழிவு பொருளில்தான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடவுளின் முன்பு நாயினும் கீழானவன் என்னும் பொருள்பட “நாயினும் கடையேன்” என்று பக்தி இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதை வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த பெரியார் நாய்களை மனிதர்களுக்கு இணையாக மதித்துள்ளார். நாய்களும் பெரியாரின் பண்பை மதித்திருக்கின்றன என்பதை நாய்கள் காட்டிய அன்பின் வழியாகப் பின்னாளில் என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. 1969-இல் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது என் சகோதரி,  மாமாவோடு லாரியில் திருச்சி வரகனேரியிலிருந்து பிப்.3ஆம் நாள் இரவு சென்னைக்குச் சென்றோம். லாரியில் ஆண்கள் பெண்கள் எனச் சுமார் 50 பேர் இருந்தார்கள். அனைவரும் சென்னை செல்லும்வரை அழுதுகொண்டே வந்தார்கள். சென்னை சென்று சேர்ந்தும் அழுது கொண்டே இருந்தார்கள். என் சகோதரியும் இதில் அடக்கம். அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை யாரும் சாப்பிடவில்லை. அண்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டம்தான் எனக்கு அரசியலைப் புரிய வைத்தது. அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார், “என் தலைமகனை இழந்து புத்திர சோகத்தில் இருக்கிறேன்” என்று வெளியிட்ட அறிக்கையின் வழியாக அண்ணாவையும் பெரியாரையும் புரிந்து கொண்டேன். அப்போது எனக்கு 9 வயது. தொடர்ந்து பெரியார் கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்வது என்பது என் வழக்கமாகிவிட்டது. பகுத்தறிவுக் கண்காட்சியில் புராணக் குப்பைகளைச் சாடி வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்து என் அறிவை, அறிவியல் உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்போது தொடங்கித்தான் பெரியாரின் நாய்களிடமிருந்து என் பார்வையை விலக்கிக் கொண்டு, பெரியாரின் கருத்துகள் மீது கவனம் கொண்டேன். திமுகவிற்காக 1971இல் என் தந்தை மற்றும் சகோதரர்களோடு 1971இல் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக உரையாற்றினேன். பெரியாரின் பேச்சுகளையும், திராவிடர் கழகச் சிறு வெளியீடுகள் வழியாகப் பெரியாரை முழுமையாக அறிந்துகொண்டேன். 1973 டிசம்பர் 24ஆம் தேதி பெரியார் இயற்கை எய்தினார். அப்போது 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியாரின் மறைவு செய்திக் கேட்டு எல்லாரும் அழுதுகொண்டிருந் தார்கள். ஒரு மரணத்திற்காக நான் முதன்முறையாக அழுதது தந்தை பெரியாருக் காகத்தான். அன்று இரவு திருச்சியிலிருந்து இரயில் மூலம் பெரியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இரயில் மூலம் சென்றோம். என் சகோதரர்களும் வந்திருந்தனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எங்களோடு வந்திருந்த வரகனேரி மருதமுத்து நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தார். பெரியார் மரணமும் எங்களின் உறவினர் மருதமுத்துவின் மரணமும் எங்களைப் பெரும் வருத்தம் கொள்ளவைத்தது. பெரியாரை 5 வயதில் அறிந்த நான் 10 வயதில் முழுமையாகப் புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு வயது 60. பெரியாரியச் சிந்தனைகளிலிருந்து வழுமால் நழுவாமல், பெரியாரியச் சிந்தனைகளை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்னை வளர்த்த என் மாமா ஓ.வேலு அவர்கள் பொன்மலை இரயில்வேயில் பணியாற்றி 80களில் ஓய்வு பெற்று, திராவிடர் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். பின்னர் 1992ஆம் ஆண்டு பெரியார் மறைந்த டிசம்பர் 24ஆம் நாள் காலை 7.00 மணிக்குப் பொன்மலை மருத்துவமனையில் இயற்கை எய்தினார். பெரியார் எங்கள் வாழ்வோடு இணைந்து எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லா உண்மையாகும்.

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

கேள்வி எழுப்புகிறார் முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம், புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் மாநில அரசு இவர்களுக்கு வழங்கி வரும் அத்தியாவசிய உதவித் திட்டங்கள் குறித்துப் பேசினோம். ‘‘எங்கள் அரியலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயம் பொய்த்துப் போன மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதனால் இம்மாவட்ட மக்கள் தங்களது வருமானத்தை ஈடுகட்டும் நோக்கில் பல்வேறு மாவட்டங் களுக்கும் மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து போய் விட்டனர். ஏற்கனவே உள்ள வறட்சி மற்றும் பொய்த்துப் போன விவசாயத்திற்கு மத்தியில் இந்த கொரோனா விவகாரத்தில் மிகப் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது அரியலூர் மாவட்டம். ஏனெனில் கோயம்பேடு சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாவட்டைச் சேர்ந்தவர்களே. கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை பச்சை மண்டலமாக இருந்த இந்த பகுதி. திடீரென சென்னைக்கு அடுத்த இடத்தில் வந்துள்ள விவகாரம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தினசரி வருமானம் முடக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு வேலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை இழந்து இருப்பிடங்களைத் துறந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காமலும் சரியான வழிகாட்டுதலைக் கூறாமலும் மாநில அரசு இவர்களை அலைக்கழித்துள்ளது. நிலைமை கைமீறிப் போன நிலையிலேயே விஷயம் எனது கவனத்திற்கு வந்த வேளையில், உடனடியாக களத்தில் இறங்கி  அவர்களுக்குச் சோதனை செய்யவேண்டும், உதவிகள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தினசரி வருமானத்தில் அடிப்படையிலேயே இம்மாவட்ட மக்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருப்பதால் கடந்த 75 நாட்களுக்கு மேல் இவர்களின் வருமானம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி குடும்பம் குடும்பமாய் இடம் பெயரும் தொழிலாளர்களின் குருதி தார்ச் சாலைகளில் சுவடுகளாகப் பதிகிறது. மூட்டை முடிச்சுகளுடன்  இவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று கூறுவதன் வழியாக தங்களால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்கின்றன. சைக்கிளில் 1400 கிலோமீட்டர் பயணித்த சிறுமியைப் பற்றி பரிதாபம் கொள்ளும் யாரும் இந்த நிலைக்கு காரணம் யாரென்று விவாதிக்க மறுக்கிறார்கள். இந்தியாவின் குடிமக்கள் ரயிலில் அடிப்பட்டு குடும்பத்தோடு இறந்து போவதெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் அறிவார்களா? ‘‘புலம்பெயர் தொழிலாளர்களின் சூட்கேசை ராகுல் காந்தி இழுத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதானே’’ என்று பேசுகிறார் மத்திய நிதியமைச்சர். ஒரு அமைச்சர் பேசும் அவை நாகரீகமா இது? குஜராத் மாடல் என பொய் கூறிய கூட்டம்தான் இன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. மக்கள் நிம்மதியை இழந்து வெகுநாட் களாகி விட்டது. தற்போது அரசு அறிவித்து வரும் எந்தத் திட்டங்களும் சராசரி குடிமக்கள் எவருக்கும் உபயோகப்படாத நிலையில், இந்த அரசு யாருக்காக செயல்பட்டு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?” எஸ்.எஸ்.சிவசங்கரின் காட்டமான இந்தக் கேள்விக்கு மத்திய மாநில அரசுகளிடம் நிச்சயம் பதில் இல்லை!