கோயில் காடுகள்

கோயில் காடுகள்

இயற்கையின் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டுமாயின், மனிதர்களால் இயலக்கூடியது பசுமைப் பரப்பினை அதிகரிப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும்தான். அன்று முதல் இன்று வரை பசுமைப் பரப்பு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறது. கடந்த நூறாண்டு காலத்தில் தகவமைத்தல் என்பதைத் தாண்டி, அழித்தலில்தான் மனிதர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நமது முன்னோர்கள் நீர் மேலாண்மை, பாதுகாப்பு போன்றவற்றிற்காக, கோயில்கள்தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிக்கும் முறையினைப் பின்பற்றி வந்துள்ளனர். தமிழின் நீதி இலக்கியங்களில் ஒன்றான ‘சிறுபஞ்சமூலம்’ இயற்கையின் அறம் மற்றும் சூழலியல் நீதியையும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே போதித்துள்ளது.•குளம் வெட்டுபவர்•மரம் நடுபவர்•நீர் வழிந்தோட வாய்க்கால் வெட்டுபவர்•விளைநிலம் உருவாக்குபவர்•பொதுக் கிணறு அமைப்பவர்ஆகிய ஐந்து செயல்களைச் செய்பவர்கள் பூமியில் நல்லவண்ணம் வாழ்வார்கள் என்றும் சொர்க்க வாழ்வை அடைவார்கள் என்றும் சொல்கிறது. குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்துஉளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டுப்பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்ஏகும் சுவர்க்கம் இனிது இலக்கியம் சொன்னதற்கேற்ப, நமது முன்னோர்கள் நீர்நிலைகள், பசுமைவெளிகள் என இவ்விரண்டையும் மிகக் கவனமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். சமதளத்தில் வளர்ந்துள்ள மரங்கள் ஒருங்கே சேர்த்து காடாக மாறிய சூழலில், அதனைக் கோயில் காடுகள் என்று அழைக்கிறோம். அதில் பெரும்பான்மையாக இருக்கும் மரத்தை அந்த ஊர்க் கோயிலின் தல விருட்சமாகக் கருதுகின்றனர். இவ்வாழ்வியலில் சில கலப்புகளும் இடையூறுகளும் ஏற்பட்டபின்னர், இந்த தெய்வத்தின் கோயிலுக்கு இதுதான் தல விருட்சம் என்ற பொதுப்புத்தியும் வளரத் தொடங்கிவிட்டது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். இப்படி மரங்களையும் நீர்நிலைகளையும் உருவாக்கி, போற்றி வளர்த்த மக்கள் காடுகளைப் போற்றுவதையும் தங்கள் வாழ்வியல் முறையாகக் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள காலகட்டத்தில், கோயில்களை நவீனப்படுத்தி புதுமையாகவும் பெரிதாகவும் புதுப்பித்துக் கட்டுகையில் குளங்கள் தூர்க்கப்பட்டு, மண்ணாலும் கற்களாலும் நிரப்பி மூடப்பட்டுவிடுகின்றன. இடம் விசாலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தல விருட்சம் உட்பட்ட மரங்களும் பிடுங்கி எறியப்படுகின்றன. உதாரணமாக, சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 2000த்திலேயே கோயில் நிலப்பரப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தெப்பக்குளத்தை மூடி, கிணற்றை மட்டும் விட்டுவைத்தனர். அதையும் 2013இல் புணரமைப்பு செய்தபோது மூடிவிட்டனர். தல விருட்சமான வன்னி மரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக, தல விருட்சமற்ற கோயிலாகத்தான் அந்தக் கோவில் இருந்து வருகிறது. அதே சமயம், கரூர் மாவட்டம் வாங்கல் என்ற ஊரிற்கு அருகிலுள்ள நெரூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘சத்குரு சதாசிவ பிரமேந்திர ஜீவ சமாதியில்’ உள்ள வில்வமரம் பட்டுப்போக (வாட) ஆரம்பித்தபோது, அம்மரத்தினுடைய திசுக்களைக்கொண்டு மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் பழைய மரத்துடன் சேர்ந்து அந்த ஆலயத்தில் செழித்து வளர்ந்துள்ளன. இது நிகழ்ந்தது 2002ஆம் ஆண்டில். “என்னாட்டுடைய இயற்கையே போற்றி…!” என்றிருந்த சமுதாயம் தடம்மாற, வழிபாட்டு முறைகளின் பல்வேறு காரணிகளேகூட இடையூறாக இருக்கின்றன. தெய்வ வழிபாட்டு இடங்கள் வழிபாடிற்காக மட்டுமல்லாமல், ஆடம்பரத்தையும் சமூகப் பெருமையையும் பறைசாற்றும் இடங்களாக மாறிவிட்டிருக்கின்றன. கோயில் காடுகள் என்பன, ஊருக்கு வெளியே கிராம தேவதைகளுக்களாக, கிராமத்தைப் பாதுகாக்கும் தெய்வங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். அரிய வகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை பலவிதமான தாவரங்கள் வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்துவருகின்றன. அந்தந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப இயற்கையாகக் காணப்படும் எல்லாவகை மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் சிறு விலங்குகளும் புழு பூச்சிகளும் அக்காடுகளில் சுதந்திரமாகப் பல்கிப் பெருகின. உயிரியலுடன் பிணைக்கப்பட்ட குட்டிக் காடுகளாகத்தான் அவை காட்சியளித்தன. கற்களால் வடிக்கப்படாத சிலைகளே இங்கு பிரதானம், சுடு மண்ணால் செய்யப்பட்ட கிராம தெய்வங்களின் திருவுருவங்களுடன் காட்சி கொடுத்த ‘கோயில் காட்டுத் தலங்கள்’ தற்போது வேண்டுதல், பிரார்த்தனை, நேர்த்திக் கடன்கள் என்ற பெயர்களில், அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்களாகப் பெரிதாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளத்திலும் இதற்குச் சிறப்பான இடம் தரப்பட்டிருந்தது. கோயில் காடுகள் அங்கு ‘காவுகள்’ என்ற பழந்தமிழ்ப் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலே கண்ட சிறுபஞ்சமூலப் பாடலில் ‘காவு‘ என்ற சொல் மரம் என்ற பொருளில் வருவதைக் காணலாம். அதனால்தான் கேரளாவின் பல ஊர்களின் பெயரோடு காவு, காவிலை என்ற பெயர்கள் ஒட்டி வரும். வல்லியூர்காவு, கலியக்காவிளை, ஆரியங்காவு, புத்தன்காவு என்று காவுகளைப் பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் விளங்கிவருகின்றன. காவுகள் எனப்படும் இந்தக் ‘கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும்’ என்பது அவர்களின் பழமொழிகளுள் ஒன்றின் பொருளாகும். பல்வேறு நாகரீகங்களில் கோயில் காடுகள் இருப்பதற்கான சான்றுகள் மானுடவியல் ஆராய்சிகள் மூலம் தெரியவருகின்றன. இதனை ஆங்கிலத்தில் Sacred Groves என்று அழைப்பார்கள். அணில், ஓணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான உயிரினங்களும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்துவருகின்றன. இத்தகைய கோயில் காடுகள், குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் இணைந்திருக்கும். இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள், அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதனால் காடுகளைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ஊர்களிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. பலவகைப் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையவை. இந்தக் கோயில் காடுகளில் ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும் தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்தக் காடுகளை ஒட்டி ஒரு சிறிய குளமாவது இருக்கும். அதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவரும் வகையில் இவை அமைந்துள்ளன. சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வுக் கல்வி மையத்தின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன. கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக்கொண்ட இந்தக் கோயில் காடுகள், சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின்படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமாக ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவையாகும். இவற்றில் சில கோயில் காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் காப்புக் காடுகளாக (Reserved Forest) வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் குறைந்தபட்சப் பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது. நம் கலாச்சாரத்துடன் இணைந்த கோயில் காடுகளைப் போற்றிப் பேணி, அழியாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் கொடுப்பது நம் பொறுப்பு ஆகும்.

துள்ளிக் குதிக்கும் ஜீன்கள்

துள்ளிக் குதிக்கும் ஜீன்கள்

மக்காச்சோளக் கதிரில் இருக்கும் முத்துக்கள் சில சமயம் இயல்பான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட புள்ளிகள், சிவப்பு, நீலம் என வேறு வண்ணங்களில் காணப்படுவது உண்டு. இது எதனால் நிகழ்கிறது என்பதை, பார்பரா மெக்ளின்டோக் கண்டறிந்தார். பார்பரா மெக்ளின்டோக் ஜூன் 16, 1902-ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரையும் சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகள். அவர்களை வளர்க்கப் போதுமான பொருளாதார வசதி இல்லாதாதால், மூன்று வயதிலிருந்தே  உறவினர் வீட்டில் வளர்ந்தவர். பெண் என்ற ஒரே காரணத்திற்காக, கார்னெல் பல்கலைக்கழகம் அவருக்குப் பேராசிரியர் பதவியைத் தர மறுத்தது. செல்லில் காணப்படும் குரோமோசோம் மாறுபட்டால் தாவரத்தின் வெளிப் பகுதிகள் மாறுபாடு அடையும். இதைப்பற்றிப் படிக்கும் பிரிவுக்கு சைட்டோ ஜெனட்டிக்ஸ் என்று பெயர். சைட்டோ என்றால் செல். ஜெனட்டிக்ஸ் என்றால் மரபியல். பார்பராவின் ஆய்வு வழிகாட்டிக்கே (Guide) இது முற்றிலும் புதிய துறையாக இருந்தது. உயிர்கள் அனைத்தும் செல்களால் ஆனவை. செல்களை நுண்ணோக்கியில் பார்த்தால் அவற்றுக்குள் இருக்கும் நிறைய நுண் பகுதிகள் தெரியும். அவற்றில் முதன்மையானது உட்கரு. இது மேம்பாடு அடையாத உயிரிகளான பாக்டீரியா போன்றவற்றில் மேலுறை இல்லாமல் காணப்படும். அதனை நியூக்ளியாய்டு என்பார்கள். நம் செல்களில் இருப்பது நியூக்ளியஸ். இதற்குள் குல்பி ஐஸ் போன்று இருப்பவை குரோமோசோம்கள். அதற்குள் DNA நன்றாக சுருட்டி சுற்றப்பட்டு இருக்கும். பார்பரா முதலில் மக்காச்சோளத்தில் காணப்படும் குரோமோசோம்களை ஆராய்ந்தார். அவற்றை நேரடியாக நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க முடியாது. இதற்காக குரோமோசோம்களை முதலில் சாயமேற்றும் கார்மைன் முறையைக் கண்டறிந்தார். மொத்தம் பத்து ஜோடி குரோமோசோம்கள் மக்காச்சோள உட்கருவில் இருந்தன. அவற்றில் ஒன்பதாவது ஜோடி குரோமோசோம்கள் விநோதமாகச் செயல்பட்டன. இரண்டு பகுதிகள் அதற்குக் காரணமாக இருந்தன. ஒன்று பக்கத்தில் உள்ள ஜீனை ஒதுக்கி வைத்து அதன் செயல்பாட்டைத் தடுத்தது. இன்னொன்று அந்த ஜீனை செயல்பட வைத்தது. இவற்றுக்கு முறையே Ds- Dissociation, Ac-Activator என்று பெயரிட்டார். DNAவின் குறிப்பிட்ட ஒரு பகுதி ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் காரணமாக இருந்தால் அதனை ஜீன் என்று சொல்வார்கள். மேம்பாடு அடைந்த உயிரிகளில் இப்படி வேலை செய்யும் பகுதியும் (Exons), சும்மா இருக்கும் பகுதியும் (Introns) ஒன்றுகொன்று மாறி மாறி அமைந்திருக்கும். செயல்படும்போது எக்சான்கள் ஒன்றாக இணைந்துவிடும். DNAவில் உள்ள நைட்ரஜன் கார வரிசையில் (A,T,G,C) ஏதேனும் மாறுதல்களைக் கட்டாயப்படுத்தி மேற்கொண்டால் அவற்றின் வரிசை அமைப்பு குலையும். இவை கதிர்வீச்சு போன்ற புறக்காரணிகளால் நிகழ்வதுண்டு. இதற்கு திடீர் மாற்றம் (Mutation) என்று பெயர். செல்லுக்குள் இருக்கும் DNA-வின் வரிசை மாறினால், வெளிப்புறத் தோற்றத்தில் மாறுதல்கள் ஏற்படும். இத்தகைய மாறுபாடுகள் இயற்கையாகவே நடக்கின்றன. அதற்குக் காரணம் ஓரிடத்தில் இல்லாமல் தாவிக் குதிக்கும் ஜீன்கள். இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சொன்ன அரிதான சில மக்காச்சோள முத்துக்கள்  விதவிதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இதனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் என்று அழைத்தனர். பின்னர் நகரும் மரபியல் கூறுகள், ட்ரான்ஸ்போசான்கள், குதிக்கும் ஜீன்கள் போன்ற பெயர்களை வழங்கினார்கள். மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிஹர் மெண்டலின் கண்டுபிடிப்புகள் 1900இல் மறு ஆய்வு செய்யப்பட்ட பின்பே  உலகுக்குத் தெரியவந்தன. சென்ற வருடம் அவர் பிறந்து இருநூறாவது ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடினார்கள். மரபியல் பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் செயல்பாட்டை மெண்டல் இரண்டு விதிகளின் மூலமாக, பரிசோதனைகள் செய்து வெளியிட்டார். மெண்டலின் ஆய்வுகள் உலகுக்குத் தெரியவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பு அதன் நீட்சியாக பார்பராவின் ஆய்வுகள் இருந்தன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. குதிக்கும் ஜீன்கள் மூலம் மாறுபாடுகள் ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்குக் கடத்தப்படும் என்பது முற்றிலும் புதியது. இன்னும் சொல்லப்போனால், இது மெண்டல் சொன்ன விதிகளுக்கும் அதன் நீட்சியாக ஏற்கனவே மேற்கொள்ளப்ட்ட ஆய்வுகளின் கட்டங்களுக்குள்ளும் பொருந்தி வராத ஒன்று. இதன் காரணமாகவே இவருடைய ஆய்வுகளும் 1940களில் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது DNAவின் ஈரிழை வடிவமைப்போ, மரபு சங்கேதக் குறியீடுகளோ கண்டறியப்பட்டிருக்கவில்லை.  DNA அமைப்பு கண்டறியப்பட்ட ஆண்டான 1953லிருந்து, இத்தகைய நிராகரிப்பின் காரணமாக பார்பரா தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டார். DNA-வின் குறிப்பிட்ட பகுதிகள் எவ்வாறு மின்சார சுவிச்சைப் போன்று செயல்படுகின்றன என்பதை ஒபரான் மூலமாக ஜேக்கப் மோனாட் கண்டறியும்போது பார்பரா ஆய்வின் தனித்துவம் உலகுக்குத் தெரியவந்தது. குதிக்கும் ஜீன்களைக் கண்டறிந்தமைக்காக முப்பது வருடங்கள் கழித்து 1983இல் பார்பராவுக்கு செயலியல் மற்றும் மருத்துவத் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுவரை இத்துறையில் தனியொரு பெண்ணாக நோபல் பரிசு பெற்றவர் பார்பரா மெக்ளின்டோக் மட்டுமே ஆவார். இத்தகைய குதிக்கும் ஜீன்கள் நுண்ணுயிரிகள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நமக்குள்ளும் இருக்கின்றன. 1960களில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கு எதிராக இயங்கும் தன்மையை பாக்டீரியாக்கள் இத்தகைய குதிக்கும் ஜீன்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி அழிந்து போகாமல் வம்சத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்று கண்டறிந்தனர். டார்வின் சொன்ன பரிணாமக் கோட்பாட்டில் முக்கியமானது இத்தகைய வேறுபாடுகளே ஆகும். இவை பரிணாமத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஓம்புயிரியில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த ட்ரான்ஸ்போசான்களைத்தான் ஒட்டுண்ணிகள் முகமூடியாகப் பயன்படுத்துகின்றன. ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாட்டை நிறுவிய பீடில், டாட்டம் ஆய்வுகளில் பார்பரா முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர்களுக்கு 1958இலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்காசோளத்தின் முதல் மரபியல் வரைபடம், குரோமோசோம் நுனிப் பகுதியின் செயல்பாடுகள் என்று பார்பரா ஏராளமாகக் கண்டறிந்துள்ளார். இத்தகைய குதிக்கும் ஜீன்கள், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்களிலும் காணப்படுகின்றன. கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இத்தகைய அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பார்பரா 1992, செப்டம்பர் 2இல் தனது 90ஆவது வயதில் நியூயார்க்கில் இயற்கை எய்தினார். அவர் பிறந்த இந்த ஜூன் மாதத்தில் இந்தக் கட்டுரையின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.

சுலைகா மன்சில்

சுலைகா மன்சில்

திரை விமர்சனம் ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’. சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை. ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா. ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு. செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்), சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர். “ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?” “முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்” “என்னடா தலை மட்டும் தனியா வருது?”“உடம்பும் இருக்கு” “செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்” “படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?” “பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?” “கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!” “இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்” “உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்” “நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல” ~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில. “நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.   கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம். வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். மதிப்பெண் : 7.5/10

புதிய நான்

புதிய நான்

கவிதை என்னைப் புதிதாக உணர்கிறேன்ஏனென்று புரியவில்லையானாலும்உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை மிகவும் அழகாகத் திகழும்இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்விடியல் போலவே உள்ளதுஇந்தச் சமநிலை விடிந்த பின்னரும் சில கதைகளும்சில பயணங்களும்மனதிலிருந்து மறைவதில்லை நானும் நீங்களும்தொலைதூரத்தில் இருந்தாலும்நாம் சந்தித்த நாட்களையெல்லாம்நினைவுப் பூக்களாகவோமுட்களாகவோ உணரச் செய்யும்இனிவரும் இரவுகள் காலம்விரைவில் பதில் சொல்வதில்லைஇது கனவா? காதலா? நட்பா? எனும்குழப்பத்திலேயே முடிந்துவிடாதுநம் கதை இப்பொழுதாவதுஇதைத் திறந்து படித்துப் பாருங்கள்காகிதத்தின் உணர்வைஉங்கள் மூச்சு சுவாசிக்கும் நான் கிளம்புவதற்கான நேரம்நெருங்கிக்கொண்டுள்ளதுஉங்களுடன்ஒரு மிடறு தேநீர் அருந்தவோபுகைப்படம் எடுக்கவோஆசைதான்காலமும் காத்திருக்கிறது மீண்டுமொரு முறைநாம் சந்திக்கும் நாட்களுக்காய்இவ்விடத்திலிருந்துபுன்னகையுடன் பிரிகிறேன்ஏதோவொன்றை உங்களிடம் விட்டு..

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்

பொன்னியின் செல்வன் – 27

பொன்னியின் செல்வன் – 27

காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால் துளாவிப் பார்த்தபொழுது, ஒரு திருகுமடல் கத்தி கிடைக்க, அதன் நுனியில் இருந்த பிசுபிசுப்பை உணர்ந்து வந்தியத்தேவன் அதிர்ச்சியுற்றான். தொண்டையில் காளாமுகன் அழுத்திப் பிடித்திருந்த காயத்தால் அவனுக்கு குரலும் வரவில்லை. பெருமுயற்சி செய்து அவன் எழுந்து நடந்தபொழுது எதிலோ தட்டுப்பட்டு விழுந்தவன், குனிந்து தொட்டுப் பார்த்ததும் அதிர்ந்தான். அது ஆதித்த கரிகாலனின் உயிரற்ற உடல் என்பதை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியும் துயரமும் அவனை அழுத்தின. வந்தியத்தேவனின் நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் பெருகியது. எவ்வளவோ முயன்றும் தன்னால் தடுக்க முடியாமல் போய்விட்ட இயலாமையை நினைத்து மருகித் துடித்தான். இளவரசரை பாதுகாக்க தன்னை அனுப்பிய குந்தவையையும், பொன்னியின் செல்வனையும் இனிமேல் எப்படிக் காண்பேன் என ஆதித்த கரிகாலனின் உடலை மடியில் போட்டுக்கொண்டு அழுதான். மனிதர்கள் வரும் சந்தடிகளும், வெளிச்சமும் நெருங்கி வர, நிமிர்ந்து பார்த்தான். கந்தமாறனும், சம்புவரையரும், சில வீரர்களும் தீப்பந்தங்களுடன் வந்தனர்.சம்புவரையர் ‘அடப்பாவி, இளவரசரைக் கொன்றுவிட்டாயா’ என்றபடி பதற, கந்தமாறன் வந்தியத்தேவன்தான் கொன்றிருப்பான் என அநியாயமாக பழிச்சாட்டினான். வந்தியத்தேவன் நொந்துகொண்டே, தான் கொல்லவில்லை என்பதையும், நந்தினியும் அங்கே ஒளிந்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் பற்றியும் கூறினான். அவர்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் தொடர்பு உண்டு என கந்தமாறன் குற்றம் சாட்டி அவனைத் தாக்க வாளை உருவினான். வந்தியத்தேவன் அதை மறுத்துக்கொண்டே இருந்தான்.அப்போது திரைச்சீலை அசைய, சம்புவரையர் அங்கு பார்க்க, மணிமேகலை வெளியில் வந்து வந்தியத்தேவன் கொலை செய்யவில்லை என்று கூறினாள். கந்தமாறன் மேலும் கோபமடைந்து வந்தியத்தேவன் ஏதோ செய்து அவள் மனதை மாற்றியிருப்பதாகக் கூச்சலிட்டான். மணிமேகலை மறுக்க, சம்புவரையர், அப்போது ‘ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?’ என்று கேட்க, மணிமேகலை ‘நான்தான் கொன்றேன்’ எனக்கூற சம்புவரையர் மற்றும் கந்தமாறனுடன் வந்தியத்தேவனும் திகைத்து போனான்.சம்புவரையர் மனம் நொந்து போக, கந்தமாறன், மணிமேகலை வந்தியத்தேவனைக் காப்பாற்றவே இந்தப் பழியை ஏற்கிறாள் என்பதைப் புரிந்து அவனைக் கொல்லப் போக, சம்புவரையர் அவனைத் தடுத்தார். மேலும் மேலும் அவன் செய்த முட்டாள்த்தனங்களால்தான் பெரும்பழி நேர்ந்திருக்கிறது, வந்தியத்தேவனை உயிருடன் ஒப்படைப்பது முக்கியம் என பரிதவித்துப் பேச, கந்தமாறன் தந்தையின் சொல்லுக்கு பணிந்தான். மணிமேகலையை அந்தப்புரத்துக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி ஆணையிட்ட சம்புவரையரிடம், இப்போதைக்கு வந்தியத்தேவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை புரிந்துகொண்ட மணிமேகலை தானே செல்வதாக கூறிச் சென்றாள். அங்கிருந்த கட்டிலின் காலில் வந்தியத்தேவனைக் கட்டிப்போட ஆணையிட்ட சம்புவரையரிடம், ‘என் எஜமானனை நானே கொல்லவேண்டுமென என்ன அவசியம். நான் செய்யவில்லை என்பதை நம்புங்கள்’ என்று வந்தியத்தேவன் கேட்டான். அப்படியானால் தடுத்திருக்கலாமே என சம்புவரையர் கேட்க, பழுவூர் இளையராணியும் இளவரசரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நிலைமை விபரீதமாகும்போது தான் தடுக்குமுன் ஒரு காளாமுகன் வந்து கழுத்தை நெறித்ததால், மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினான். அப்போது வெளியே மக்களின் பெருங்கூச்சல் கேட்க, சம்புவரையரும் காவலர்களும் அவனைத் தனியே விட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தனர். மலையமான் படைகள் கோட்டை வாசலில் வந்ததால் ஏற்பட்ட கூச்சல் அது என்று புரிந்து கொண்டனர். சம்புவரையர், கந்தமாறனை தப்பித்து போய்விடும்படி கூற, அது தமது பரம்பரைக்கே அபகீர்த்தி ஆகுமென கந்தமாறன் மறுத்துவிட்டான். அதைக்கேட்டு பெருமிதப் பட்ட சம்புவரையர், சுரங்கப்பாதை வழியாக தஞ்சாவூருக்குச் சென்று கரிகாலனின் மரணத்தைப் பற்றி சின்னப் பழுவேட்டரையரிடமும், ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் அங்கு வந்திருந்தால் அவரிடமும் தெரிவிக்கச் சொன்னார். இளவரசர் அருள்மொழி, தான் சிங்காதனம் ஏறுவதற்காக வந்தியத்தேவனை ஏவிவிட்டிருக்கலாம் என்றெல்லாம் செய்தி பரப்பவேண்டும் என்றும் முடிவுசெய்து கொண்டனர். மணிமேகலையை வாயைத் திறக்காமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கந்தமாறன் கிளம்பினான். சிறிதுநேரம் சிந்தித்த சம்புவரையர் விளக்கை நன்றாகத் தூண்டிவிட்டு சுரங்கப் பாதையிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் அந்தப்புரத்தை அடைந்து அங்கிருந்த பெண்மணிகளிடம் எப்போது வேண்டுமானாலும் மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமென எச்சரித்து விட்டு ஏழெட்டு வீரர்களுடன் அரண்மனை வாயிலுக்குச் சென்று கம்பீரமாக எதிர்வரும் மலையமான் படைகளை எதிர்த்து நின்றார். மிகுந்த மனவருத்தத்துடன் நடந்த சம்பவங்களை நினைத்து வந்தியத்தேவன் வருந்திக்கொண்டிருந்த போது சுரங்கபாதையிலிருந்து உஷ்ணம் சூழ அங்கு யாரோ நெருப்பு வைத்துவிட்டிருந்தது புரிந்தது. ஒரு கணம் தன் எஜமானனுடன் தானும் செத்துப்போய்விடலாம் என எண்ணினான். அவரைக் கொன்ற பழியை நாம் சுமக்கத்தேவையில்லை என்று நினைத்தவன் அடுத்த கணமே அதை மாற்றிக்கொண்டான். ஆதித்த கரிகாலனுக்கு செய்ய வேண்டிய இறுதிமரியாதைகளுக்கு அவரின் உடலை பத்திரமாக காப்பாற்றிக்கொண்டு போக வேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு முயன்று தன் கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். தீ நாலாபக்கமும் சூழ இளவரசரின் உடலை சுமந்தபடி, காலில் தட்டுப்பட்ட திருகுமடல் கத்தியையும் எடுத்துக்கொண்டு, யாழ்க்களஞ்சியத்தின் வழியாக முன்பு சதியாலோசனை நடந்தபோது பார்வையிட்ட மேல்மாடிக்கு கஷ்டப் பட்டு சென்றான். அங்கிருந்த மதிலில் இறங்கும்வண்ணம் ஒரு ஏணி சாய்த்து வைக்கப் பட்டிருக்க அதன்மூலம் இறங்கினான். அங்கு யாரையோ எதிர்பார்த்தபடி இடும்பன் காரி நின்றிருந்தான். அவனைச் சமாளித்துவிட்டு, உடலை சுமந்து கொண்டு அரண்மனைவாயிலை நோக்கி சென்றான். பார்த்திபேந்திரனும், மலையமானும் எதிரிட்ட வீரர்களை சிதறடித்துவிட்டு வேகமாக வந்து சம்புவரையரின் முன் நின்றனர். ‘ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்’ என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டிய மலையமான், ‘என் பேரன் எங்கே?’ என சிங்கம் போல முழங்கினார். சம்புவரையர் தன் உடலில் எழுந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, இளவரசர் பழூவூர் இளையராணியை சந்திக்க சென்றிருப்பதாக கூற, பார்த்திபேந்திரன் மலையமானைக் கூட்டிக்கொண்டு போக கிளம்பினவன் அதிர்ந்தான். அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து தீ’ தீ எனக் கத்திக்கொண்டு நாலாபக்கமும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.பார்த்திபேந்திரன் அதிர்ந்து போய், மலையமானிடம், சம்புவரையரைக் காட்டி, ‘இவர்கள்தான் ஏதோ சூழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். அவர்களை சிறைப்பிடியுங்கள்’ என்று கூற, சம்புவரையர் வாயிலை தகர்த்துக்கொண்டு வந்த அவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமென திரும்ப கர்ஜித்தார். பார்த்திபேந்திரன் தீ எரியும் திசையை நோக்கி ஓட, அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களெல்லாம் அலறியபடியே வெளியே வந்தனர். அவர்களுடன் வெளியே வந்த மணிமேகலை தீ எரியும் இடத்தைக் கண்டு பதறியபடியே அங்கு ஓடத் தொடங்கினாள். அவளைத் தடுக்க முயன்ற சம்புவரையரிடம் ‘அவர் அங்கிருக்கிறார்’ என்று பதறியபடி ஓட முயலவும், அவளை ஓங்கி அறைந்தார். சம்புவரையரின் கண்ணுக்கு கண்ணான செல்லப் பெண்ணான மணிமேகலை ஸ்தம்பித்து நின்றாள். அவளின் முகத்தைக் கண்டு வருந்திய சம்புவரையர், ‘அங்கு ஓடவேண்டிய அவசியமில்லை’ என்று வாயிலைச் சுட்டிக்க்காட்டினார். அங்கு வந்தியத் தேவன் அவனுடைய தோளில் ஆதித்த கரிகாலனின் சடலத்தை சுமந்தபடி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மலையமானும் அந்த திசையைப் பார்க்க, அவரின் உடல் நடுங்கியது. நா எழவில்லை. தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்ட து. வந்தியத் தேவன் மலையமானைப் பார்த்து, ‘ஐயா! இதோ இளவரசர் கரிகாலர். வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதி வீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் கொண்டு சேர்த்தேன். விதியாலும், சதியாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் சடலத்தை மெதுவாய் கீழே இறக்கிவைத்துவிட்டு தடால் என தானும் கீழே விழுந்து நினைவிழந்தான். மலையமான், தன் பேரனிடம் அமர்ந்து அந்த வீரத் திருமுகத்தை உற்று நோக்கி ‘ஐயோ’என்றபடி தன் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டு புலம்பினார். தான் அவனுக்கு போர்த்தொழில் கற்றுக்கொடுத்ததையும், படைக்களத்தில் நின்று போர் புரிந்ததையும், வீர பராக்கிரமச்செயல்கள் செய்ததையும், சொல்லிச் சொல்லி புலம்பினார். அப்படியாவது வீரமரணம் அடைந்திருக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் புலம்பினார்.பின்னர் சோகத்திலிருந்து விடுபட்டு ரெளத்திரகாரம் அடைந்து சம்புவரையரிடம், ‘நேருக்கு நேர் நின்று மோதினாலும் கொல்ல முடியாத தன் பேரனை என்ன சதி செய்து கொன்றாய்?’ என்று கர்ஜித்தார். சம்புவரையர் அதை மறுக்க, பார்த்திபேந்திரனிடம் அங்கிருக்கும் அத்தனை பேரையும் சிறைப்பிடிக்குமாறும், அரண்மனையை இடித்து சிதிலமாக்கும்படியும் ஆணையிட்டார். பார்த்திபேந்திரன் தீயே அரண்மனையை அழித்து விட்ட தாகக் கூற, அங்கு பார்த்த போது, மாளிகை கொழுந்து விட்டு எரிந்ததை அனைவரும் கண்டு திகைத்துப் போய் நின்றிருந்தனர். தன்னை ஒருவாறு சமனப் படுத்திக்கொண்ட மலையமான், ‘மூன்றாண்டு காலமாக மகனைப் பாராமலிருந்த தன் மகளிடம் இறந்த சடலத்தையாவது கொண்டு போய் காண்பிப்போம், இளவரசனைக் கொன்ற பாவிகளுக்கு அங்கேயே தக்க தண்டனையை சக்ரவர்த்தி வழங்கட்டும்’ எனக் கூறினார்.

திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

புரட்சியின் மறுபெயர்

புரட்சியின் மறுபெயர்

இன்றைய இளைஞர்கள் பலரின் டி-சர்ட்களில் பரட்டைத் தலையும் வாயில் சுருட்டும் இதழ்களில் புன்னகையும் தாங்கிய ஒருவரின் படத்தைக் காணலாம். அவர்களில் எத்தனை பேர் அவருடைய வாழ்க்கையை, வரலாற்றை அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம். என் நாடு, என் மக்கள், என் இனம் என்று நம்மில் பலரும் பற்றோடு இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிய இடங்களிலெல்லாம் இன்று டி-சர்ட்களில் காணப்படும் தலை உயர்ந்தது. ஆம், அமெரிக்க வல்லாதிக்கத்துக்கு எதிராக, அயல் நாடுகளுக்கும் சென்று ஆயுதம் ஏந்திய புரட்சிகரப் போராளி, அமெரிக்கக் கண்டத்தில் கம்யூனிச விதைகளைத் தூவியவர். கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பொதுவுடமை அரசு வளர்வதற்கு அடித்தளம் அமைத்தவர் என்று பலப்பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான சே குவேராதான் அவர். இன்று சே குவேராவின் பிறந்தநாள். எர்னஸ்டோ சே குவேரா, அர்ஜென்டினாவின் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 1928 ஜூன் 14ஆம் தேதி குறைப் பிரசவக் குழந்தையாகப் பிறந்தவர். மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். கௌதமாலா நாட்டில் நடந்துவந்த ஓர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காகத் தூக்கி எறிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார். தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கி எறிந்ததைக் கண்டு பதற்றப்படாத, துணுக்குறாத கௌதமாலா மக்களின் மௌனம் மேலும் சே குவாராவை துடிக்கச் செய்தது. இந்நிகழ்வு அவரைப் புரட்சியின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவின் இந்த அநியாயத்தை விவரித்து, புரட்சியைத் தூண்டிப் பேசலானார். அதனால் அவருக்கு ஆபத்து வர மெக்ஸிகோவிற்கு தப்பிச் சென்றார். அந்த நேரத்தில், கியூபா நாட்டில் அமெரிக்காவின் ஆதரவில் பொம்மை ஆட்சியை நடத்திவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவிற்கு எதிராக, கொரில்லா படை திரட்டிப் போராடி வந்த பிடல் காஸ்ட்ரோவை 1955இல் தனது 27 ஆவது வயதில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இருவருக்கிடையே ஒரு நட்புப் பாலத்தை வளர்த்தது. சேவின் வீரமும் கொரில்லா படை சாகசங்களும் அவரை பிடல் காஸ்ட்ரோவின் தலைமைத் தளபதியாக மாற்றின. கியூபாவை ஆண்ட பாடிஸ்டாவை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை பிடல் காஸ்ட்ராவின் கைகளில் ஒப்படைத்தார். தனது 31ஆவது வயதில் கியூபா தேசிய வங்கியின் தலைவராகி, கியூபாவின் பணத்தாளில் கையெழுத்திட்டார். தனது 33ஆவது வயதில் அமைச்சராக இருந்தபோதும் கரும்புத் தோட்டத் தொழிலாளியாகப் பல நாட்கள் கரும்பு வெட்டினார். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். கியூபாவைப் பன்நெடுங்காலமாகச் சுரண்டிவந்த அமெரிக்க நிறுவனங்களை கியூபாவின் தேச உடமையாக்கினார். கியூபா சார்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்க சே சென்றபோது, பல மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் 36 வயதே ஆன இளந்தலைவரின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருந்தனர். 1959இல் இந்தியாவிற்கு வந்திருந்த சே, அன்றைய நமது பிரதமர் நேருவுடன் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார். அதன்பின்னர், விடுதலைக்காகப் போராடிய லத்தீன் அமெரிக்க நாடுகளின்பால் அவரது பார்வை திரும்பியது. அமைச்சர் பொறுப்பை, கட்சிப் பொறுப்பை, கியூபா நாட்டுக் குடியுரிமையை உதறிவிட்டு, காங்கோ மக்களின் விடுதலைக்காக இரண்டு ஆண்டு காலம் பாடுபட்டார். இறுதியாக பொலிவியக் காடுகளில் 16 மாத காலம், அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் பினாமி அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர், மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்த வரலாறு சே குவேராவிற்கு மட்டுமே உண்டு. சேகுவேராவால் ஈர்க்கப்பட்ட சின்சினா அவர் மீது காதல் கொண்டார். சே குவேராவும் காதல் வயப்பட்டார். அவர்கள் சந்தித்த போதெல்லாம் புத்தகங்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழித்தனர். சேயின் புரட்சிகர மனநிலையோடு சின்சினா தொடர முடியாத சூழலில், அவர்களது காதல் வாழ்க்கை பிரிவில் முடிந்தது. தன்னுடன் கொரில்லாப் படையில் இணைந்து போராடிய போராளி ஹில்டாவை சே மணந்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். சேகுவேரா தனக்கு ஒரு மகன் பிறந்தால் விளாடிமிர் இலியச் லெனின் என்று பெயரிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. பின்னர் முதல் மனைவியின் சம்மதத்தோடு அலெய்டா மார்ச்சை மணந்தார். ஒரு ஆண் குழந்தையும் நான்கு பெண் குழந்தைகளும் அத்தம்பதியினருக்குப் பிறந்தன. நான்காவதாகப் பிறந்த மகனுக்கு உமர்கய்யாம் என்று பெயரிட்டார் சே. சே மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். நாள்தோறும் மக்கள் சுரண்டப்படுவதை, அவர்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதைக் கண்டு கொதித்தது அவரது மனம். தன்னுயிரைத் தந்து கோடானகோடி மக்களை விடுவிக்க, தன் ரத்தத்தைச் சிந்தியவர். ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக முறியடிக்க எதையும் செய்ய வேண்டும் என்ற அசையாத கொள்கை கொண்டவர். மக்களை விடுவிப்பதற்காக நிற்கும் கட்சிகள், கட்சி உறுப்பினர்களுக்குப் போர்ப் பயிற்சி தரவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. சே குவாராவின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையாக வாழப்படவில்லை. அவர் மரணத்திற்கே சவால் விட்டவர். இந்த மாவீரனின் மார்பு தோட்டாக்களால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டபோதும் அவர் தன் இமைகளை மூடிக்கொள்ளவில்லை. கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார் சே. சே குவேராவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முக்கியப் பாடம், ஆதிக்கத்தை அதன் எல்லைவரை சென்று எதிர்க்கவேண்டும் என்பதும் அந்த ஆதிக்கம் நம்மீது மட்டுமல்லாமல் எவர்மீது செலுத்தப்பட்டாலும் அங்கே நாம் நிற்க வேண்டும் என்பதுமே.

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா? நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது. காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன. இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது. இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. 1. இலஞ்சி மன்றம் கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்! “கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம். இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. பாவை மன்றம் அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் ! “அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்” – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன. 3. நெடுங்கல் நின்ற மன்றம் பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்! இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம். வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்! – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார். இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது. இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன. சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது. பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள். தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன. கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ. பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார். ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது. இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. “எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ். டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில், நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை. இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். ‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது. மேகங்களின் மத்தியில் எங்கோஎன் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்நான் போராடுபவர்களை வெறுக்கவில்லைநான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்என் நாடு கில்டார்டன் கிராஸ்என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாதுசட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை தனிமையின் தூண்டுதல் மேகங்களில்இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோஅனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியதுபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்மரணம் சமநிலை செய்கிறது. ‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்  பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.

முறிக்கப்படும் கொம்புகள்

முறிக்கப்படும் கொம்புகள்

உங்கள் அன்பு எப்போதும்நியாமானது உங்களுக்கு வீட்டுத்திரையில் பார்த்துநேரில் காண விரும்பி என் வீடு தேடி வருவீர்கள் இன்னும் அருகில் அருகில் பார்த்தாலும்உங்களுக்கு அலுப்புத் தட்டாது கூடாரம் அமைப்பீர்கள் ஒரே கூடாரம் உங்களுக்குஎப்போதுதான் போதும்? ஒன்று நூறாகும்போதுபோதும் என்று துதிக்கை உயர்த்துவேன் ஆனால் உங்களுக்குஎன் துதிக்கை கீழ்ப்படிதல்தானே பிடிக்கும் பயப்படாமல் என்னைப் புரிந்துகொள்ளலாம்ஆனால்அட்டகாசம் என்று செய்தித் தலைப்பிடுவீர்கள் தீயிட்டும் வெடி வைத்தும் துரத்தும்போதுஎனக்குக் கோபம் வராமல் இல்லை நானும் உங்களோடு பழகியவன்தானே? பின் திரும்பினால் என்னை விரட்டிஇன்னுமொருமுறை என் வீடு வரைநீங்கள் வரக்கூடும் இரண்டாம் முறை துதிக்கைக்கு நஞ்சேற்றிநீங்கள் கற்பிக்கும் நியாங்களைமறுக்கும் உரிமை கிடையாது எனக்கு ஆனால் உங்கள் அன்புநியாமானது உங்களுக்கு

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

மகாபாரதத்தில் ஒரு காட்சி:அர்ஜுனன் அம்பு எய்யப் பழகிக் கொண்டிருக்கிறான்.துரோணர் கேட்கிறார், “மரம் தெரிகிறதா?”“இல்லை”“மரத்தின் கிளை தெரிகிறதா?”“இல்லை”“கிளையில் இலையின் அசைவுகள்?”“தெரியவில்லை குருவே”“கிளையில் அமர்ந்திருக்கும் குருவியாவது தெரிகிறதா?”“மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. குருவியும் தெரியவில்லை”துரோணருக்கு ஆச்சரியம்.“பிறகு என்னதான் தெரிகிறது அர்ஜுனா?”“நான் வீழ்த்த வேண்டிய குருவியின் தலை மட்டும் தெரிகிறது”பெருமை தொனிக்க துரோணர் சொல்கிறார்:“அம்பினை விடுக” அப்படித்தான் பாஜக-வை வீழ்த்தக் குறி வைப்பதற்காக இந்தியாவின் பெரும்பாலான எதிர்கட்சிகள் வருகின்ற ஜுன் 23 அன்று பாட்னாவில் சந்திக்க இருக்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், டெல்லியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சமீபத்திய கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையும் காங்கிரசிற்கு உத்வேகம் அளித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேலே சொன்ன தலைவர்கள் அனைவருமே அவரவர் மாநிலங்களில் தங்களுக்கென வாக்கு வங்கியைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாஜக-விற்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் வினா. அனைவருமே தோளில் கை போட்டு, காலை வாரி விடுவதில் கை தேர்ந்தவர்கள்தான். இருப்பினும் ‘நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறிக்கு எதிராக, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்ற புரிந்துணர்வு மட்டுமே, அவர்களுக்கு 2024 தேர்தலில் பாஜக என்ற குருவியின், இல்லையில்லை, வல்லூறின் தலையை மட்டும் பார்க்க வைக்கிறது. ஆம், வல்லூறுதான். இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகளை ஒழித்துவிட்டு, பாஜக மட்டுமே ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும். ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என எல்லாவற்றையும் மதவாதம் என்னும் ஒற்றைச் சித்தாந்தத்தக் குடையின்கீழ் கொண்டுவரத் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஒன்றிய வல்லூறு. ஜனநாயகத்தின் சிறப்பே, வலிமையான எதிர்க்கட்சி என்பதுதான். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல; ஆளும் கட்சி தவறிழைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, சரிப்படுத்திச் செல்ல உந்தும் ஒரு அமைப்பு முறை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த ஆட்சியின் ஒற்றுமையையும் சிறிது காலத்திற்குப் பின்னர் வந்த வி.பி.சிங் ஆட்சியையும் இங்கே கவனத்தில் கொண்டால், இந்திய ஜனநாயகம் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு மதிப்பளித்திருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல கூட்டணி ஆட்சிமுறையில் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆட்சி முறை. இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அதிகம் இருந்த நாட்களையும் அவர்கள் குறைந்துபோய், பாராளுமன்றம் என்பதே ஒரு கேலிக்கூத்து ஆகிவிட்ட இந்தக் காலத்தையும் ஒப்புமைப்படுத்தி தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களும் அவற்றை வழிநடத்திய காட்சிகளும் இருப்பதுதானே ஜனநாயகம்? ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அவர்களுக்கு மாபெரும் ஓவியங்கள், சிலைகள் வைத்து, இந்தியா மதரீதியான நாடாக நிறுவ முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவற்றையெல்லாம் ஒற்றுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதவாதப் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் களமாக எதிர்க்கட்சிகள் சந்திப்பு இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு எப்படி இருக்கும், ஒரே நாளில் புரிதல் வருமா, பிரதமருக்கான பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியுமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கென்று இருக்கும் கெத்து, ஈகோக்களை விட்டுக்கொடுத்து,பொதுவான கருத்தொற்றுமையை யார் உருவாக்கப்போகிறார்கள், இவர்களை ஒன்றிணைப்பவர்களாக யார் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய விவாதப் பொருள்களாக இருக்கப்போகின்றன. முதல் சந்திப்பின் தலைவர் என்பதாலேயே நிதிஷ்குமார்தான் தலைமை என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஜாதா சென்றதாலேயே ராகுலை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நாட்கள் நடக்கவில்லை; குறைந்த அளவு நகரங்களையே தேர்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது; திராவிட மாடல் குறித்து அனைவரும் பேசுகின்றனர் என்றாலும் வட இந்தியத் தலைவர்கள் எந்த அளவு மதாராஸியை நம்புவார்கள் என்பதைக் கணிப்பது கடினம். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இடதுசாரிகளைத்தான் காணமுடிகிறது. ஆனால் மற்றவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், முக்கியமாக மம்தாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து அந்தந்த மாநிலங்களில் தாங்களே தேர்தலைச் சந்தித்துக் கொள்ளலாம்; மாநில அளவில் எதிர்ப்பு அணியை உருவாக்கிக் கொள்ளலாம்; தேர்தல் முடிந்த பிறகு தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவார்களேயானால், அது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கலாம். அதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி பாஜக தலைவர்கள் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பாலம் இடிந்துபோன பாட்னாவில் கூடுகிறார்கள்; அந்தப் பாலம் போலவே இடிந்துவிடப் போகிறது என்று கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. ஆனால் அவர் சொல்ல மறந்தது, அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்ததும் கடந்த முறையும் இடிந்து விழுந்ததைச் சரி செய்ததும் ஒரு குஜராத் கம்பெனி என்பதை. இதே நேரம் தமிழ்நாட்டில் வேறொரு முயற்சி நடைபெற்று வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கே எதிரியின் எதிரியைப் பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. நாம் மேலே சொன்ன எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் புதிதாகக் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர். பாஜக, தான் நினைத்ததைச் சாதிக்க வசதியாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைக்கலாம். அதன்மூலம் தற்போது உருவாக்க முயன்றுவரும், தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை நிலைநிறுத்த நினைக்கலாம். தற்போதைய எதிர்க்கட்சியை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான விதையை பாஜக ஊன்றுகிறது. அதற்கு, அமைப்பு ரீதியாகவும் சட்டரீதியாகவும் பலவீனமானவர்கள், ஒரே இடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நேற்றுவரை எதிரெதிராக இருந்தவர்கள், ஒருவர்மீது மற்றவர் மாறி மாறி துரோகி முத்திரை குத்தியவர்கள், திடீரென ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதை ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அதிமுக-வின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் கவலைக்குரிய விசயம் என்னவெனில், ஆளும் கட்சியான திமுகவும் பாஜகவின் இந்த முயற்சிக்கு உரம் கொடுத்து உதவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை, அதிகாரிகடம் குவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசை விடவும் தீவிரம் காட்டுவதும் நமக்கு திமுகவின் மேல் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கவர்னர் பதவியை ஒரு கட்சியின் தலைவர் பதவிபோல நடத்திக்கொண்டிருக்கும் போக்கு ஒரு தனி ஆவர்த்தனம். நாடு தழுவிய எதிர்ப்பு அணியில் இதன் தாக்கம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட எதிர்க்கட்சிகள் சந்திப்பை திமுக எப்படிக் கையாளப்போகிறது என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு சிட்டுக்குருவி தற்போது வல்லூறாக மாறி, மரத்தில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் இரையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாட்னா சந்திப்பில் எல்லாரும் சேர்ந்து வல்லூறை வீழ்த்துவதை இலக்காகக் கொள்வார்களா அல்லது வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டு வல்லூறின் இலக்குக்கு இரையாவார்களா என்பதை வருங்காலம் நமக்கு உணர்த்தும். ஜுன் 23க்காகக் காத்திருப்போம்.

ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது

நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு – சிறப்பாசிரியர்கள் குமுறல் அரசுப் பள்ளிகளில் 11 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திமுக, தற்போது மே மாதத்துக்கு ஊதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளது பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைப் பகுதிநேர ஆசிரியர்கள் தொடங்கினார். அப்போராட்டமானது 24ஆம் தேதிவரை நீடித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை அழைத்து, தற்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பொறுப்பேற்றிருக்கும் அறிவொளி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த 11 ஆண்டுகளாகத் தங்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சங்கத்தினரிடம், ‘கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான மே மாத ஊதியம் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். அதனடிப்படையில் அவர்களும் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஆனால் 9.6.2023 அன்று, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஆர்த்தி அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களைப் பணியமர்த்திய அரசாணை எண் 177ஐ சுட்டிக்காட்டி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமனிடம் கேட்டபோது, “அரசாணை எண் 177இல் மே மாதம் ஊதியம் இல்லை என்றோ பதினோரு மாதங்களுக்குதான் ஊதியம் வழங்கப்படும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் எங்கள் பணி நியமனம் குறித்து 26.8.2011 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விதி எண் 110இன் கீழ் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் 16549 ஆசிரியர்களுக்கு 99 கோடியே 29 இலட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது சிறப்பாசிரியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்படி கணக்கிட்டால் அவர் குறிப்பிட்டது 12 மாதத்திற்கான சம்பளத் தொகையாகும். அதுமட்டுமின்றி, பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் என்பது கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் (தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) நியமிக்கப்பட்டதாகும். இத்திட்டமானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு நிதிப் பங்களிப்புடன் நடைபெறுவதாகும். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான சம்பளத்தில் மத்திய அரசு 60% வழங்குகிறது. மீதமுள்ள 40% தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். இதற்கென ஆண்டுதோறும் Project Approval Board மூலம் Annual work plan and Budget கூட்டம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்தக் கூட்ட அறிக்கையியிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12 மாத சம்பளத்திற்கான நிதி ஒதுக்குவதாகத்தான் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாகவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் மத்திய அரசின் 60% போக மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதற்கு, “மாநில அரசு மூலம் பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு எதுவும் இல்லை” என மாநில அரசு பதில் கொடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் வரிசை எண் 181இல் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் எனக் கூறியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது எங்களுக்கு நியாயமாகக் கொடுக்கவேண்டிய பலன்களைக்கூடக் கொடுக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக எங்களுக்குச் சேரவேண்டிய மே மாத ஊதியத்தையும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தர ஆணையையும் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஏற்கனவே சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்துவரும் சிறப்பாசிரியர்களை வாக்குறுதி கொடுத்து வஞ்சித்து வருகிறது அரசு. பணி நிரந்தரம் செய்வதற்கான சட்ட நுணுக்கங்களை அறியாமலா தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பார்கள்? பணி நிரந்தரக் கோரிக்கை ஒருபுறமிருக்க மாநில அரசின் நிதிப் பங்களிப்பாக ஒரு ரூபாய்கூட ஒதுக்காமல் ஒன்றிய அரசு வழங்கும் 60% நிதியை மட்டுமே வழங்கிவிட்டு மே மாதம் ஊதியம் வழங்க மறுப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதோடு அது உழைப்புச் சுரண்டல் மற்றும் உரிமைச் சுரண்டலும் ஆகும். அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கியதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொண்ட திமுக அரசு, சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே நியாயமானதாக இருக்க முடியும்.

காற்றில் சிக்கிய பட்டம்

காற்றில் சிக்கிய பட்டம்

கவிதை மொட்டை மாடியில்தண்ணீர் தொட்டியின் மேல்அரை நிக்கர் போட்ட ஒரு சிறுவன்காலை மாலைகை விரலுக்கிடையே நழுவும்மணலைப்போலநேரம் மறந்துவானில் பட்டத்தைப்பறக்கவிட்டுக்கொண்டேயிருக்கிறான்இருட்டு மற்றும் வெளிச்சமெனஇரண்டு காலத்திலும்ஒரே சந்தோசமாய் எழுத்துச் சுழற்சியில் சிக்கிய எனக்குஅவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான்காலையில்மஞ்சள் வெயில் நிறைந்தஎன் வாசல் முற்றத்தில்பட்டத்தின் கருநிழல் மட்டும்செவ்வகக் குடை விரித்தாற்போலத் தெரிந்தது நிஜத்தைவிடப் பெரிதாக அசையும்ராட்சச நிழல் கண்டுகண்கள் லயத்தில் மின்னினபட்டத்தின் நிழல்ஒரே இடத்தில் படபடத்துச் சுழன்றுதடுமாறித் தவித்ததுநான் வெளியே சென்றபோதுஎன் நிழலையோபட்டத்தின் நிழலையோகூடப்பார்க்கவில்லைஎன் வீட்டு மீட்டர் பெட்டியில்சிக்கலான அமைப்பில்சிக்கிய பட்டத்தைஆர்வத்தோடு மீட்டுஅவனிடம் காற்றில் எறிந்தேன் அந்தப் பட்டத்தில்உலக வரைபடம் இருந்ததுஅதில் இருநாட்டு எல்லைப்பகுதிவரையப்பட்ட இடத்தில் கிழிந்ததுஆம்! பட்டம் கிழிந்ததுஅச்சிறுவன் தரையில் அமர்ந்துமுதன்முறையாகபறந்த பட்டத்தைத்தலைகுனிந்து பார்க்கிறான் பட்டத்தின்பறக்கும் எதிர்காலத்தைநிர்ணயிக்கும் நூல் கண்டுசெயலற்றுக் காணப்பட்டதுஎல்லையோரக் காவலளியின்காலணியைத் தைப்பது போலகுண்டு துளைத்த ராணுவ வீரனின்காயமடைந்த உடலின் பகுதியைமருத்துவர் தைப்பது போலஅந்தப் பட்டத்தைஊசிகொண்டு தைத்துக்கொண்டிருக்கிறான் அவனிடம் நான்ஒன்று சொல்ல வேண்டும்என் காலடியில்கிழிந்த இரு நாட்டின்எல்லைப்பகுதி கிடக்கிறதுஅவன் அதைவிட்டுஇரு நாட்டையும் இணைத்துத்தைத்துவிட்டான் போலும்

ஒரு சாமானியன் போதும்

ஒரு சாமானியன் போதும்

திரை விமர்சனம் சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை  பாமரத்தனமான கடவுள் பக்தியும் தங்களையே கடவுளாக வரித்துக்கொள்ளும் சாமியார்கள் மீதான கண்மூடித்தனமான பக்தியும் அந்தச் சமூகத்தை, அதன் அங்கமாக உள்ள  மக்களை, குறிப்பாகப் பெண்களை எப்படியெல்லாம் சீரழித்து வருகிறது என்பதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் வருகிறோம். அதிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.   இப்படியான உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தீபக் கிங்கிரணியின் விறுவிறுப்பான கதை திரைக்கதை வசனத்தில், அபூர்வ் சிங் கார்க்கியின் நேர்த்தியான இயக்கத்தில், மனோஜ் பாஜ்பேயின் அழுத்தமான நடிப்பில் உருவாகி, ஜீ5 தளத்தில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம்தான் ‘ சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ (ஒரு சாமானியன் போதும்). வாய்ப்புக்கு ஏதுவான இந்தப் ‘புண்ணிய’ பூமியில் வறுமை, நோய், அறியாமை, பேதமை, கல்வி அறிவின்மை தாண்டி, பகுத்தறிவின்மை, அச்சம் காரணமாக எதையும் நம்பும் மனோநிலையில் மக்கள். தீர்வு தேடி உழன்றுகொண்டிருக்கும் அவர்களிடையே ‘கடவுள் அவதார’மாக முளைத்துச் செழிக்கும் சாமியார்களில் ஒருவன்தான் பாபாஜி. அவனின் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் இளவயதுப் பெண்ணுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தைத் தனிமனிதனாக நடத்துகிறார், குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் சோலங்கி. பாபாஜிக்குப் பண பலம், ஆள் பலம் தாண்டி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவும் இருக்கிறது. மிகமிகப் பிரபல வக்கீல்கள்,  அவர் பொருட்டுப் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். சாட்சிகள் விலை பேசப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். கொடிய குற்றத்தைப் பின்னுக்குத் தள்ளி, அந்தக் கார்ப்பரேட் சாமியாரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆசிரமங்கள் ஆகியவற்றால் மக்களின் ‘சேவை’ தடைபடுவதாக மட்டுமே, நீதிமன்றங்களில், மக்கள் மன்றங்களில், ஊடகங்களில் முன்னிறுத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளாக நீளும் சட்டப் போராட்டத்தில்,  அப்பெண்ணின் வலி உணர்ந்த, உண்மைக்காகப் போராடும் வழக்குரைஞர் சோலங்கி, அந்த இளவயதுப் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தந்தாரா என்பதுதான், ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தின் மொத்தக் கதை. “எப்படியாவது அவர் மேல இருக்கிற போக்சோ கேச டிரா பண்ணு, இல்லன்னா பிரச்சனை பெருசா போய்டும்.” இப்படி பாபாஜி தரப்பு அலறுவதிலிருந்தே, போக்சோ  சட்டத்தின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். அதீத நம்பிக்கை கொண்ட அந்தக் குடும்பம் பாபாஜியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறது. உதவ நினைக்கும் காவல்துறை பெண் அதிகாரி, போக்சோ சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்த வழக்குரைஞர் சோலங்கியை அவர்களுக்குப்  பரிந்துரைக்கிறார். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து கலங்கிப் போகும் சோலங்கி, தீவிர சிவ பக்தனாக இருந்தும், பாபாஜியின் கேடுகெட்டச் செயலை ஜீரணிக்க இயலாமல், வழக்கை எடுத்துக் கொள்கிறார். அவரிடம், “சார்.. உங்களோட பீஸ்?” தயங்கித் தயங்கிக் கேட்ட பாதிக்கப்பட்ட பெண் நூவின் தந்தையிடம், சோலங்கி  புன்முறுவலுடன் சொல்கிறார், “அந்தப் பொண்ணோட சிரிப்பு..” ” கோர்ட்ல கீழ்த்தரமான கேள்வி எல்லாம் கேப்பாங்க. எப்படியாவது உன் மனசை உடைக்க நெனப்பாங்க. நீ எதுக்கும் பயப்படக் கூடாது” என்று விசாரணைக்கு நூவைத் தயார் செய்யும்போதும், நூவின் பெற்றோர்களிடம் ஒரு கதையைச் சொல்லி, அவர்களது ஒத்துழைப்பைக் கோரும்போதும்,  போக்சோ சட்டத்தின் கூறுகளை, அவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்து, அழுத்தமான வாதங்களை முன்வைக்கும்போதும், சூழ்ந்துள்ள ஆபத்தில் தனது மகன் காணாமல் போனதை அறிந்து பதைபதைக்கும்போதும், “தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோனுது” என்று சொல்லும் நூவிடம், “நடக்கிற இந்தப் போருக்கான முழக்கத்தை அவங்க எழுப்பிட்டாங்க கண்ணா” என்று தைரியம் சொல்லி, சங்கநாதம் முழங்கும்போதும், பிரிய விரும்பாத தன் ஜூனியரிடம், அவரின் பாதுகாப்பு நிலைமையை எடுத்துச் சொல்லி, அக்கறையும் கண்டிப்புமாக வலியுறுத்தும் பொருட்டு அவரது காலில்விழ முயலும்போதும், ஐந்தாவது முறை ஷூவைப் பாலிஷ் செய்வதைப் பையன் கிண்டல் செய்வதை ரசிக்கும்போதும், “ஸ்கூல், ஹாஸ்பிடல் கட்டுறதுனால, அவர் ரேப் பண்ணலாம்னு ஒன்னும் அர்த்தம் கிடையாது…. இல்லையா?” என்று பாபாஜி தரப்பில் வந்த அட்வகேட்டிடம் செவுளில் அறைந்ததுபோல் கேட்கும்போதும், “இந்த நாட்ல ஒரு பெண்மணியோட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டங்க ஏற்படுது. அந்தக் கஷ்டங்களோட ஒரு பிரதி பிம்பமா பாதிக்கப்பட்ட இந்தப் பெண் இருக்கா. இப்படிச் சொல்வதற்கு எனக்கு உண்மையிலேயே அவமானமா இருக்குது, யுவர் ஹானர்” என்று வாதத்தினிடையே தெரிவிக்கும்போதும், “மொத்த ‘ப்ரோசிடிங்ஸ்’லயும், ஒரு சில பேர் அவள பாதிக்கப்பட்ட பொண்ணா பாத்தாங்க, இல்ல பணமா பாத்தாங்க, சில பேர் அவங்க காமப் பசிக்குப் போகப் பொருளாப் பாத்தாங்க, இன்னும் சில பேர் ‘டி.ஆர்.பி’ யா பாத்தாங்க… நான் அந்தப் பொண்ணுக்குள்ள காளிய பார்த்தேன்..” என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறும்போதும், வழக்குரைஞர் சோலங்கியாக மனோஜ் பாஜ்பேயி, மாறுபட்ட நடிப்புத் திறமையால் நம்மைப் படம் முழுவதும் அத்துடனேயே கட்டிப்போட்டுவிடுகிறார். நேர்மையான வழக்கறிஞர்கள் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டியும் விடுகிறார். பெரும்பாலான நீதிமன்றக் காட்சிகளில் முகத்திரை இட்டிருந்தும், கண்களிலேயே நுட்பமான பாவங்களை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்திய அட்ரிஜா சின்ஹா (நூ) சபாஷ் போட வைக்கிறார். பசுத்தோல் போர்த்திய புலியாக வரும் பாபாஜி (சூரிய மோகன் குல்ஸ்ரேஷ்தா), பாபாஜி தரப்பு அட்வகேட் சர்மா (விபின் ஷர்மா), சோலங்கியின் ஜூனியர், அவரது அம்மா, மகன், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்,  நூவின் பெற்றோர்கள்,  உட்பட ஏனைய துணைப் பாத்திரங்கள் அனைவரும் அவர்களுக்குரிய நேர்மையான பங்களிப்பைத் தந்துள்ளது சிறப்புக்குரியது. பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றங்களில் அமைந்திருந்தாலும் கொஞ்சமும் சலிப்புத் தட்டாத வகையில் படமாக்கியதில், அர்ஜுன் குக்ரேட்டியின் ஒளிப்பதிவுக்குப் பெரும்பங்கு உண்டு. படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதைக்கேற்ற கொதிநிலையில் வைத்திருந்தமைக்கு சங்கீத் சித்தார்த்தின் இசை ஒரு காரணம். இன்னொரு காரணம், ‘சிக்’கென இருந்த சுமித் கோட்டியனின் படத்தொகுப்பு. ஒட்டுமொத்தமாக அல்லாது அவ்வப்போது ஃப்ளாஷ் பேக் உத்தியைப் பயன்படுத்திப் படக்கதை நகர்வது அழகு. அன்று, காவல்துறை அதிகாரிகளிடம் நேர்மை, நீதித்துறையில் தலையீடின்மை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனோவலிமை, பெற்றோர்களின் உறுதி, உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் கயவர்களுக்கு எதிராக போராடும் சில மனிதர்களின் துணிச்சல், எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஒதுங்கி நின்ற ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு என்ற சூழல்தான், பெண்ணின் பார்வையில் வலி உணர்ந்து, சூழ்ந்துள்ள ஆபத்தை அறிந்தும் வழக்கை அணுகிய வழக்குரைஞர் சோலங்கியால் உண்மையை நிலை நாட்டிடச் செய்தது. எந்தப் புராண இதிகாசங்களைக் கைக்கொண்டு, இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் மக்களின் பாமரத்தனத்தின் மீது, தத்தம் மோசடிகளைக் கட்டமைத்து முறையற்ற சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களோ, குற்றம் என்னவென்று கருதாமல் குற்றவாளிகள் யார் என்று கருதக்கூடிய ‘செலெக்ட்டிவ் அப்ளிகேஷ’னுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய, அதே புராண இதிகாசங்களை நீதிமன்றங்களிலேயே மேற்கோள் காட்டி, அவர்களுக்கு எதிரான நீதியைப் பெற முயல்வது,  நகை முரண். என்றாலும், நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பை வழங்குவதாக அமைத்ததற்கும் காலத்தின் கட்டாயமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழியைத் தோலுரித்துக் காட்டும் ஒரு நேர்த்தியான திரைப்படத்தை  வழங்கியதற்கும் இயக்குநர் அபூர்வ் சிங் கார்க்கி, வெகுவான பாராட்டுக்கு உரியவராகிறார். மதிப்பெண் : 8/10

விழுதில்லா ஆலமரம்

விழுதில்லா ஆலமரம்

கவிதை வீழ்ந்து கிடந்தது தெருமூலையில்கிழிந்த கம்பளியில் கசங்கிய கவிதைகுலுங்கிய கம்பளியில் இருமலின் இசைஎழுதிய கவிஞர் எண்திசை ஓடினர்காற்றில் பக்கங்கள் பின்னால் புரண்டனகாலத்தின் கசடுகள் கவிதையாய்ச் சிரித்தனஞாலத்தின் தவறுகள் கிறுக்கலாய் விரிந்தன இருட்டிய பிறகுதான் இவர்களின் சொர்க்கம்முக்காடு மாக்களின் இடைகளின் ஏற்றம்சாக்காடுச் சல்லாபச் சரித்திரப் பதிவேற்றம்குலுங்கிய வளையினில் குதூகல ஆட்டம்குழைந்த மைதொட்டுக் கவிதையின் ஓட்டம்பல்மொழிக் கவிஞர் உரைபட்டி மன்றம்சிதைந்த கழிவாய்க் கம்பளியில் ஒடுக்கம் தேனிருந்த கூடுஅதுவோ தெருவினில் கிடக்குதுதேனுண்ட நரியெலாம் வேறெங்கோ சென்றதுமானென்று சொன்னதெலாம் மறுகி விலகிஓடியதுபழந்தின்ற வௌவால் பறந்தெங்கோ மறைந்ததுகறைநனைத்த அலையெலாம் திசைமாறிச் சென்றதுகாலத்தின் கோலத்தால் நூலதுவும் கிழிந்ததுகாமத்தின் குப்பையாகிக் கம்பளிக்குள் நடுங்குது எண்திசைப் பறவைகள் நாடிவந்த ஆலமரம்தன்னாசை எச்சமிட்டு ஆடிநின்ற இச்சைமரம்நிலவொளிக் கவிஞர் கற்பனை காத்தமரம்கணக்கின்றிக் காலிடை காமரசம் ஏற்றமரம்உடையின்றி இரவினில் உல்லாசம் விற்றமரம்எச்சங்கள் ஏற்றதனால் நாற்றத்தில் நலிந்தமரம்விழுதுகள் இல்லாததால் வீழ்ந்திட்ட ஆலமரம்

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்

தெய்வமே சாட்சி

தெய்வமே சாட்சி

நூல் அறிமுகம் அன்றாடம் வணங்கும் தெய்வங்களைப் பற்றி நாம் சிந்தித்ததுண்டா? தெய்வச் சிலைகளைப் பார்த்தவுடன் கன்னத்தில் போட்டுக்கொள்வதோடு நம் பக்தி முடிந்துபோகிறது, அதிகம் போனால் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்குப் போடுவோம் இதற்குமேல் இந்த தெய்வங்களை பற்றி நாம் சிந்திப்பதில்லை, நம் கவலைகளை மட்டும் அவர்களிடம் பட்டியலிடுகிறோம். ‘குலதெய்வ வழிபாடு செய்யாவிட்டால் வீட்டில் நல்ல காரியங்கள் எதுவும் நடக்காது; குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கும்’ என்று நம் முன்னோர்கள் நம்மிடம் அழுத்தமாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதனால் நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ குலதெய்வத்திற்குப் படையல் போடுவதும் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதும் குலதெய்வக் கோவிலில்தான் செய்வது என்பதை இன்றுவரை பல குடும்பங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தக் குலதெய்வங்கள் பெரும்பாலும் சிவனாகவோ விஷ்ணுவாகவோ இருப்பதில்லை. மாறாக, சுடலை மாடன், அய்யனார், முனீஸ்வரன் அல்லது துர்க்கை, பிடாரி போன்ற ஏதாவது ஒரு அம்மனாகத்தான் இருக்கிறார்கள். இந்த தெய்வங்களை எல்லாம் நாட்டார் தெய்வங்கள் என்றே பொதுவில் அழைக்கிறார்கள். நிறுவன சமயம் (Institutionalised religions) சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம் போல ஒரு முழுமுதற் கடவுளையும் வேத ஆகம விதிகளையும் மடம், சபை, கோவில், மசூதி போன்ற நிறுவன ஏற்பாடுகளையும் கொண்டதுதான் நிறுவன சமயம். இந்த தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலேயர் காலக் கணக்கெடுப்பிலேயே இந்தியர்கள் அதிகம் வழிபடுவது நாட்டார் தெய்வங்களைத்தான் என்ற குறிப்புகள் உள்ளதாம், இந்த நாட்டார் தெய்வங்கள் அதிகம் வழிபடப்பட்டதற்குப் பல முக்கியக் காரணங்களை இந்த நூலில் எடுத்து வைக்கிறார் ஆசிரியர். நாட்டார் தெய்வங்களுக்குப் பெரிய கோவில்கள் எல்லாம் எழுப்பப்படவில்லை, சிறிய கல், பீடம் மற்றும் கற்சிலைகள். அவ்வளவே போதுமானதாக இருக்கிறது. இந்த தெய்வங்கள் பெரும்பாலும் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள், உடன்கட்டை ஏறியவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆவர். பின்னாளில் அவர்களே மக்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொன்னதாகத்தான் வழிவழியாகச் செய்திகள் கிடைக்கின்றன. தான் அறிவொளி இயக்கத்தில் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இயங்கிய காலத்தில், மக்களிடம் ஏராளமான தகவல்களைச் சேகரித்ததாகவும் அவற்றில் நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளைத் தனியாகத் தொகுத்ததாகவும் கூறுகிறார் நூலாசிரியர். அவற்றிலிருந்து நாற்பது கதைகளை இந்தப் புத்தகத்தில் விவாதித்திருக்கிறார். தீப்பாஞ்சம்மன் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் குழந்தை, தன் கணவனான அந்தப் பாலகன் உடல்நலக்குறைவால் இறந்துவிடும்போது இவளும் சேர்த்து எரிக்கப்படுகிறாள். அந்த அப்பாவிக் குழந்தைதான் பின்னாளில் பக்தர்களின் கனவில் வந்து தன்னை வழிபடச் சொல்லி தெய்வமாக மாறிய தீப்பாஞ்ச அம்மன். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தீப்பாஞ்ச அம்மன் இருக்கையில், இவை எல்லாமே சீதையின் அவதாரங்கள் என்று ஏமாற்றப் பார்க்கின்றன நிறுவன சமயங்கள். கம்பங்குழி அம்மன் குளித்து முடித்து தலையைச் சிக்கலெடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணின் முடியில் இருந்து ஒரு முடி பறந்துபோய் விழுந்ததில் அவளைக் கவர்ந்துசெல்ல வரும் ஜமீனிடமோ அல்லது மன்னனிடமோ இருந்து அவளையும் தன் வீட்டு மானத்தையும் காப்பாற்றுவதாக எண்ணி அவளை நிலவறைக்குள் போட்டு மூடி வைத்து கொடூரமாகக் கொன்றுவிடுகிறார்கள், அவள் குடும்பத்தார். பின்னாளில் அவர்கள் கனவில் அவள் வந்து தன்னை வழிபட்டால் அவர்கள் நலம் பெறுவார்கள் என்று கூறி கம்பங்குழி அம்மன் என்ற தெய்வமாகிறாள். மக்கள் தங்களின் குற்ற உணர்வினை மறைக்க பக்தியைக் கையில் எடுக்கின்றனர். குடும்ப மானத்தை ஏன்தான் பெண்ணின் உடலில் வைக்கிறார்களோ?! “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்று அந்தப் பெண் கதறிய கதறலை யோசித்துக்கூடப் பார்க்க இயலவில்லை. “அப்பா.. அம்மா.. காப்பாற்று..” என்ற பெயரிலே இந்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டதாம். இப்படி நாம் படிக்கும் ஒவ்வொரு கதையும் நம் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்கிறது. மரத்தியம்மன் பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் இறப்பினாலோ அல்லது அவர்கள் கைவிட்டதாலோ கிணற்றில் விழுந்து இறந்து பிறகு தெய்வமாகியிருக்கிறார்கள். மரத்தியம்மா என்கிற கதையில் தொட்டிய நாயக்கர் சமூகத்தினரைச் சாப்பிடவிடாமல் அந்த ஊர் இளைஞர்கள் துப்புவார்களாம். இப்படி தினம் அரங்கேறிய இந்த எச்சில் அவமானத்தால் மனம் வெறுத்து ஊரைவிட்டுப் போய்விட்ட அந்தச் சமூகத்தினர் ஒரு இளம் பெண்ணை மட்டும் தெரியாமல் விட்டுவிட்டுப் போய்விட்டனர். அவள் மனமுடைந்து மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்கிறாள். பின்னாளில் அவளே மரத்தியம்மன் ஆகிறாள். நீலியம்மன் நீலியம்மாவின் கதை சற்றே வித்தியாசமானது. நீலி என்கிற மாந்திரீகம் தெரிந்த பெண்ணுக்கு கணவனைத் தவிர வேறு ஒருவருடன் உறவு இருக்கிறது. இதை அறிந்துகொண்ட கணவன் திடீரென வீட்டுக்கு வருகிறான். இருட்டில் யாரென்று அடையாளம் தெரியாமல் தன் கணவனையே கொன்றுவிடுகிறாள் அவள். பின்பு தானும் தீயில் விழுந்து இறந்து நீலியம்மன் ஆகிவிட்டாள். நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவற்றுக்கு ஆடு, கோழி அடித்துப் படையல் செய்கிறார்கள். பல தெய்வங்களுக்கு பணியாரப் பானைகளை வைப்பதும் தொன்றுதொட்டு நடந்துதான் வருகிறது. கன்னி தெய்வம் என்கிற கட்டுரையில் அவ்வையார் விரதத்தைப் பற்றியும் அதையொட்டிய பெண்ணிய சுதந்திரத்தைப் பற்றியும் அலசுகிறார். இப்படி அகால மரணமடைந்த இந்த மனிதர்களையே தெய்வங்களாய் வழிபடுவதால் இவற்றை சிறு தெய்வங்கள் என்று நிறுவன சமயங்கள் கீழ்மைப்படுத்திக் காட்டுகின்றன, எனினும் எந்த வித ஆகம விதிகளும் இல்லாமல் இயல்பான பக்தியோடு படையலிட்டுப் பகிர்ந்துண்டு மக்களால் பரவலாக வழிபடப்படுபவை இந்த நாட்டார் தெய்வங்கள்தான் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. சேகரிக்கப்பட்ட கதைகள் அனைத்தும் யாரால் யாரிடமிருந்து பெறப்பட்டவை, எந்த ஊரில் இந்த தெய்வங்கள் இருக்கின்றன என்று புத்தகத்தில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். இந்த நூலை வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் குலதெய்வம் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலும் தேடலும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் எளிய அப்பாவி மக்களை, கல்வி ஒன்றைத்தவிர வேறெதுவும் காப்பாற்ற இயலாது. அந்தக் கல்வியாவது இவர்களின் வாழ்வின் வர்க்க பேதங்களை மாற்றுமா என்றால் தெரியாது, ஆனால் அப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று உறுதியாக நம்புவோம். அதற்கு இந்த தெய்வங்களே சாட்சியாக இருக்கட்டும். நூல் : தெய்வமே சாட்சிஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்வகைமை : சிறுகதைகள் / வரலாறுவிலை : ரூ.160வெளியீடு : பாரதி புத்தகாலயம்

விதி

விதி

விதி ஓங்கி உயர்ந்த மரத்தில்இலைகளும் கிளைகளும்பறவைக் கூடும் பான்பராக் கறையும்பட்டைமேல் படர்ந்திருந்தன இலைகள் விழ விழமரம் தளர்ந்துமனநோயாளி ஆகவில்லைஅவ்வப்போதுபருவநிலை மாற்றத்தில்சில நாள் நிர்வாணமும்பல நாள்வழிந்தொழுகும் மேகமுமாய்அனிச்சை நிகழ்வாகின சில சமயம்கிளைகளில் சுளுக்கிருக்கும்அதற்கு யாரோ எறிந்தகுப்பை மூட்டையும்காரணமாய் இருக்கலாம்கால தாமத வானிலை அறிக்கையால்பல நேரம் காற்றும் கற்பழிக்கும் பூச்சிகளும் எறும்புகளும்குகையாய் மாற்றிக்கொள்ளும்வருடத்தில் என்றேனும்நேரமிருப்பின்மழையும் கொஞ்சம் முத்தமிடும்தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்இவை சலிப்பு தந்து தித்திக்கும் அவ்வப்போதுஉடலில் வலியும்முதுகுத்தண்டில் விரிசலும்என்றோ விழுந்த மின்னலில்உச்சந்தலைக் கருகலும்இவை ஏன் எனக்கு மட்டும் எனகேட்கத் தோன்றும் விழும் இலைக்கும்முறியும் தண்டுக்கும்விதிகள் ஏதுமில்லைஇயற்கையிலனைத்தும்மாற்றமெடுப்பவையே விதியின் ஓட்டத்தில் நிகழ்ந்தவைஎல்லாம் இயற்கையேகாய்ந்து விழுந்த இலைக்காகமரம் மரிக்கவில்லை ஓங்கிக் குட்டிய மின்னலுக்கும்நெடுக வளர்ந்த மரத்திற்கும்முன்பகை ஏதுமில்லைநிகழ்வுகள் நிச்சயமாயின்எவர் மீதும் பழி வீண்

சோப்பு வாசனை

சோப்பு வாசனை

சோப்பு வாசனை – சிறார் கதை நள்ளிரவு நேரம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா செல்வி, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள். திடீரென யாரோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு விழித்தாள். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள். அம்மாவும் அப்பாவும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள். ‘இந்த நேரத்தில் பாட்டுச் சத்தம் கேக்குதே! யாரா இருக்கும்? எங்கிருந்து சத்தம் வருகிறது?’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது குளியலறையில் இருந்து சத்தம் வருவது புரிந்தது. ‘இந்த நேரத்தில் யார் குளிக்கிறார்கள்? போய்ப் பார்ப்போம்’ என்று நினைத்தபடி குளியலறைப் பக்கம் சென்றாள் செல்வி. இப்போது சத்தம் இன்னும் தெளிவாகக் கேட்டது. மெல்ல கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். குளியலறையில் ‘லாலலா.. லாலால்லா லாலலல’ என்று பாடிக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தது கண்ணாடி சோப்பு. அதைப் பார்த்த சந்தன சோப்பு, “என்ன நண்பா.. இன்னிக்கு ஆட்டமெல்லாம் பயங்கரமா இருக்கு? என்ன விசயம்?” என்று கேட்டது. “நான் இன்னிக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். அதான் நடனம் ஆடுறேன். வா நீயும் ஆடு” என்றது கண்ணாடி சோப்பு.   “எதுக்கு இவ்வளவு சந்தோசம்? எனக்கும் சொன்னா நானும் ஆடுவேன்” என்றது சந்தன சோப்பு. “இன்னைக்கு இந்த வீட்ல தண்ணி வரல. அதான் கொண்டாட்டமா இருக்கேன்.” கண்ணாடி சோப்பு பதில் சொன்னது. “எனக்குப் புரியல. அதுக்கும் உன் ஆட்டத்துக்கும் என்ன தொடர்பு?” சந்தேகத்துடன் கேட்டது சந்தன சோப்பு. “அட மக்கு.. தண்ணி வரலைன்னா என்ன நடக்கும்? இந்த வீட்டுல இருக்கறவங்க யாரும் கை கழுவ முடியாது. குளிக்க முடியாது. அப்போ அவங்க நம்மைப் பயன்படுத்த மாட்டாங்க. நாமும் தேயாம, கரையாம அப்படியே அழகா இருப்போம், இல்லையா? வா ரெண்டு பேரும் சேர்ந்து இதைக் கொண்டாடுவோம்..” என்று சொல்லிவிட்டு, “லாலலா.. லா.. லாலலா..” என்று பாடியபடி தன்னுடைய ஆட்டத்தைத் தொடர்ந்தது கண்ணாடி சோப்பு. இதைக் கேட்ட சந்தன சோப்பு, “இது ரொம்ப தப்பு.. இப்படி யோசிக்காத..” என்றது. “உனக்குப் பிடிக்கலைன்னா போ. இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கே தண்ணி வராது. அதுவரைக்கும் ஜாலிதான்” என்றது கண்ணாடி சோப்பு. ‘தான் காண்பது கனவா அல்லது நனவா’ என்ற சந்தேகத்துடன் செல்வி பாப்பா திரும்பி வந்து படுத்துக்கொண்டாள். காலையில் எழுந்தவுடன் இதை அப்பா அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். பொழுது விடிந்தது. அன்று விடுமுறை நாள் என்பதால் செல்வியின் அப்பாவும் அம்மாவும் பரபரப்பு எதுவும் இல்லாமல் நிதானமாக எழுந்துகொண்டார்கள். சிறிது நேரம் கழித்து செல்வி பாப்பாவை எழுப்பினார் அப்பா. “செல்வி கண்ணு.. எழுந்திருடா.. இன்னைக்கு நாம எங்கே போகப் போறோம் தெரியுமா?” என்றார். கண் விழித்த செல்வி, “தெரியலையேப்பா.. நீங்களே சொல்லுங்க..” என்றாள் படுக்கையை மடித்து வைத்துக்கொண்டே. “பக்கத்து ஊர்ல சிலர் பள்ளம் தோண்டும்போது, நம்ம ஊருக்கு தண்ணி வர்ற குழாயை உடைச்சுட்டாங்களாம். அதைச் சரி செய்யுற வரைக்கும் நம்ம ஊருக்குத் தண்ணி வராதாம்” என்றார். செல்விக்கு நேற்று இரவு நடந்தது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. அப்பா தொடர்ந்து சொன்னார். “தண்ணி லாரி வரச் சொல்லி இருக்கோம். ஆனா அவங்களும் நாளைக்குதான் வருவாங்களாம்” என்றார். “அச்சச்சோ.. அப்படின்னா நாம எப்படிப்பா குளிக்கிறது?” என்றாள் செல்வி. “அதனாலதான்.. நாம இன்னைக்கு..” என்று சொல்லி நிறுத்தினார். “அப்பா சொல்லுங்க.. அதனால.. நாம இன்னைக்கு..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் செல்வி. “பக்கத்துத் தோட்டத்தில் இருக்கிற பம்ப் செட்டுக்கு குளிக்கப் போறோம்.. நீ போய் சோப்பு எடுத்துட்டு சீக்கிரம் வா..” என்றார் அப்பா. குளியலறையில் இருந்து இதைக் கேட்ட கண்ணாடி சோப்பு திடுக்கிட்டது. “குளியலறையில் வரும் தண்ணீரின் வேகத்தையே நம்மால் தாங்க முடியாதே.. பம்ப் செட் வேகத்தை எப்படித் தாங்கப் போகிறோம்? நாம ஒரே நாளில் முழுமையா கரைஞ்சு அழிந்து போயிடுவோம்” என்று சொல்லிப் புலம்பியது. இதைக் கேட்ட சந்தன சோப்பு சிரித்துக்கொண்டே, “பார்த்தாயா.. தண்ணீர் இல்லைன்னா ஜாலியா இருக்கலாம்னு நீ நினைச்ச. ஆனா இப்போ இன்னும் அதிகமான தண்ணீரைச் சமாளிக்கணும். ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ.. தண்ணி இருக்கறதாலாதான் மனிதர்கள் நம்மை உருவாக்கறாங்க. வாங்கிப் பயன்படுத்தறாங்க. நமது வேலையே தண்ணீரில் கரைந்து மனிதர்களை சுத்தமா வச்சுக்கறதுதான். அதுமட்டும் இல்லாம, ‘சுத்தம் சோறு போடும்’ அப்படின்னு ஒரு பழமொழியே இருக்கு. மனிதர்களைச் சுத்தமா வச்சுக்கறதுதான் நம்ம வேலை. நமக்கான அந்த வேலையைச் செய்ய நாம தயங்கக்கூடாது. தண்ணீர் இல்லைன்னா நமக்கு இங்கே வேலையே இல்லை. இது உனக்கும் எனக்கும் மட்டும் இல்ல. தண்ணி இல்லைன்னா மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் எதுவுமே இந்த பூமியில் வாழ முடியாது. ஆனா இதைப் புரிஞ்சுக்காத பலர் தண்ணீரை வீணாக்கிட்டு பின்னாடி கஷ்டப்படறாங்க. அதனாலதான் திருவள்ளுவர் தாத்தா, ‘நீரின்றி அமையாது உலகு’ அப்படின்னு சொல்லி இருக்கார்” என்று கூறி முடித்தது.    “நல்லா புரிஞ்சுகிட்டேன். நாம எல்லாருமே நமக்கான வேலையைச் செய்யத் தயங்கக்கூடாது. இனி என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சிரித்துக்கொண்டே சொன்னது கண்ணாடி சோப்பு. அப்போது குளியலறைக்கு வந்த செல்வி பாப்பா, சோப்புகளைத் தூக்கிக்கொண்டு பம்ப் செட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள். தாங்களும் பம்ப் செட்டில் குளிக்கப்போகும் மகிழ்ச்சியோடு சோப்புகளும் செல்வியுடன் சேர்ந்து ஓடின.